Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM
பல வருடங்களுக்கு முன் ஒரு முறை சங்கீத உலகின் பிதாமகர் எனக் கருதப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அவர்களின் வீட்டில் கல்யாணம். சங்கீத வித்வானும் மதுரை மணி ஐயரின் மருமகனுமான டி.வி. சங்கரநாராயணன் அவர்களின் பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கச்சேரிக்கு சற்று முன்பு செம்மங்குடி சங்கரநாராயணனை அழைத்து “வராளி எல்லாம் பாடிக்கொண்டிருக்காதே,” என்று சொன்னார்.
அந்தக் காலத்தில் வராளி போன்ற விவாதி ராகங்கள் மங்கலகரமானவை அல்ல என்ற ஒரு கருத்து இருந்து வந்தது. சொல்லப்போனால் சங்கரநாராயணனே அதைப் பாடியிருப்பாரா என்பது சந்தேகம். பொதுவாக விவாதி ரகங்களில் ‘ரக்தி' இல்லை என்பதுதான் அவருடைய மாமா மதுரை மணி ஐயரின் கருத்தும்கூட.
விவாதி ராகம் என்றால் என்ன? எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ‘ஆள் மாறாட்டம்' போல ‘ஸ்வர மாறாட்டம்'. கர்னாடக சங்கீதத்தில் உள்ள ஏழு ஸ்வரங்களில் ‘ஸ', ‘ப' தவிர இதர ஐந்து ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் ‘மேல்' என்றும் ‘கீழ்' என்றும் பகுக்கப்படுகின்றன. இதில், ஒரே ஸ்வரத்தின் மேல் மற்றும் கீழ் பிரிவுகள் ஒரே ராகத்தில் அமைல்தால் அவற்றைப் பாடுவது கடினம். உதாரணமாக, ‘மேல் க', ‘கீழ் க' (அதாவது, காந்தாரம்) ஆகிய இரண்டும் ஒரே ராகத்தில் இடம் பெற்றால், ‘க', ‘க' வென்று பாடுவது சற்று குழப்பமாகத் தோன்றும். அப்படிப்பட்ட ரகங்களில் கீழ் ‘க' வின் பெயரை ‘ரீ ' என்று மாற்றி அமைக்கிறது சங்கீத சாஸ்திரம். இந்த மூன்றாவது ‘ரீ ' (சதுஸ்ருதி ரிஷபம்) ஒரு விவாதி ஸ்வரம். இப்படி நான்கு விவாதி ஸ்வரங்கள் உள்ளன. விவாதி ஸ்வரங்கள் இடம்பெறும் ராகங்கள் விவாதி ராகங்கள். இந்த விவாதி ஸ்வரத்திற்கும் அதற்கடுத்த ஸ்வரத்திற்கும் நடுவே உள்ள இடைவெளி மிகக் குறைவாக இருப்பதுதான் சங்கீதக்காரர்களுக்குத் தலைவலி.
கர்னாடக சங்கீதத்தின் 72 மேளகர்த்தா (அல்லது ‘தாய்') ரகங்களில் 40 விவாதி மேளங்கள். இவற்றிலிருந்து பிறக்கும் நூற்றுக்கணக்கான ஜன்ய ரகங்களும் விவாதி ராகங்கள். இந்த விவாதி ராகங்களைப் பாடக் கூடாது, பாடுவது மங்களகரம் அல்ல, விவாதி தோஷம் வந்து சேரும் என்பது ஒரு சிலரின் கருத்து. அந்தக் காலத்தைச் சேர்ந்த பெரும்பாலானோரிடம் அப்படிப்பட்ட கருத்து பரவியிருந்தது.
“யோவ்! தோஷமாவது மண்ணாங்கட்டியாவது ! அமங் கலகரமான ராகங்கள் என்றால் பெரியோர்கள் அவற்றைக் கையாண்டிருப்பர்களா ? ஏன், தியாகராஜா சுவாமிகள்கூட ஐந்து பஞ்ச ரத்ன கீர்த்தனங்களில் இரண்டு (நாட்டை, வராளி) விவாதி ரகங்களைப் பயன்படுத்தியிருக்கிறாரே,” என்பது எதிர்க் கருத்து.
இக்காலத்திலும் சிலர் ‘அமங்கலம்', ‘தோஷம்' என்றெ ல்லாம் நினைக்கா விட்டாலும், விவாதி ராகங்கள் விஸ்தாரமாகப் பாட இடம் தராதவை, அவற்றில் ‘உயிர்' இல்லை என்று பல சங்கீத வித்தகர்கள் கருதுவதுண்டு.
இந்த விவாதியைப் பற்றிய விவாதத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது போல அமைந்தது 2013ஆம் ஆண்டு சென்னை சங்கீதத் திருவிழா.
பிரபல சங்கீத மேதை ஜேசுதாஸ் ‘விவாதி வேண்டும்' என்கிற கட்சியைச் சேர்ந்தவர். முதல் மேளகர்தாவான கனகாங்கி என்ற விவாதி ராகம் கைக்குள் வர வேண்டும் என்று நான்கு ஆண்டுகள் பயிற்சி செய்தேன் என்று அடிக்கடி சொல்லுவார்.
இம்முறை சென்னை கல்சுரல் அகாடமியில் 36ஆம் மேளகர்த்தாவான சலநாட்டை ரகத்தை, அதன் லட்சணங்களை விளக்கி, பாடி, பிய்த்து உதறிவிட்டார். ஆலாபனை, கல்பனா ஸ்வரங்களைப் பாடி தூள் கிளப்பிவிட்டார்.
வீணை வித்வான் பி கண்ணன் வீணை. வேணு வயலின் (3V). கச்சேரியில் பாவனி என்ற விவாதி மேளத்தை எடுத்து ‘இப்படியும் ஒருவர் வாசிக்க முடியுமா' என்று வியக்கத்தக்க வகையில் கலக்கினார். அவருடன் புல்லாங்குழலில் சி.கே. பதஞ் சலியும், வயலினில் பாம்பே ஆனந்தும் சரிக்கு சரியாக வாசித்து பாவனியைச் சித்திரித்துக் காட்டினார்கள்.
‘வாகதீஸ்வரி' என்ற விவாதி ராகம் (34ஆவது மேளகர்த்தா) எப்படியோ ‘தோஷ' வலையிலிருந்து தப்பித்து இசை மேடைகளில் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு ராகம். சஞ்சய் சுப்ரமணியம் மியூசிக் அகாடமியிலும், உன்னிகிருஷ்ணன் கபாலி பைன் ஆர்ட்ஸ்லும், இந்தியன் பைன் ஆர்ட்ஸில் ஜேசுதாசும் வாகதீஸ்வரியை வடிவமைத்துக் காட்டினார்கள். மூவருமே தியாகராஜ சுவாமிகளின் பிரபலமான ‘பரமாத்முடு' என்ற பாடலைப் பாடினார்கள்.
மகாராஜபுரம் ஸ்ரீனிவாசன் சென்னை கல்சுரல் அகாதேம்யில் ‘கானமூர்த்தி' என்ற 3ஆவது மேளகர்தாவான விவாதி ராகத்தை ஒரு பிடி பிடித்தார்.
‘கானமூர்த்தே' என்று தியாகராஜ சுவாமிகள் இறைவனை இசை வடிவமாகக் கண்டு பாடிய பாடலை உள்ளம் குளிரப் பாடினார் ஸ்ரீனிவாசன்.
இதை எல்லாம் பார்க்கும்போது விவாதி ராகங்கள் விரிவாகப் பாட வாய்ப்பு அளிக்காதவை என்ற வாதம் நொறுங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. என்றாலும் கலைஞர்களுக்குள் இந்த விஷயத்தில் மாறுபட்ட அணுகுமுறைகள் நிலவத்தான் செய்கின்றன. பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணாவிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது அவர் இப்படிச் சொன்னார்:
“ஸ்வரங்கள் வெறும் குறிப்பான்கள் (ரெஃபரென்ஸ் பாயிண்ட்ஸ்). ஸ்வரங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியில் தான் இசைஞர்கள் தமது கற்பனையைப் படர விடுவார்கள். விவாதி ராகங்களில் அந்த இடைவெளி குறுகி இருக்கும்.
கற்பனைக்கு வழி இல்லாமல் சும்மா மேலும் கீழும் குரங்கைப்போல் ஓடுவது என்றால் எனக்கு அது பிடிக்காது”.
நடைமுறைக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கும் விவாதி ராகங்கள் இனிமையானவையா, காலத்தின் போக்கில் அடித்துக் கொண்டு போய்விடாமல் நிற்கக்கூடியவையா என்பது காலத்தால் நிர்ணயிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்றே தோன்றுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT