Published : 08 Feb 2014 12:23 PM
Last Updated : 08 Feb 2014 12:23 PM
தொன்மையான கட்டிடக் கலைக்குச் சொந்தக்காரர்கள் இந்தியர்கள். பிரமாண்டமான அரண்மனைகளை உருவாக்கியவர்கள். கோயில்களைக் கலை வடிவமாக்கியவர்கள். கருங்கற்களோடும் சுட்டக் கற்களோடும் சேர்ந்து இயற்கை மூலிகைப் பொருட்களை கலந்து அந்தக் காலத்தில் கட்டிடங்களை எழுப்பியவர்கள். ஆனால், இந்தியாவில் வெள்ளையர்கள் காலடி வைத்த பிறகு கட்டிடக் கலை மாறியது என்றே சொல்லலாம்.
கட்டிடம் கட்டுவதில் நமக்கெனப் பாரம்பரியமாக இருந்த நடைமுறைகள் பலவற்றை ஏற்க மறுத்தனர் வெள்ளையர்கள். காலம் காலமாக இந்தியர்கள் கடைபிடித்து வந்த கட்டிடக் கலையைத் தொழில்முறையற்றவை என அவர்கள் கருதினர்.
பிரிட்டனில் அவர்கள் கலாச்சாரத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை இங்கே அமல்படுத்தினர். இதன் காரணமாக இந்தியாவில் காலம்காலமாகப் பின்பற்றப்பட்ட கட்டுமான அறிவை நம்மவர்கள் இழந்தார்கள். அவற்றில் ஒன்று கட்டிட அஸ்திவாரம் பற்றி நம்மவர்கள் பின்பற்றிய கணக்குகள். அந்தப் பழக்கம் தற்போது புழக்கத்திலேயே இல்லை.
ஒரு வீட்டைத் தாங்கி நிற்பது கட்டுமானப் பொருட்கள் என நாம் நினைத்தால் தவறு. வலிமையான அஸ்திவாரம்தான் ஒரு கட்டிடத்தைத் தாங்கி நிற்கிறது. இந்த அஸ்திவாரத்தில் மண்ணின் தன்மையும் அடங்கியிருக்கிறது. மண்ணின் தன்மைக்கு ஏற்பதான கட்டிடங்களை எழுப்ப முடியும். இந்தியாவில் உள்ள வெவ்வேறு பகுதிகளிலும் நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் மண்ணின் இயல்புக்கேற்பவே அஸ்திவாரம் பற்றிய கணக்குகள் உள்ளன.
நான்கு முதல் 6 அங்குல விட்டமுள்ள சின்னச் சின்னக் கழிகளைக் கொண்டு ஒரு அடி இடைவெளியில் நட்டு அஸ்திவாரம் தோண்டுவதே பாரம்பரியப் பழக்கம். அதில் மூங்கில் கழிகளைப் பூச்சி அரிக்காத விதத்தில் பாடம் செய்வார்கள். அவற்றின் மேல் பகுதியைத் துணியால் கட்டுவார்கள். ஏனெனில் நிலத்தில் சுத்தியால் அடித்துப் பதிக்கும்போது அந்தக் கழிகள் உடையாமல் இருக்க இந்த ஏற்பாடு.
மண் இளகி, இறுகப் பிடிக்கும் வரை கழிகளைச் சுத்தியால் அடிப்பார்கள். தற்போது போடப்படும் கான்கிரீட் அடித்தளம் கட்டும் முறைக்குச் சமமான நடைமுறையே இது. இந்தக் கழிகளுக்கு நடுவில் கற்கலவைகளையும், செங்கற்களையும் உள்ளூர் பொருட்களையும் போட்டு அடித்தளம் அமைப்பதே பாரம்பரிய முறை.
ஒரு கட்டிடம் எவ்வளவு பாரம் தாங்கும் என்பதை இப்படிக் கணக்குப் பார்த்துக் கட்டினார்கள் நம் மூதாதையர்கள். கட்டிடத்தின் சுமையை அஸ்திவாரம் எவ்வளவு தாங்கும் என்பதைக் கண்டறிவதில் பல சிரமங்கள் இருந்தாலும் கட்டிடக் கலை என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் இந்த முறையை நம் மூதாதையர்கள் பின்பற்றினர். ஆனால், நாம் கட்டும் கட்டிடங்களின் பாணி வெள்ளையர்களுக்கு வேடிக்கையாகத் தெரிந்தது.
அதற்கு மாற்றாக மேற்கத்தியக் கட்டிடக் கலை பாணியை இந்தியாவில் அவர்கள் தொடங்கி வைத்தனர். கட்டுமானக் கற்களை வைத்துக் கட்டிடங்கள் கட்டுவதை அறிமுகப்படுத்தினர். அடுக்கடுக்காகக் கற்களை அடுக்கி, அகலமான அடுக்கிலிருந்து மேலேறும் அடுக்குகளின் அகலம் குறையுமாறு கட்டிடங்களை அமைத்தனர். சுவர் சீராகத் தெரிய வேண்டும் என்பதற்காகச் சுண்ணாம்பைப் பூசினர்.
இப்படித்தான் மேற்கத்தியக் கட்டிடக் கலை இந்தியாவில் அறிமுகமானது. இப்போது நாம் வசிக்கும் வீடுகள் அனைத்தும் அந்தப் பாணியில் ஆனவைதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT