Published : 14 Jul 2019 01:42 PM
Last Updated : 14 Jul 2019 01:42 PM
ரேடியோ ஜாக்கி, நடிகர் என்ற பாதையிலிருந்து தமிழில் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியுள்ள ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் ஆங்கில வர்ணனையாளரும் முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்சுரேக்கரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து மிகவும் நையாண்டியாக தமிழ் வர்ணனையில் கூறிய வீடியோ சமீபத்தில் வைரலானது.
இவரது நகைச்சுவையான தெறிப்புகளுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது.
சமீபத்தில் சஞ்சய் மஞ்சுரேக்கர் வரிசையாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து நெட்டிசன்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான போது ஆர்.ஜே.பாலாஜியும் தன் பங்குக்கு அவரைக் கிண்டல் செய்த போது, “சேனலுக்கு முதலாம் ஆண்டு பணியாற்றும் போது சம்பள உயர்வு கேட்டோம். ரூ.1000 தான் கொடுத்தார்கள். ஏன் இவ்வளவு குறைவு என்று நாங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போதே தமிழ் வர்ணனைக்கு வரவேற்பு குறைவாக இருந்தது என்று தெரிந்து கொண்டோம். ஆனால் திடீரென பிற்பாடு தமிழ் வர்ணனைக்கு நேயர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. நாங்கள் கேட்காமலேயே பெரிய சம்பள உயர்வு கிடைத்தது. ஏன் இந்த திடீர் உயர்வு என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த போது ஓஹோ ஆங்கில வர்ணனையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் இருக்கிறார், அதனால் அனைவரும் தமிழ் வர்ணனைக்கு வந்து விட்டார்கள் போலும்.. நன்றி சஞ்சய் மஞ்சுரேக்கர், நீங்கள் அங்கு வர்ணனையில் இருப்பதால்தான் நிறைய பேர் தமிழ் வர்ணனைக்கு மாறிவிட்டார்கள், குஜராத்தில் இருப்பவர்கள் கூட தமிழ் வர்ணனையை விரும்புகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்” என்று செம நக்கல் அடித்தது வைரலானது.
ஆர்.ஜே.பாலாஜி அளித்த பேட்டியிலிருந்து...
கிரிக்கெட்டுடன் உங்களுக்கு முதல் சந்திப்பு எப்போது?
இந்தியாவில் எங்க பிறந்திருந்தாலும் தெருக்களில் கிரிக்கெட் ஆடாமல் இருக்க முடியாது. 5 அல்லது 6 வயதில் கிரிக்கெட் ஆடத் தொடங்கினேன். நான் விளையாடிய முதல் அணியின் பெயர் வீனஸ் லெவன். நான் கேப்டனாக இருப்பேன் என்று அடம்பிடிப்பேன் அவர்களும் மறுக்க முடியாது காரணம் என்னிடம்தான் அப்போது பேட் இருந்தது.
உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வர்ணனையாளர்கள் யார்?
டோனி கிரேக் வர்ணனை எனக்கு மிகவும் பிடிக்கும் எப்பவுமே அவர்தான் எனக்கு மிகவும் பிடித்த வர்ணனையாளர். ஜெஃப் பாய்காட் கமெண்டரியும் எனக்கு பிடிக்கும்.
தமிழ் வர்ணனைக்காக உங்களை அணுகிய போது நீங்கள் என்ன சொன்னீர்கள்?
நான் முதலில் மறுத்தேன், ஏனெனில் அது எப்படி வரும் என்பது எனக்குத் தெரியவில்லை. 2007-லிருந்து ரேடியோவில் கிரிக்கெட் வர்ணனை அளித்து வந்தேன். அப்போது எனக்கு வந்த பின்னூட்டங்கள் வர்ணனை நன்றாக இருந்ததாகவே வந்தது. தொலைக்காட்சியைப் பொறுத்தவரை நேயர்களுடன் எப்படி தொடர்பு படுத்திக் கொள்கிறோ என்பதுதான் முக்கியம், மேலும் என்னுடைய நக்கல்கள் மூலம் அவர்களை எப்படி கவர்வது என்பது முக்கியம்.
ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் தயாரித்துக் கொள்வீர்களா?
போட்டிக்கு முன்னதாக அந்தந்த அணிகளைப் பற்றி ஒருமணி நேரம் முழுதும் படிப்பேன். முன்பு இரு அணிகளும் மோதிய போட்டிகள், பிட்ச் நிலைமை என்று தெரிந்த் வைத்துக் கொள்வேன். ஆனால் நான் அவ்வப்போது, அந்தத் தருணத்தில் பேசுவதுதான் பெரிய அளவில் கிளிக் ஆகிவருகிறது. சமீபத்தில் மைதானத்தில் மூதாட்டி ஒருவரைப் பார்த்த போது நான் வர்ணனையில் ‘ஹை பாட்டி மா’ என்றேன், அதுமுதல் எங்கு சென்றாலும் நான் அப்போது என்ன குரல் ஏற்ற இறக்கத்தில் சொன்னேனோ அதே போல் சொல்லச் சொல்லி ரசிகர்கள் கேட்கின்றனர்.
சமூக நடவடிக்கைகள் பலவற்றிலும் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களில் கிரிக்கெட் வர்ணனை என்ன பங்காற்றுகிறது?
நான் ஈடுபட்டுள்ள எல்லா விஷயங்களை விடவும் கிரிக்கெட் வர்ணனைக்குக் கிடைத்த வரவேற்பு பெரிய அளவிலானது. சமீபத்தில் உடம்பு சரியில்லாததால் வர்ணனையிலிருந்து விலகியிருந்தேன். ஆனால் நிறைய பேர் என்னிடம் வந்து மிகவும் கோபமாக, “ஏன் இங்க இருக்க? டிவியில் கிரிக்கெட் பத்தி பேசப்போகலையா?” என்று மிகவும் கோபமாக கடிந்து கொண்டார்கள், அவர் கடிந்து கொண்ட டோன் எப்படி இருந்ததுன்னா, பால்காரன் ஒருநாள் வரலைன்னா திட்டுவாங்களே அது போல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பாக கிராமம் ஒன்றிற்கு செல்ல நேரிட்ட போது பள்ளிச்சிறுவர்கள் பலர் ‘திசரா’ என்று என்னைப் பார்த்து கத்தினர். இவையெல்லாம் மறக்க முடியாத தருணங்கள்.
சஞ்சய் மஞ்சுரேக்கர் குறித்த உங்கள் சமீபத்திய கிண்டல் வைரலானதே..
அது சும்மா விளையாட்டுக்கு செய்த கிண்டல். லைவ் வர்ணனையின் போது இத்தகைய கேலி கிண்டல்கள் சகஜம். ஆனால் இது கட் செய்யப்பட்டு ஒரு இணையதள கிளிப் ஆகும் போது சர்ச்சையாகிறது. அப்போது அது பரவலாகப் பேசப்பட்டு வந்ததால் நானும் அதை பேச விரும்பினேன். அவரை நேரில் சந்தித்தால் ஹலோ என்பேன் அவரும் பதிலளிப்பார் என நம்புகிறேன்
இவ்வாறு கூறினார் ஆர்.ஜே.பாலாஜி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT