Published : 12 Oct 2014 12:46 PM
Last Updated : 12 Oct 2014 12:46 PM
எழுத்தும், ஓவியமும் ஒன்றுக்கொன்று அழகு சேர்க்கும் அரிய கலைகளாகும். அரிதாக இந்த இரண்டு கலைகளையும் ஒரு சேரபெற்றவர்தான் ஓவியரும் எழுத்தாளருமான மனோகர் தேவதாஸ். தன் வாழ்வுலக அனுபவங்களை ஒரு பேனாவால் இலக்கியமாக வடித்துக் கொண்டே மற்றொரு பேனாவால் கோட்டுச் சித்திரங்களாக மாற்றுகிறார். கோட்டுச் சித்திரம் ஒரு அபூர்வக் கலை. அது வாய்க்கப் பெற்றவர் ஓவியர் மனோகர் தேவதாஸ்.
வண்ணம் தோய்ந்த தூரிகையில் ஓர் ஓவியத்தைத் தீட்டுவதும் கருப்பு மை நிரப்பப்பட்ட பேனாவின் மெல்லிய நுனி கொண்டு ஓவியம் உருவாக்குவதும் ஒன்றல்ல. தூரிகையின் ஒரு வீச்சு ஓவியத்துக்கு உயிரூட்ட முடியும். அத்தனை அடர்த்தி கொண்ட காட்சிப் படிமத்தைக் கோட்டுச் சித்திரத்தில் உருவாக்க பேனா முனையானது பல கோடி முறை தொட்டும், தொடாமலும் சித்திரத்தோடு உறவாட வேண்டும்.
மனதில் ஓவியத்தைக் கோப்பவர்
தன் ஓவியங்களால் அனைவரையும் பிரமிக்க வைக்கும் இந்த அபூர்வ மனிதர் பார்வைக் குறைபாடு உள்ளவர். அவரது வலது கண் முழுப் பார்வையையும் இழந்துவிட்டது. இடது கண்ணுக்கோ குகைப் பார்வை. அதாவது, அவர் வரையும் பரப்பில் அதிகபட்சம் ஒரு ரூபாய் அளவிலான பகுதியையே அவரால் பார்க்க முடியும். அவர் வரைந்த ஓவியங் களையே அவரால் முழுவதுமாகப் பார்க்க முடியாது. சிறு சிறு பகுதிகளாகப் பார்த்து, பார்த்து மனதுக்குள் கோத்துதான் முழு உருவமாகக் காண முடியும்.
சில மணித் துளிகள்
பகல் வெளிச்சத்தில் அவரால் எதையுமே பார்க்க முடியாது. இரவும் பகலும் சந்திக்கும் சில நாழிகைகளில் மட்டுமே தன் இயல்பான பார்வை கொண்டு இவ்வுலகைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் மனோகர். ஆனால் அந்த மணித் துளிகளில், தான் காணும் காட்சிகளை மனதில் புகைப்படமாகப் பதிந்துகொண்டு இரவில் ஓவியமாக மாற்றுகிறார்.
இரவு வேளையில் ஓவியம் தீட்டும் பலகைக்கு மிக அருகில் மின்சார விளக்கை வைத்துக்கொண்டு, 20 மடங்கு பெரிதுபடுத்திக் காட்டும் பூதக் கண்ணாடியைத் தன் இடது கண்ணில் பொருத்திக்கொண்டுதான் 800-க்கும் அதிகமான படங்களை வரைந்திருக்கிறார், இன்றும் வரைந்துகொண்டிருக்கிறார்.
கருப்பு-வெள்ளை ஓவியத்தின் சவால்கள்
“பார்வை குன்றத் தொடங்கியதும் நிறக்குருட்டுத் தன்மையும் ஏற்பட்டது. வண்ணங்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் தெரியாத நிலையில் கருப்பு - வெள்ளை, மற்றும் கருப்பு - வெள்ளை கலந்த சாம்பல் நிறம் இவற்றை மட்டும் கொண்டு ஓவியங்கள் உருவாக்க முடிவெடுத்தேன். ஆனால் வண்ணங்கள் ஏற்படுத்தும் அத்தனை அடுக்குகளை வெறும் கருப்பு - வெள்ளை கொண்டு உருவாக்கும் சவாலைச் சந்திக்கத் தொடங்கினேன்” என்று கூறும் மனோகரின் ஓவியங்கள் அசாத்தியமானவை.
மனோகர் தேவதாஸ் இன்றும் தொடர்ந்து எழுதவும், வரையவும் செய்கிறார். ஏன்? தன் ஊர், மனைவி இருவர் மீதும் கொண்ட காதல் தான் பார்வை குன்றிய நிலையிலும் தன்னை எழுதவும், வரையவும் வைக்கின்றன என்கிறார்.
“என் பார்வை முற்றிலுமாகப் பறிபோவதற்கு முன்னர் என் ஊர் மதுரை பற்றிய நினைவுகளை எழுத்திலும், ஓவியத்திலும் பதிக்க வேண்டும் என நானும், என் காதல் மனைவி மஹிமாவும் முடிவெடுத்தோம். அப்படித்தான் ‘எனது மதுரை நினைவுகள்’ புத்தகம் உருவானது” என்கிறார் புன்முறுவலுடன்.
இப்படித் தொடங்கிய கலைப் பயணத்தில் நான்கு புத்தங்களையும், 800-க்கும் மேற்பட்ட கோட்டுச் சித்திரங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள் மனோகர் தேவதாஸ் மற்றும் அவர் மனைவி மஹிமா. நம் பார்வையில் மனோகர் மட்டும்தான் ஓவியர் - எழுத்தாளர் என்றாலும் அவரைப் பொறுத்தவரை தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் அவர் காதல் மனைவி மஹிமா கலந்திருக்கிறார்.
35 வருடங்களுக்கு முன்பே ஒரு விபத்தில் தன் கழுத்துக்குக் கீழே செயலிழந்து போன நிலைக்குத் தள்ளப்பட்ட மஹிமா துளியும் தளராமல், உற்சாகம், தன்னம்பிக்கை, துளிர் காதல் இவை ஒருசேர, கண் பார்வை குன்றிய தன் கணவர் மனோகருக்குப் பக்கபலமாக இருந்திருக்கிறார். அதே போன்ற பரஸ்பர அன்பை மஹிமாவிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் மனோகர்.
“என் கண் பார்வை குன்றியதும், மஹிமா சக்கர நாற்காலியில் அமர்ந்ததும், எங்கள் முழு கவனமும் எங்கள் படைப்பின் மீதுதான் இருந்தது. நான் இரவு முழுக்க வரையும்போது மஹிமா எங்கள் இருவருக்கும் விருப்பமான புத்தகங்கள், பத்திரிகைகள், நாவல்கள் என அனைத்தையும் சத்தமாக வாசிப்பாள். நாங்கள் இருவரும் ஒருமித்து ரசித்து, எங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்வோம்” எனப் பல அனுபவங்களை நகைச்சுவை இழையோட இனிமையாக வெளிப்படுத்துகிறார் இந்த மனிதர்.
ஒவ்வொரு ஓவியத்தை விளக்கும்போதும் “மஹிமாவும், நானும்” என்ற வார்த்தைகளை உச்சரிக்கத் தவறவில்லை அவர் உதடுகள். இப்படி அவர் நெகிழ்ந்து, உருகிக் காதலிக்கும் அவர் மனைவி இப்போது இந்தப் பூமியில் இல்லை.
கடைசி வண்ண ஓவியம்
“மஹிமா இறந்த பிறகு சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் இவை இரண்டையும் வண்ணமயமான வாட்டர் கலர் ஓவியமாகத் தீட்டினேன். அவைதான் நான் வரைந்த கடைசி வண்ண ஓவியங்கள். அதில் கிடைத்த மொத்த நன்கொடையும் அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு அவள் ஞாபகார்த்தமாகக் கொடுத்தேன்” என்கிறார்.
பிறந்து, வளர்ந்து, நண்பர்களோடு ஆடிப், பாடி, விளையாடி மகிழ்ச்சியில் திளைத்த தன் ஊர் மதுரை பற்றிய நினைவுகளை எழுத்திலும், ஓவியத்திலும் கோத்து எழுதப்பட்ட மனோகர் தேவதாஸின் ‘மதுரை நினைவுகள்’ புத்தகம் அழகியதோர் கோட்டுச் சித்திரப் பெட்டகம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT