Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM

மீண்டும் காணலாம் அந்தப் பானைகளை..!

பொங்கல் நாள் என்றால் அதற்கு ஒரு தனிநிறம் உண்டு. முதலில் அந்தத் தை மாதத்துப் பனியின் வெண்படலம். அப்புறம் மஞ்சள்கொத்து, செங்கரும்பு, பச்சை வாழை, பனங்கிழங்கு; இவையெல்லாம் நம் கிராமத்து இளம்பெண்களின் வனப்புகளோடு உறவாடுவதால் உண்டான வானவில்லின் வண்ணக்கலவை; காளைகளோடு காளைகளாக தார்ப்பாய்ச்சி மல்லுகட்டும் நம்ம ஊர் இளங்காளைகள்! வெண்பொங்கல், சக்கரைப் பொங்கல், பற்றாக்குறையைத் தீர்க்க பாயாசம்!,

கடைசியில் தியேட்டரில் கூடிக் குமைந்து எம்.ஜி.ஆர் படத்துக்கோ சிவாஜி படத்துக்கோ டிக்கட் வாங்கத் துடிதுடிக்கிற பரபரப்பான நரம்புத் தெள்ளல்கள்..... ஆஹா கலகலப்பானதும் வித்தியாசமானதுமான ஒரு உலகத்தைத்தான் நாம் அனுபவித்து வந்திருக்கிறோம். அதற்காக இப்போது நாம் ஓய்ந்துபோய்விட்டோம் என்று அர்த்தமல்ல. நம் வேளாண்மையை உலகமய நுகத்தடியில் கட்டிவிட்டபின் இவையெல்லாம் நம்மிடம் விடைபெறத் துடிக்கின்றன. இது நம்மை மருளவைக்கும் செய்தி.

பழையன கழிதல் வேண்டும்தானே என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு, நம்முடைய கலாச்சாரங்கள் அதன் ஆணிவேரோடு பறிபோகின்றன.

நகரும் நகர்மய வாழ்க்கை என நம் வாழ்க்கை வெகுதூரம் புரண்டுவிட்டாலும் பொங்கல் என்றால் அதை நமது கிராமத்து மண்ணின்மீது விழுந்து புரண்டு அதன் புழுதி படிய எழுந்து நிற்பது. அந்தக் கோலத்துடன் ஒரே ஒரு காளைமாட்டையாவது ஓடித் துரத்தி அதன் கொம்புகளில் கட்டிவிடப்படும் துட்டுக்களையும் கரும்புகளையும் பனங்கிழங்குகளையும் பறித்தெடுக்காமல் எப்படிப் பொங்கலின் உயிர்நாதத்தை நாம் சுவாசிக்க முடியும்?

எங்கள் சிங்கம்பத்து கிராமத்தின் தென்பகுதியில் இரண்டு தெருக்கள் மட்டும் பசுமைத் தேவதையின் அரவணைப்பில் மூழ்கிப் போய்க் கிடந்தன. நடுத்தெருவில் பொங்கல் பானை வழிவதைக் கண்குளிரப் பார்த்திருப்போம். அப்படியே தெற்குத் தெரு போய்விட்டால் சரிபாதி வீடுகளின்முன் நடுத்தெருவில் பொங்கல் பானையை வைத்துக்கொண்டு மொத்தக் குடும்பமும் உட்கார்ந்திருக்கும். பொங்கலுக்கு என்று தாராளமாகச் சமைத்ததை அவர்கள் மட்டுமே எப்படி உண்ண முடியும்? வீடுகள்தோறும் படையல்கள் வந்துசேரும்.

அங்கே அப்படிப் பொங்கல் என்றால் எங்கள் வீடுகளிலும் உள்ளிருந்தே உணவுப் பதார்த்தங்கள் தயாராகிவிடும். இங்கும் வகையான சமையல்கள்தாம். எப்படியோ ஒரு புரிதல்; காய்கறிகள் பலப்பலவாய் அவரவர் வருமான விகிதத்திற்கேற்ப! தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்று தமிழ்ச் சமூகத்திற்கான பங்களிப்பு எல்லோருக்கும் உண்டல்லவா? சாதியையும் மதத்தையும் பிரித்துவிட்டு எல்லோரும் சேர்ந்து கொண்டாட கிடைத்த திருநாளினை ஒற்றைப்படையாக நின்று எப்படி விலகி நிற்பது?

அது ஒரு பொற்காலம் என்றறிய ஒன்றே ஒன்றைச் சொன்னால் போதும்; நம்புவதற்குக் கடினம் என்றாலும் உண்மையைச் சொல்லாமல் மறைக்க முடியாது, அதாவது அந்தக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அப்படியும் இப்படியுமாக அரையடிக்கு மணலைச் சற்றே ஒதுக்கிவிட்டால் போதும். அமுதபானமாகக் குடித்துவிடலாம். எல்லாவகையான புழக்கத்திற்கும் தெளிந்த நீர் அங்கங்கே ஓடிக்கொண்டிருந்ததால் கை, கால்களின் சுத்தம் பேணத் தடைகளில்லை. இரண்டு மூன்று நாள்களுக்குப் பொங்கல்நாளின் உணவு வகைகளை அங்கிருந்து உண்டபடி இருந்தாலும் அது தீராத சங்கதியாக இருக்கும்.

ஆனால் திருச்செந்தூர் போனபோது ஊரின் ஒட்டுமொத்த மாணவர்களும் இளைஞர்களும் மாட்டுப் பொங்கல் அன்று கடற்கரையில் திரண்டிருந்து பட்டம் பறக்கவிட்டு விளையாடுவார்கள். மாணவிகளும் இளைஞிகளும் பையன்களுக்கு நிகராகப் பட்டம்விட்டு ஆர்ப்பரித்துக்கொள்வதும் உண்டு. (பட்டங்களின் நூலில் கண்ணாடித்தூளைத் தடவிவிட்டுச் சிலர் பறக்கவிடுவார்கள். ஆனால் இது அபூர்வமாக, மிக ரகசியமாக); பக்கத்தில் போட்டி போடாமல் ஐயோ பாவம் போல பறந்துகொண்டிருக்கும் பட்டங்களின் அருகில் தங்கள் பட்டங்களை நகர்த்திவந்து நூலை அங்கிட்டும் இங்கிட்டுமாக அசைக்கிற அசைப்பில் அறுத்தெறிய சில பட்டங்கள் கடலிலேயே விழ நேரிடும்.

மாபெரும் கூட்டத்திரளில் சதிகாரர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் சில சின்னஞ்சிறுசுகள் அழ ஆரம்பித்துவிடும். திருச்செந்தூர் கடற்கரை இப்படி உள்ளூர்க்காரர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும் ஒரே நாள் இது. மற்ற கூட்டங்கள் திருச்செந்தூர் கோயில் திருவிழாவையொட்டி வேற்றூர் மக்களால் நிரம்பியிருப்பவை.

சூரசம்ஹாரம், விசாகம், மாசித் திருநாள் விசேஷங்களில் பார்த்தால் ஏதோ உள்ளூர் மக்கள் விசா கிடைக்காமல் வீடுகளிலேயே கட்டுண்டுகிடப்பவர்கள்போல முடங்கிவிடுவதுண்டு. அதனால் இந்த நாளின் உற்சாகத்தை மாற்றார் தரும் இன்பதுன்பங்களுடன்தான் அனுபவித்தாக வேண்டும். பல குடும்பங்கள் வீட்டுச் சமையலை அப்படியே எடுத்துவந்து குடும்பத்தினருடன் கடற்கரையிலேயே சாப்பிட்டுவிட்டுக் குதூகலமாகப் பொழுதுபோக்குவதும் நடக்கும்.

இதெல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் பொங்கல் நமக்குத் தரும் அனுபவங்கள் மிகவும் உன்னதமான விழுமியங்களைக் கொண்டவை. அதனை முழுவதுமாக உணர்வதற்கு நாம் முதலில் வேளாண்மையோடு தொடர்புடையவர்களாக இருப்பது அவசியம். வேளாண்மையும் அதனோடு இயல்பாகவே இணைந்திருக்கும் உழைப்பும் அதிமுக்கியமானவை.

(இந்தக் கட்டுரையின் முழு வடிவத்தை "தி இந்து" பொங்கல் மலரில் வாசிக்கலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x