Published : 13 Nov 2013 04:21 PM
Last Updated : 13 Nov 2013 04:21 PM
நிச்சயம் அது வித்தியாசமான கண்காட்சிதான். கேலரிகளிலும், அரங்குகளிலும் ஒளிவெள்ளத்தில் அரங்கேறும் கண்காட்சிகளுக்கு நேர்மாறாக, வடசென்னையின் தலைநகர் பாரிஸில் பரபரப்பான தொழில் களேபரத்துக்கு நடுவே தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படக் கண்காட்சி.
போட்டோ கண்காட்சி’ வைக்கும் கடை எதுவென்று விசாரித்தால், ‘‘நேரா போங்க சார். இடது பக்கம் கடைக்கு வெளியே போர்டு மாட்டியிருக்கும். பார்த்தாலே தெரியும்’’ என்று வழிகாட்டுகிறார்கள்.
பூக்கடை காவல் நிலையத்துக்கு அருகேயுள்ள காசிச் செட்டித் தெருவில் நுழைந்து ‘எம்.ஜி.ஆர். பி.கே. வசந்தா பிளாஸ்டிக்ஸ் என்ற சிறிய பெயர்ப்பலகைக்குப் பக்கத்திலேயே, 6 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட அட்டையில் கறுப்பு வெள்ளைப் படங்கள் இடைவெளி இல்லாமல் ஒட்டப்பட்டிருக்கின்றன. வரலாற்றின் பல அரிய தருணங்களைச் சொல்லும் இந்தக் கண்காட்சி, கடந்த 5 ஆண்டுகளாக தினசரி நடத்தப்பட்டுவருகிறது.
சாலையில் போகும் சாதாரண மக்கள், சற்று நிதானித்து அந்த அரிய படங்களின் கண்காட்சியை பார்த்துச் செல்கிறார்கள். அதை நடத்துபவர் பிரபல ஓவியரோ, போட்டோகிராஃபரோ அல்ல. அவர் பிளாஸ்டிக் கடை நடத்தும் ஆனந்தகுமார் பௌமிக்.
பெயர் சற்று வித்தியாசமாக இருக்கிறதே, அவருக்குத் தமிழ்த் தெரியுமா என்று யோசித்தால். சார் பிறந்தது, வளர்ந்தது தி.நகரில். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், 30களில் இவருடைய அப்பா வங்கதேசத்திலிருந்து சென்னை வந்திருக்கிறார். அவர் ஆரம்பித்ததுதான் பி.கே. வசந்தா பிளாஸ்டிக்ஸ்.
எல்லோருக்கும் தொழில் பிரதானமாகவும், பொழுதுபோக்கு துணையாகவும் இருக்கும். ஆனால், ஆனந்த்குமாருக்கோ தலைகீழ். பிளாஸ்டிக் தொழிலில் சம்பாதிப்பதில் பெருமளவு, கடைக்கு முன்னால் வைக்கப்படும் போட்டோ கண்காட்சியை நடத்தவே செலவாகிவிடுகிறது. கண்காட்சிக்கு அருகே 2 பேர் மட்டுமே நுழையக் கூடிய சந்து போலிருக்கும் வசந்தா பிளாஸ்டிக் கடைக்குள், அந்த போட்டோ களஞ்சியத்தை புதைத்து வைத்திருக்கிறார் ஆனந்த்குமார்.
ஒவ்வொரு பெட்டியாக அவர் திறக்கத்திறக்க, பல படங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. எதிர்பார்க்காத படங்கள் எல்லாம் அங்கே கிடைக்கின்றன. திராவிட இயக்கத்தின் தூண்களாகக் கருதப்படும் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய நால்வரும் ஒரே படத்தில், காமராஜர், இந்திரா, அண்ணா மற்றொரு படத்தில், எதிரெதிர் துருவங்களான கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் ஒரே படத்தில்... இப்படிப் பல்வேறு தருணங்கள், பல்வேறு உணர்ச்சிகள்... படங்கள் ஒவ்வொன்றிலும் காலம் சிறைபிடிக்கப்பட்டு, பார்ப்பவர்கள் கண்ணில் ஆச்சரியத்தையும், மனதில் அடுத்த படத்தைப் பார்க்கும் ஆவலையும் உருவாக்குகின்றன.
இங்கே நீங்கள் பார்க்கும் படங்களெல்லாம் வெறும் சாம்பிள்தான். மொத்தத்தையும் நான் காட்டவே ஆரம்பிக்கலை. ஒரு லட்சம் படங்களை சேகரிப்பதே என் நோக்கம்" என்கிறார் ஆனந்த்குமார்.
எப்படி வந்தது இந்த தீவிர ஆர்வம்?
"நான் எம்.ஜி.ஆர். வெறியன் சார். சின்ன வயசுல ஒழுங்கா படிக்கலை. சினிமா பைத்தியம் புடிச்சு அலைஞ்சேன். அதுக்காக வீட்டுல காசு திருடி, அடியெல்லாம் வாங்கியிருக்கேன். ஸ்கூல்ல பல தடவை பெயிலாகி, கடைசியா பச்சையப்பன் காலேஜ்ல சேர்ந்தேன். ஆனா, தொடர்ந்து படிக்கலை. அப்பா அடிச்சதைப் பத்தியெல்லாம் கவலையே படலை.
1977ல அண்ணாசாலைக்கு எம்.ஜி.ஆர். வந்தார். முதல்வர் ஆன பின்னாடி அவர் மக்களைச் சந்தித்த முதல் நிகழ்ச்சி அது. அங்கே நான் போயிருந்தேன். எம்.ஜி.ஆரை நேர்ல பார்த்தப்ப எதுவுமே புரியலை. ஒரு போட்டோகிராபரைப் பிடிச்சு அந்த அண்ணா சாலை படத்தை வாங்கினேன். அதுதான் என் கலெக்ஷனோட முதல் போட்டோ" என்கிறார் ஆனந்த்குமார்.
மக்கள் திரளுக்கு இடையில் எம்.ஜி.ஆர். இரட்டை விரலை அசைக்கும் அந்தக் காட்சி நிச்சயம் முக்கியமான ஒரு படம்தான். அதற்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். படங்களைச் சேகரிக்கும் ஆர்வம் தீவிரமடைந்தது. அது அப்படியே வளர்ந்து பழைய, அரிய படங்களை சேகரிக்கும் ஆர்வத்தில் மூழ்கிப் போனார்.
இவரிடம் பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், காந்தி, நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, லெனின், சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி, வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்டோரின் படங்கள் பெட்டிபெட்டியாக இருக்கின்றன. கைவசம் 70,000 படங்கள் இருப்பதாகக் கூறுகிறார்.
"நான் எம்.ஜி.ஆர். ரசிகனா இருந்தாலும் எல்லா அரசியல் கூட்டங்களுக்கும் போவேன். அங்கே விற்கப்படும் தலைவர்களின் படங்களை வாங்கிக்குவேன். இங்க பாருங்க துர்கா பூஜைக்கு கொல்கத்தா போயிருந்தப்ப வாங்கின படங்களை" என்று காட்டுகிறார்.
நேரடியாக போட்டோகிராபர்களிடம் பெறுவது, நினைவகங்கள், சொந்த ஊர்களில் போய்ச் சேகரிப்பது, நண்பர்களிடம் வாங்குவது என படங்களைச் சேகரிக்கப் பல வழிமுறைகளைக் கையாளுகிறார். தில்லி, வாகா எல்லை, ஜாலியன் வாலாபாக், கொல் கத்தா என பல ஊர்களுக்கும், ராம கிருஷ்ண மடம், சபர்மதி ஆசிரமம், நேதாஜி பவன் போன்ற இல்லங்களுக்கும் சென்றிருக்கிறார்.
உலகத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள், உள்ளூர்த் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாள், பழம்பெரும் தமிழ் நடிகர்-நடிகைகளின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாள், சுதந்திர தினம், குடியரசு தினம் எல்லாம் வந்துவிட்டது என்பதை, இவருடைய கண்காட்சிகளைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். எந்த ஒரு முக்கியமான நாளையும் அவர் மறந்துவிடுவதோ, விட்டுவிடுவதோ கிடையாது.
"எனக்கு மவுஸ் பிடிக்கவோ, எஸ்.எம்.எஸ். அனுப்பவோ தெரியாது. இந்தக் கண்காட்சிகளை நடத்தவும் இது தொடர்பான தகவலை மத்தவங்களுக்குச் சொல்லவும் உதவுறது தம்பி பையன் சுதர்சன் பௌமிக்தான். அந்தக் காலத் தலைவர்களின் தியாகத்தை விளக்கவே நான் கண்காட்சி நடத்துறேன். அந்தத் தலைவர்களுக்கு எனக்குத் தெரிந்த வகையில் செலுத்தும் அஞ்சலி இது. எனக்கு இடம் மட்டும் ஏற்பாடு செய்து தந்தால் போதும், நானே உங்கள் இடத்தில் வந்து கண்காட்சி வைப்பேன்" என்கிறார் ஆனந்த்குமார்.
ஆனந்த்குமார் தொடர்புக்கு : rkbhowmick@rediffmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT