Published : 01 Oct 2013 04:07 PM
Last Updated : 01 Oct 2013 04:07 PM
தங்கம் ஒரு ஆபரணம் என்ற நிலையில் இருந்து இன்று ஒரு முதலீட்டுப் பொருளாகி மாறிவிட்டது. பொதுமக்களின் தங்க முதலீட்டை குறைக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு உத்திகளைக் கையாண்ட போதிலும் தங்கத்தின் மீதான முதலீடு மோகம் குறைந்தபாடில்லை.
இரு தினங்களுக்கு ஒருமுறை ஏற்ற இறக்கம் இருந்தும் அதன் மவுசு குறையவில்லை. அத்தகைய தங்கத்தைக் கொண்டு சில சாதனைகளை செய்யவேண்டும் என்ற ஆர்வத்துடன் 20 மில்லி கிராம் கை விசிறி, 40 மி.கி எடையுள்ள மோதிரம், 90 மி.கி மற்றும் 110 மி.கி. தாலி,140 மி.கி. மின்விசிறி, 30 மி.கி. அரிவாள், அதைத் தொடர்ந்து தற்போது 8 கிராமில் காதலின் நினைவுச் சின்னம் தாஜ்மகால் ஆகியவற்றை வடிவமைத்திருக்கிறார் சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் பொற்கொல்லர் தொழில் செய்யும் ஜெ.முத்துக்குமரன். தன் தந்தையுடன் சேர்ந்து நகை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
17 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் இவர் தன் வித்தியாசமான முயற்சி பற்றிக் கூறுகையில், “வழக்கமாகச் செய்யும் வேலையைத்தான் தினமும் செய்தாக வேண்டும். ஆனால், அதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். அந்த உணர்வின் வெளிப்பாடுதான் இந்த சின்னச் சின்ன தங்கச் சிற்பங்கள்.
8 கிராம் எடையில் தாஜ்மகால் செய்வது எளிதானது அல்ல. இதற்காக நான் எடுத்துக்கொண்ட காலம் 33 நாட்கள். இடைவிடாமல் இதில் ஈடுபட்டதால் மட்டுமே இதை முடிக்க முடிந்தது. 22 காரட் பவுனில் செய்ய முடியாது என்பதால் தாஜ்மகாலுக்கு 20 காரட் தங்கம் பயன்படுத்தினேன். 8 கிராம் எடையுள்ள இந்த தாஜ்மகால் செய்ய சேதாரம் மட்டுமே 3 கிராம்.
நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக பொற்கொல்லர்களுக்கு போறாத காலமாகிவிட்டது.இதனால் இத்தொழில் தற்போது நலிவுற்று வருகிறது. இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளின் மூலம் எங்களது தொழில் நுணுக்கங்களை வெளிப்படுத்திவருகிறோம்.
எனது வித்தியாசமான முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் புதுச்சேரி விஸ்வகர்மா சங்கத்தினர் விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளனர்.
எனது முயற்சியின் அடுத்தக் கட்டமாக சிதம்பரம் நடராஜ பெருமான் கோயிலை வடிவமைக்க இருக்கிறேன். பிரமிடு, ஈபிள் டவர் உள்ளிட்டவற்றையும் வடிவமைக்கவேண்டும் என்பது என் லட்சியம். தாஜ்மகால் சிற்பத்தைப் பொருத்தவரை, என் உழைப்புதான் அதன் விலை. அதன் மதிப்பு 3 மாதங்களுக்கு முன்பு ரூ.24 ஆயிரம். சிலர் வந்து அதை விலைக்குக் கேட்டார்கள், ஆறு மாதம் ஆகும் என்று கூறியுள்ளேன்” என்றார் முத்துக்குமரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT