Published : 28 Aug 2017 10:25 AM
Last Updated : 28 Aug 2017 10:25 AM
நி
தி ஆயோக் – அர்விந்த் பனகாரியா இவைதான் சமீப காலங்களில் அதிகம் பேசப்பட்ட விஷயம். திட்டக் கமிஷனுக்கு மாற்றாக 2015-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டதுதான் நிதி ஆயோக். ஏறக்குறைய 2 ஆண்டு 8 மாதங்களே ஆன நிலையில் இதன் துணைத் தலைவரான அர்விந்த் பனகாரியா பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த மாதம் இறுதியோடு இவர் வெளியேற இவருக்குப் பதிலாக பொருளாதார பேராசிரியர் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டாட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவை மாற்றியமைக்கும் நிதி ஆயோக் (National Institution for Transforming India) என்ற அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பு உருவாக்கப்பட்டது. நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டக் கமிஷனுக்கு மாற்றாக இது கொண்டு வரப்பட்டது.
மாற்றத்தைக் கொண்டு வரும் என கூறப்பட்ட இந்த அமைப்பு கடந்த காலங்களில் செயல்பட்ட விதம், அதற்கான இலக்கை நோக்கி பயணிக்கிறதா என்பதை ஆராய இரண்டரை ஆண்டுக் கால செயல்பாடுகள் போதுமானதே. அந்த வகையில் நிதி ஆயோக்கின் நோக்கம், இலக்கு எட்டப்பட்டனவா என்பதைப் பார்க்கலாம்.
எதிர்ப்பு இல்லை
ஆளும்கட்சி கொண்டு வரும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஓரளவு எதிர்ப்பாவது இருக்கும். ஆனால் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு நிதி ஆயோக் உருவாக்கப்படுகிறது என்றபோது அதற்கு எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டி அதை செயல் படுத்திய திட்டக்குழு மீது ஏன் அதிருப்தி உண்டானது என்பதையும் பார்த்தாக வேண்டும்.
திட்டக்குழு அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை இந்திய தேசிய ராணுவத்தின் (ஐஎன்ஏ) தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1938-ல் அளித்தபோதிலும் அது செயல்பாட்டுக்கு வந்தது 1950-ல் தான்.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி இருந்த வரை திட்டக்குழு செயல்பாடு குறித்து பெரும் விமர்சனம் எழவில்லை. மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் ஆட்சியைப் பிடித்தபிறகு திட்டக் குழுவின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
1991-க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட தாராளமய கொள்கைகளால் திட்டக் குழுவின் செயல்பாடுகள் குறித்த அதிருப்தி மேலும் அதிகரித்தது. மாநில நலத் திட்டங்களுக்கு திட்டக் குழுவிடம் கையேந்த வேண்டிய நிலை இருப்ப தாக பல மாநில முதல்வர்களும் குற்றம் சாட்டினர்.
தாராளமயமாக்கலுக்குப் பிறகு துறைசார் அமைச்சர்களின் நடவடிக்கைளுக்குக் கடிவாளம் போட திட்டக்குழுவின் துணைத் தலைவர் பயன்படுத்தப்பட்டதால் மத்திய அமைச்சரவை சகாக்கள் மத்தியிலும் எதிர்ப்பு உருவானது.
இவை அனைத்துமே நிதி ஆயோக் வருகையை எதிர்ப்பின்றி எளிதாக்கியது.
நிதி ஆயோக்
கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவதற்காக 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. பிரதமர் இதன் தலைவர், அனைத்து மாநில முதல்வர்களும் இதன் உறுப்பினர்கள். இதன் செயல்பாடுகளுக்காக துணைத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
அனைத்து மாநில முதல்வர்கள் சேர்ந்து பங்கேற்கும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நிதி ஆயோக் செயல்படுத்தும் என கூறப்பட்டது. ஆனால் இதற்கான கூட்டம் ஒரு முறைதான் கூட்டப்பட்டுள்ளது.
என்ன செய்தது நிதி ஆயோக்?
நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் அனைத்துமே விரிவாக்கப்பட்ட பிரதமர் அலுவலக செயல்பாடுகளைப் போலவே உள்ளன. தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆராய வேண்டுமென்றால், நிதி ஆயோக் துணைத் தலைவரிடம் அத்துறை குறித்த அறிக்கையைக் கேட்பது வழக்கமாயிற்று. நிதி ஆயோக் பரிந்துரைகளை செயல்படுத்துவதும் அமைச்சரவையின் வழக்கமாயிற்று. இப்படி செயல்பாட்டுக்கு வந்தவைதான் உடான், உதய் உள்ளிட்ட பல திட்டங்கள்.
இதன் முதலாவது துணைத்தலைவராக பொருளாதார அறிஞராக அழைத்து வரப்பட்ட பனகாரியா, ஐந்து ஆண்டு காலம் கூட இந்தப் பதவியில் நீடிக்கவில்லை. கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணியைத் தொடரப் போவதாக அவர் காரணம் கூறியுள்ளார்.
தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடிக்கக் கூடிய பொருளாதார அறிஞரை அரசால் கண்டுபிடிக்க முடியவில்லையா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
அனைத்துக்கும் மேலாக பனகாரியா வெளியேற்றுவது நல்லது என்ற முடிவுக்கும் அரசு வந்துவிட்டதா என்ற எண்ணமும் பரவலாகத் தோன்றியுள்ளது. ஏனெனில் பொது அரங்கில் பல விஷயங்களை மிகவும் வெளிப்படையாக விவாதிக்கத் தொடங்கினார் பனகாரியா.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனுக்கும் இதே நிலைதான். பொது அரங்கில் பேசும் எவரையும் அரசுக்குப் பிடிக்காது என்பதற்கு இரண்டாவது உதாரணம் பனகாரியா. பனகாரியா வெளியேற்றமும் சர்ச்சைக்குள்ளானதில் வியப்பில்லை.
கடந்த வாரத்தில் 211 பக்க, 3 ஆண்டு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது நிதி ஆயோக். மருத்துவம், சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு இந்த திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தவிர 15 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொலைநோக்கு அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது.
மாநில அரசுகளை உள்ளடக்கிய கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் இதுவரை எந்த ஒரு மாநில முன்னேற்றத்துக்கான திட்ட அறிக்கையையோ, ஆலோசனையோ வழங்கவில்லை. பிராந்திய நிதி ஆயோக் உருவாக்கப்படும் என்பதும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
மேலும் மாநிலங்களுக்கான உதவிக்கு பட்ஜெட்டில் மத்திய அரசு எதையும் ஒதுக்கத் தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சுகாதாரம், கல்வி, ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம் இவை அனைத்தையும் மாநில அரசுகளுடன் இணைந்தே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் ஒரு அமைப்பாக அதாவது பட்ஜெட் அறிவிப்புகளை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதலை உருவாக்கும் அமைப்பாகவே நிதி ஆயோக் மாறிவிட்டது. பொதுத்துறை பங்கு விலக்கல் உள்ளிட்டவை இதில் பிரதானமானதாகும். எந்த நோக்கத்துக்காக, லட்சியத்துக்காக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டதோ அந்த இலக்கைவிட்டு விலகி, அரசின் ஊதுகுழ லாக மாறிவிட்டது. புதிய பொருளாதார அறிஞர் ராஜீவ் குமாரின் வருகை இலக்கு நோக்கிய பயணத்துக்கு வழிவகுக்குமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT