Published : 06 Jul 2019 09:42 AM
Last Updated : 06 Jul 2019 09:42 AM
செங்கல், சிமெண்ட், இரும்புக் கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் இல்லாமல் இன்று கட்டுமானத் துறை இல்லை. ஆனால், இந்தப் பொருட்கள் உற்பத்தியால் அதிகமான அளவு கரியமிலவாயு வெளியாகி பூமி வெப்பமடைந்துவருகிறது.
அதனால் இவற்றுக்கு மாற்றாகப் பாரம்பரியக் கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்துவதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. அப்படியான கட்டுமானப் பொருட்களில் ஒன்று மூங்கில். இந்த மூங்கிலை முக்கியக் கட்டுமானப் பொருளாகக் கொண்டு ஹைதராபாதைச் சேர்ந்த பாம்பூ ஹவுஸ் இந்தியா (http://www.bamboohouseindia.org) என்னும் நிறுவனம் வெற்றிகரமான முன்மாதிரிக் கட்டிடங்களை உருவாக்கிவருகிறது.
பிரசாந்த் – அருணா தம்பதியின் கூட்டு முயற்சிதான் பாம்பூ ஹவுஸ் இந்தியா என்னும் நிறுவனம். 2006-ம் ஆண்டு இந்தத் தம்பதியினருக்குத் திருமணம். அதற்குப் பிறகு ஹைதராபாத்தில் புது வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் வீட்டுத் தேவைக்கான ஒவ்வொரு பொருட்களையும் தேடித் தேடி வாங்கத் தொடங்கினார்கள். அப்படித்தான் வீட்டுக்கான அறைக்கலன்களையும் வாங்க முடிவெடுத்து, இணையத்தில் தேடினார்கள். மூங்கில் அறைக்கலன்களை வாங்கலாம் எனத் தீர்மானித்தனர்.
அதற்கான தேடல் அவர்களை வங்கதேசத்தின் எல்லைவரை அவர்களைக் கொண்டுபோனது. அப்போது அவர்கள் மூங்கிலைக் குறித்து அதிகம் தெரிந்துகொண்டனர். அதில் ஆர்வம் உருவானது. பிறகு மூங்கில் குறித்த ஆராய்ச்சியில் இந்தியா முழுவதும் அலைந்தனர். மூங்கிலைப் பலவிதமாகப் பயன்படுத்த முடியும் என்பதை அறிந்தனர். வீட்டுக் கட்டுமானத்துக்கு சிறந்த மாற்றுப் பொருள் என்பதையும் அனுபவத்தின் மூலம் கண்டறிந்தனர்.
இந்தத் தேடலுக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகு மூங்கில் கட்டுமானத்துக்காக 2008-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். பல புதிய யோசனைகளுடன் கட்டுமானத் துறையில் மாற்றங்களை உருவாக்கலாம் என நம்பிக்கையுடன் காத்திருந்தனர். இந்தத் தொழிலில் 60 லட்சத்துக்கும் மேல் முதலீடு செய்தனர்.
ஆனால் கிட்டத்தட்ட 5 வருஷத்துக்கு அவர்களுக்குச் சிறிய வியாபார ஆணைகூடக் கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளராமல் அவர்கள் காத்திருந்தனர். அதன் பிறகு ஹைதராபாதில் உள்ள ஒரு பள்ளி முதல்வர் ஒரு கட்டுமானத்துகாக அணுகியுள்ளார்.
அது புதிய கட்டுமானப் பணி அல்ல. ஏற்கெனவே கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தின் மேல் தளத்தில் மூங்கில் கொட்டகை அமைக்கும் பணி. இருந்தாலும் முதல் பணியை முழுமனத்துடன் ஏற்றுச் செய்தனர். அதன் பிறகு அவர்களுக்கு ஏறுமுகம்தான்.
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மட்டுமல்லாது தமிழ்நாடு, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் இந்தத் தம்பதி புதிய கட்டுமானங்களை உருவாக்கியுள்ளனர். வீடு, அலுவலகம், தொழிற்கூடம் எனப் பலதரப்பட்ட கட்டுமானங்களை இந்தத் தம்பதி உருவாக்கியுள்ளது. இது மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் மூங்கில் கட்டுமானம் குறித்த கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புறையாற்றியுள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்களையும் எடுத்துள்ளனர்.
இது மட்டுமல்லாது ஞெகிழிக் குடுவை, பை ஆகிவற்றை மறுசுழற்சிசெய்து கட்டுமானப் பொருள்களாக மாற்றிவருகின்றனர். இதற்காக ஹெர்வின் என்னும் பெயரில் தனி அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.
500 கிலோ ஞெகிழிக் கழிவு இருந்தால் ஒரு அறையை உருவாக்கிவிட முடியும் என்கிறார் பிரசாத். இந்தக் கழிவைக் கொண்டு மேற்கூரை, பக்கச் சுவர்கள், தரைத்தளம் ஆகியவற்றை உருவாக்கிவருகிறார்கள்.
மறுசுழற்சி செய்யப்பட்ட ஞெகிழி, மூங்கில் ஆகிய இரண்டையும் முக்கியக் கட்டுமானப் பொருளாகக் கொண்டு இப்போது இவர்கள் வீடுகளை உருவாக்கிவருகிறார்கள். இது மட்டுமல்லாமல் மறுசுழற்சி செய்யப்பட்ட குப்பையில் அறைக்கலன்களையும் இவர்கள் உருவாக்குகின்றனர்.
உதாரணமாக ஜவுளித் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொண்டு சோபாவை உருவாக்கியுள்ளனர். வானகச் சக்கரங்களைக் கொண்டும் இத்தகைய சோபாக்களை உருவாக்கியுள்ளனர்.
மேலும், மறுசுழற்சிசெய்யப்பட்ட ஞெகிழிக் கழிவைக் கொண்டு கை கழுவும் கலனைப் புதுவிதமாக உருவாக்கியுள்ளனர். கழிவறைக்கான சுவர் டைலையும் மறுசுழற்சிசெய்யப்பட்ட ஞெகிழிக் கழிவைக் கொண்டு உருவாக்கியுள்ளனர்.
மூங்கில் கட்டுமானத்தை முன்னெடுப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு இவர்கள் நன்மை செய்துவருகிறார்கள். கரியமிலவாயுவை அதிகமாக உட்கிரகிக்கும் தன்மை கொண்டது மூங்கில். அதுபோல் பிராணவாயுவை அதிகமாக வெளிவிடக் கூடியது.
இன்னொரு பக்கம் மூங்கில் கட்டுமானம் மூலம் மூங்கில் பயிரிடலும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் உழவர்கள் பயனடைந்துவருகிறார்கள். மேலும், நலிந்துவரும் மூங்கில் சார் தொழிலும் வளர்ச்சி அடைந்துவருகிறது. இதன் மூலம் பெண்கள் பலர் பயனடைகிறார்கள்.
பிரசாந்த் – அருணா தம்பதியின் இந்த நல் முயற்சிக்கு ஹைதராபாத் மாநகராட்சி ஆதரவு அளித்துள்ளது. பாம்பூ ஹவுஸ் இந்தியா – ஹைதராபாத் ஒப்பந்தத்தின்படி மூங்கில் வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத் குக்கட்பல்லி கே.பி.எச்.பி. காலனி பூங்காவில் ஒரு அலுவலகம் மூங்கில், ஞெழிகி ஆகியவற்றைக் கட்டுமானப் பொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களது இந்த முயற்சிக்கு வெளி அங்கீகாரமும் கிடைத்துள்ளது. கென்ய அரசு தங்கள் நாட்டில் வீடுகளை உருவாக்க இந்தத் தம்பதியை அழைத்துள்ளது.
படங்கள் உதவி:
http://www.bamboohouseindia.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT