Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM

கலந்துரையாடல் - சபாக்களும் சங்கீதமும்

சென்னை மியூசிக் அகாடமியில், காலை நேர செயல் முறை விளக்க நிகழ்ச்சிகளில் சபா நடத்துபவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. எப்போதும் கலைஞர்களை கீழிருந்து மேல் ஏற்றிவிடும் சபாத் தலைவர்கள் மேடை ஏறி தாங்கள் சபா நடத்துவதில் எதிர்நோக்கும் கஷ்டங்களைப் பற்றி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளியின் தலைமையில் பேசினார்கள். முதலில் பேசிய முரளி, அகாடமி செயல்படும் முறையைப் பற்றி விளக்கினார். சமீபத்தில் ஒரு நட்சத்திர அந்தஸ்து உள்ள கலைஞரின் குற்றச்சாட்டிற்கு எதிராய், சங்கீத கலாநிதிப் பட்டம், எப்போதும் ஜாதி, மத பேதம் இன்றி வழங்கப்படுகிறது என்பதைத் தெரிவித்தார்.

அடுத்துப் பேசிய நாரத கான சபாவின் செயலர் கிருஷ்ணஸ்வாமி, மைக்கை ஒட்டிக் கலைஞர்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார்.

தங்களுடைய சொந்த மைக் ஸிஸ்டத்தைக் கொண்டுவந்து, அதை அதிக சப்தத்துடன் வைத்து இசையை ஓசையாய் மாற்றி, ரசிகர்களை இன்னலுக்கு உள்ளாக்குகிறார்கள் என்றார். பல லட்சம் செலவழித்து ஒலிபெருக்கி சிஸ்டங்களை நவீனப்படுத்தினாலும், அதில் நம்பிக்கை இல்லாமல், தங்களுடைய சிஸ்டத்தைக் கொண்டுவருகிறார்கள் என்பதை நாதோபாசனா சபையை நடத்தும் ஸ்ரீநிவாசனும் ஸ்ரீ கிருஷ்ண கான சபாவின் தலைவர் திரு ஒய். பிரபுவும் குறிப்பிட்டார்கள்.

15 நிமிடங்களுக்கு முன்பு வந்தால் மைக் சிஸ்டத்தை பாலன்ஸ் செய்ய முடியும். நேரத்திற்கு வராமல் கடைசி நிமிடத்தில் வருவதால் பல பிரச்சினைகள் வருகின்றன என்றார் பிரபு. நாதோபாசனாவின் செயலர் ஸ்ரீநிவாசன், தங்களுக்கு சொந்த இடம் இல்லாததால் வெவ்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை வழங்க வேண்டியுள்ளது.

அத்க பண வசதி இல்லாமல் இருப்பினும், கலைஞர்களுக்கு நல்ல சன்மானம் அளிப்பதாகத் தெரிவித்தார்.

ஜூனியர் கலைஞர்களுக்கு அதிக சன்மானம் கொடுப்பதாகச் சொன்ன பிரபு அதற்கான காரணத்தையும் தெரிவித்தார். அப்போதுதான் இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்வதற்கான தைரியம் அவர்களுக்கு வரும் என்று சொன்னார்.

இசை விழா நடத்துவதில் மியூசிக் அகாடமி முன்மாதிரியாய் இருப்பதாகக் கிருஷ்ணஸ்வாமி கூறினார். க்ளீவ்லேண்ட் சுந்தரம், கலைஞர்களிடமிருந்து பரிபூரணமான ஒத்துழைப்புக் கிடைப்பதாய்க் குறிப்பிட்டார். தன்னார்வலர்களின் ஒத்துழைப்பால் அமெரிக்காவில் இசை விழாவை நடத்துவதாகவும், சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர்களே எந்த சன்மானத்தையும் எதிர்பார்க்காமல் உழைப்பதையும் குறிப்பிட்டார். பழைய பாடாந்தரத்தைப் போற்றிப் பாதுகாக்கவே இங்கே உள்ள பி.எஸ். நாராயணஸ்வாமி, வேதவல்லி போன்றவர்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளுக்கு இசையை புகட்டி க்ளீவ்லேண்ட் இசை விழாவில் அவர்களை பாட வைப்பதைப் பற்றி விளக்கினார்.

சிங்கப்பூரில் சிபா என்ற பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தும் காசிநாதன், இங்கிருந்து இசையைக் கற்றுக் கொடுக்க இசை ஆசிரியர்களை அழைத்துப் போய்ச் சொல்லிக் கொடுத்து, இங்கிருந்து வித்வான்களை அழைத்துப்போய் அவர்களுக்குப் பரீட்சை வைத்து கச்சேரிக்கு தயார் செய்த பின், அவர்கள் சிங்கப்பூரில் இருக்காமல், சென்னைக்கு வந்துவிடுகின்றனர்; அதனால் இசை ஆசிரியர்களோ, கச்சேரி செய்பவர்களோ அங்கு இருப்பதில்லை என்பது ஒரு குறைப்பாடு என்று கூறினார்.

பல கிளைகள் இருக்கும் பாரதீய வித்யா பவனில் பெரிதாக எந்தக் கஷ்டமும் இல்லை என்றார் பவனின் சென்னைக் கிளையின் முதல்வர் ராமஸ்வாமி. ஒலிபெருக்கி தொடர்பான இன்னல்கள் இருந்ததாகவும் அவற்றைச் சரிப்படுத்தியாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

அகாடமியின் செயலர் கிருஷ்ணகுமார், கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் இருக்கும் ஒளிவு மறைவு இல்லாத நிலைமை பற்றிக் குறிப்பிட்டார். உயர் தரமான சங்கீதத்தை வழங்குவதே அகாடமியின் இலக்கு என்பதையும் குறிப்பிட்டார்.

இசையும் கலைஞர்களும் மக்களைச் சென்றுசேர வழிசெய்யும் அரங்கங்கள், அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய இந்தப் பகிர்தல் மிகவும் அவசியமானது என்பதில் ஐயமில்லை.

இசைக் கலைஞர்களும் கலந்துகொண்டிருந்தால் இந்த அமர்வு மேலும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

கலந்துரையாடல் நடந்த இடம்: சென்னை மியூசிக் அகாடமி 18.12.2013 காலை 9மணி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x