Last Updated : 01 Feb, 2014 12:00 AM

 

Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM

அனுஷ்கா ஷங்கரின் சிதார் அலை

இந்திய சங்கீத மேதை ரவி ஷங்கரின் சிதார் வாசிப்பு இந்திய சங்கீதத்திற்கு உலக் அங்கீகாரத்தைத் தேடித் தந்தது. அவர் பீட்டில்ஸ் (BEATLES) ஜார்ஜ் ஹாரிஸன் என்ற உலக சங்கீத மேதைகளுக்கெல்லாம் சிதார் வாசிக்கக் கற்றுக்கொடுத்தவர். அவரிடம் இசைஞானம் பெற்ற அவரது மகள் அனுஷ்கா ஷங்கர் சமீபத்தில் சர் முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கில் ரசிகர்களுக்கு அதே ரவி ஷங்கர் பாணியில் சிதாரில் இசை விருந்தளித்தார். அரங்கம் நிரம்பி வழிந்தது. ரவி ஷங்கரின் சங்கீதத்தின் சிறு சாயல் இருந்தாலும் ரசிகர்களின் கர கோஷம் பலமாக இருந்தது. இந்த இசை நிகழ்ச்சியை தி ஹிண்டு நாளிதழ் ஏற்பாடு செய்திருந்தது.

அனுஷ்கா ஷங்கர் உலக அளவில் பல புதிய சங்கீத பரிச்சார்த்தங்களைச் செய்து வருகிறார். அவர் தந்தையின் பல பாடல்களை இன்னிசையாக சிதாரில் வாசித்தது பண்டிட் ரவி ஷங்கரை நினைவூட்டும்படி இருந்தது. சரளமாக வாசிக்கும் அனுஷ்கா, ராகங்களை அவர் தந்தையைப் போல் இன்னும் விஸ்தாரமாகவும், ஆழத்துடனும் அளித்திருந்தால் அவரை ரவி ஷங்கரின் பிரதிபலிப்பாகக் கூறியிருக்கலாம்.

அன்றைய கச்சேரி முழுவதும் அனுஷ்கா இந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம் இவை இரண்டையும் இணைத்து சிதார் இசைத்தார். ஷெனாயில் சஞ்சீவ் ஷங்கர், தபலா வாசித்த தன்மை போஸ், மிருதங்கத்தில் பிரசன்னா தேவராஜா, மற்றும் புல்லாங்குழலில் ரவிச்சந்திர குலூர் இவருடன் கூட்டுச் சேர்ந்தனர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து வாசித்தபோது எழுந்த இசை அனுபவத்தில் சங்கீத ரசிகர்கள் திளைத்தனர். தன்மை போஸின் தபேலாவும், பிரசன்னா தேவராஜின் மிருதங்கமும் மேலும் கச்சேரிக்குச் சிறப்பைச் சேர்த்தன.

இனிய மாலை ராகம் ஹிந்துஸ்தானி பூர்ய தநா. இதில் மிகச் சிறிய ஆலாபணை, பின் இரண்டு கத் (ஹிந்துஸ்தானி பாடல்) என ஆரம்பித்தார் அனுஷ்கா. வேகமான சங்கதிகளில் அவரின் விரல்கள் சிதாரில் விளையாடின.

அடுத்து கர்நாடக ராகமான சாருகேசி. இது அழகாக அமைந்தது. அதற்குக் காரணம் அது ரவி ஷங்கர் இயற்றிய பாடல். அந்தக் காலத்திலேயே வடக்கத்திய இசையும், தெற்கத்திய இசையும் மிகவும் உயர்ந்தவை என்றுணர்ந்தவர் ரவி ஷங்கர் என்பதை இது காட்டியது.

சாருகேசி பாடலை நேர்த்தியாக முடித்த அனுஷ்கா, ‘ரகுவம்ச சுதா’ என்னும் கதனகுதூகல ராக பாடலை எடுத்தபோது புல்லாங்குழலும் மிருதங்கமும் கைகொடுத்தன. இதைக் கேட்ட ரசிகர்களுக்கும் குதூகலம்தான்.

இசை மேதை ரவி ஷங்கர் பல ராகங்களை இயற்றியவர். இதனால் அவரின் புகழ் மேலும் சிறந்து விளங்குகிறது. அவர் இயற்றிய ராகங்கள்

‘ஜனசன்மோதினி’ மற்றும் ‘பஞ்சம் சே காரா’ இவ்விரண்டு ராகங்களிலும் அனுஷ்கா அடுத்தடுத்து பாடல்களை சுருதி சுத்தமாக வாசிக்க, அவரின் விரல்கள் தந்திகளை நேர்த்தியாகக் கையாண்டன. தபேலா, மிருதங்கம் என வடக்கும், தெற்கும் மோதிய தனி ஆவர்த்தனத்தில் தன்மை போஸும், பிரசன்னா தேவராஜாவும் பிரமாதப்படுத்தினர்.

இந்தக் கச்சேரி இசை மேதை ரவி ஷங்கரை நினைவுகூறும் விதமாக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x