Published : 29 Aug 2017 09:42 AM
Last Updated : 29 Aug 2017 09:42 AM
கடந்த நான்கு அத்தியாயங்களில் நாம் பார்த்துவந்த தகவல்கள் தொடர் சங்கிலித் தொழில்நுட்பம் பற்றிய ஆழ்ந்த புரிதலை அளித்திருக்கும் என நம்புகிறேன். இப்போதுதான் முதன்முதலில் இதைப் படிக்கிறீர்கள் என்றால், tamil.thehindu.com தளத்துக்குச் சென்று முந்தைய பகுதிகளைப் படித்துவிடுங்கள். இந்த கடைசிப் பகுதியில் தொடர் சங்கிலித் தொழில்நுட்பத்தின் மிகச் சமீபத்திய நிகழ்வுகளையும் சில ஆலோசனைகளையும் கொடுக்கிறேன்.
*எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அதில் இருக்கும் இடைத்தரகர்களின் இருப்பைக் கபளீகரம் செய்யப்போகிறது இந்தத் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தை உங்கள் துறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால், முதலில் உங்கள் துறையில் இடைத்தரகு என்பது இருக்கிறதா என்பதை முதலில் பாருங்கள். ஆம் எனில், இடைத்தரகின் முக்கியத்துவத்தைக் குறைக்கவோ முழுமையாக நீக்கவோ தொடர் சங்கிலி பயன்படும். அதை எப்படி நிகழ்த்தலாம் என்ற சிந்தனை உங்களைத் தொழில்முனைவுக்கு அழைத்துச் செல்லலாம்.
*1848 முதல் 1855 வரையான வருடங்கள் கலிஃபோர்னியாவின் ‘தங்க வேட்டை’ (கோல்ட் ரஷ்) காலம் என அறியப்படுகிறது. வடக்கு கலிஃபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்ட தங்கத் துண்டுகள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமிருந்து ஆட்களை கலிஃபோர்னியாவுக்குள் இழுத்துவந்து மிகப் பெரிய பொருளாதாரத்தை உருவாக்கின.
தொடர் சங்கிலி கிட்டத்தட்ட இது போன்ற ‘வேட்டை’ ஒன்றை உருவாக்கியிருக்கிறது என உறுதிபடச் சொல்ல முடியும். ‘தங்க வேட்டை’ சமயத்தில் தங்கத்தைச் சுரண்டி எடுக்க முயன்றவர்களைவிட, அவர்களுக்கு உபகரணங்களை விற்றவர்கள் அதிகப் பணம் ஈட்டினார்கள் என்பதை வரலாறு சொல்கிறது. உதாரணத்துக்கு, தங்கம் சுரண்ட சென்றவர்களுக்கு ஜீன்ஸ் பேண்ட் தைத்துக்கொடுத்த லீவை ஸ்ட்ராஸ் (Levi Strauss) கோடிக்கணக்கில் டாலர்களைக் குவித்தார். இந்த உதாரணங்களை ‘தொடர் சங்கிலி’ உலகிலும் மனதில் கொள்வது அவசியம். கையில் ஒரு கணினி இருக்கிறது என்பதால், தொடர் சங்கிலி சார்ந்த பணத்தை ஒரேயடியாகத் தோண்டியெடுக்கப்போகிறேன் என்று புறப்படுவது புத்திசாலித்தனமானதல்ல.
*தொடர் சங்கிலித் தொழில்நுட்பத்தின் முன்னத்தி ஏரான பிட்காயின் உலகத்தில் மிக முக்கியமான நிகழ்வு ஒன்று சமீபத்தில் நடந்திருக்கிறது. அதிமுக அம்மா அணி/ அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என பிளந்ததுபோல பிட்காயினும் இரண்டாக உடைந்திருக்கிறது. ஆனால், இந்த இரண்டு அணிகளும் சேர்ந்ததுபோல அல்லாமல், பிட்காயினின் இரண்டு வடிவுகளும் சேர வாய்ப்பில்லை. அசல் பிட்காயின் இனி ‘பிட்காயின் கோர்’ என்றும், பிளந்துபோன பிட்காயினுக்கும் ‘பிட்காயின் கேஷ்’ என்றும் பெயர் சூட்டப்பட்டாலும், அசல் பிட்காயின் அந்தப் பெயரிலேயே பொதுவாக அறியப்படுகிறது.
*இப்படியெல்லாம் பிளவுபட்டாலும், அசல் பிட்காயின் வைத்திருப்பவர்களின் பிட்காயின் மதிப்பு குறையவில்லை என்பது மட்டுமல்ல; சமீப நாட்களில் பிட்காயினின் மதிப்பு எகிறியபடி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால் 2,500 டாலர்கள் அளவில் இருந்த பிட்காயின் இந்தக் கட்டுரை எழுதப்படும் தருணத்தில் 4,000 டாலர்களுக்கும் மேலாக. எத்தூரியத்தின் ஈதரும் அப்படியே. கடந்த சில மாதங்களில் அதன் மதிப்பு 200 மற்றும் 4,000 டாலர்களுக்கு இடையே அங்குமிங்குமாக ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
உங்கள் சேமிப்பில் ஒரு பகுதி தொடர் சங்கிலியில் இருப்பது நல்லது. எனினும், தொடர் சங்கிலி சார்ந்த சங்கேத இணையப் பணங்களின் மதிப்பு மேலும், கீழுமாக சென்றுகொண்டிருப்பதால், இவற்றில் முதலீடு செய்வதில் ரிஸ்க் அதிகம். எனவே, கவனமான முதலீட்டுப் பார்வை தேவை.
அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் என்பதால் ப்ளாக் செயின், அதுவும் எத்தூரியம் சார்ந்த தொழில்முனைவுகள் வேகமாக முன்னேறியும் மாறியும் வரும் என்பது எனது எதிர்பார்ப்பு. இந்தக் கட்டுரை பெரும் பனிமலையின் ஒரு சிறு கூர்முனையே. தானாகவே இதை ஆழ்ந்து தெரிந்துகொள்கிறார்கள் என்பதைக் கண்டறிய 10 வாசகர்களுக்கு 100 ரூபாய்க்கான எத்தூரியத்தின் ஈதர் பணத்தை அனுப்பவிருக்கிறேன். இதைப் பெற்றுகொள்ள நீங்கள் செய்ய வேண்டியது :
(1) உங்களுக்கான எத்தூரியம் வாலட்டை தயாரியுங்கள். https://www.myetherwallet.com/ தளத்திலோ அல்லது அது போன்ற தளங்களைப் பயன்படுத்தி வாலட்டைத் தயாரிக்கலாம்.
(2) அந்த வாலட் எண்ணை antonprakash@redtie.email என்ற முகவரிக்கு மின்னஞ்சலாகவோ அல்லது +13132513770 என்ற எண்ணுக்கு வாட்ஸப்பிலோ அனுப்புங்கள்.
வாலட்டின் பொதுத்திறவுகோல் எண்ணை மட்டுமே அனுப்ப வேண்டும். உங்களது பாஸ்வேர்ட் அல்லது பிரத்யேகத் திறவுகோல் எண்ணை என்னிடம் மட்டுமல்ல; எவரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
(3) உங்களுக்கு ஈதர் பணத்தை அனுப்பியதும் வாட்ஸப்பில் தொடர்பு கொள்கிறேன். உங்களது வாலட்டில் பணம் வந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்வது எளிது. எனது வாலட்டுக்கும் உங்களது வாலட்டுக்கும் நடந்திருக்கும் பரிவர்த்தனை எத்தூரிய உலகுக்கே தெரியும். https://etherscan.io/ தளத்துக்குச் சென்று உங்கள் வாலட் முகவரியைக் கொடுத்தால் அதில் எவ்வளவு ஈதர் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள் ளலாம்.
வாலட் தயாரித்து ஈதரைப் பெற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ, இந்தக் கட்டுரை பற்றிய பின்னூட்டத்தைத் தெரியப்படுத்துங்கள். இந்தக் கட்டுரையின் நீள் தொடர்ச்சியாக ப்ளாக் செயின் பற்றிய தகவல்களை ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இணையதளத்தில் சில வாரங்கள் கழித்துப் பகிர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் இருக்கிறது. அதைச் செயலில் கொண்டு வர உங்கள் பின்னூட்டம் பயன்படும்.
(நிறைவடைந்தது)
- அண்டன் பிரகாஷ், எழுத்தாளர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்,
தொடர்புக்கு: anton.prakash@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT