Published : 19 Feb 2014 10:21 AM
Last Updated : 19 Feb 2014 10:21 AM
இன்னும் ஒரு விக்கெட் விழுந்திருந்தால்கூட இந்தியா தோற்றிருக்கும் அல்லது தோல்வியைத் தவிர்க்கப் போராடியிருக்கும். விராட் கோலியின் மட்டையை மெல்லிதாக உரசிச் சென்ற பந்து விக்கெட் கீப்பர் கையில் தஞ்சமடைந்தது. ஆனால் நடுவர் அதைக் கவனிக்கத் தவறிவிட்டார்.
தப்பிப் பிழைத்த கோலி சதமடித்து இந்தியா தோல்வியிலிருந்து தப்ப உதவினார். நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாம் டெஸ்டின் மூன்றாம் நாள் காலையில் இன்னிங்ஸ் வெற்றி பெறும் நிலையில் இருந்த இந்தியா கடைசி நாளன்று இத்தகைய பரிதாபகரமான நிலையை அடைந்தது. வெற்றி பெறும் நிலையிலிருந்து சறுக்குவது எல்லா அணிகளுக்கும் நேர்வதுதான். ஆனால் இந்திய அணி அந்தக் கலையில் தனித் தேர்ச்சி பெற்றிருப்பதுபோலத் தெரிகிறது.
தள்ளாடிய நியூஸிலாந்து
டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்வுசெய்த அணித் தலைவர் எம்.எஸ்.தோனியின் நம்பிக்கையைப் பந்து வீச்சாளர்கள் முழுமையாகக் காப்பாற்றினார்கள். சிறப்பான முறையில் பந்து வீசி எதிரணியை 192 ரன்களில் சுருட்டினார்கள். மட்டையாளர்கள் தங்கள் பங்கைச் செய்தார்கள்.
ஷிகர் தவன் 98, கோலி 38, அஜிங்க்ய ரஹானே 118, தோனி அதிரடியாக 68 என்று ஆட, இந்தியா 438 ரன்களைக் குவித்தது. இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 246 ரன்கள் எடுக்க வேண்டும் என்னும் நெருக்கடியுடன் ஆடத் தொடங்கிய நியூஸி அணி 37.2 ஓவர்களில் 94 ரன்னுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து தள்ளாடியது.
இன்னும் இரண்டு நாட்களுக்கும் மேல் அவகாசம் இருந்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி என்ற நிலை உருவானது.
அப்போது ஒரு திருப்பம் நிகழ்ந்தது. கண்ணெதிரில் தெரியும் தோல்வியைத் தவிர்க்க வேண்டிய சுமையுடன் ஆடிக்கொண்டிருந்த நியூஸிலாந்தின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் ஒரு பந்தைத் தவறாக அடித்தார். பந்து கேட்ச்சாக மாறியது. எளிய கேட்ச் அல்ல என்றாலும் மிகவும் கடினமானதும் அல்ல. கோலி அந்த கேட்சைத் தவறவிட்டார்.
அதன் பிறகு மெக்கல்லத்தையும் அவருடன் ஆடிக்கொண்டிருந்த பி.ஜே. வாட்லிங்கையும் இந்தியப் பந்து வீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வாட்லிங் 124, அவருக்குப் பின் வந்த ஜிம்மி நீஷம் 137 ரன்களைக் குவித்தார்கள். மறு முனையில் மெக்கல்லம் 302 ரன் அடித்து முச்சதம் அடித்த முதல் நியூஸிலாந்து வீரர் என்னும் பெருமையைப் பெற்றார். போட்டி டிரா ஆனது.
எங்கே தவறு நடந்தது? கோலி கேட்சை விட்டதுதான் தவறா? ஒவ்வொரு போட்டியிலும் சில கேட்ச்கள் தவறவிடப்படுவது ஒன்றும் அதிசயம் அல்லவே. அப்படியானால் என்னதான் ஆயிற்று?
முச்சதம் எடுத்த மெக்கல்லத்தை முதுகில் தட்டிக்கொடுத்து தோனி பாராட்டினார். எதிரியைப் பாராட்டுவதில் பெருந்தன்மையோடு இருக்க வேண்டியதுதான். ஆனால் தோனியின் பெருந்தன்மை மெக்கல்லம் ஆட வந்தபோதே தொடங்கிவிட்டது.
தோனியின் தவறான உத்தி
இந்தியாவின் ஆகச் சிறந்த கேப்டன் என்று புகழப்படும் தோனியின் வியூகத்தில்தான் தவறு என்பதைச் சற்று உன்னிப்பாகப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். மெக்கல்லமும் வாட்லிங்கும் கொஞ்சம் ரன் எடுத்து ஆடத் தொடங்கியதும் தோனி தாக்குதல் வியூகத்திலிருந்து பின்வாங்கித் தற்காப்பு வியூகத்தைக் கையாண்டார்.
கேட்ச் வரக்கூடிய இடங்களான ஸ்லிப், பாயிண்ட், மிட்விக்கெட், ஷார்ட் மிட் ஆஃப் போன்ற இடங்களிலிருந்து தடுப்பாளர்களை எடுத்துவிட்டார். ஒரே ஒரு ஸ்லிப், டீப் பாயிண்ட், டீப் மிட்விக்கெட், டீப் ஸ்கொயர் லெக், டீப் கவர், லாங் ஆன், லாங் ஆஃப் என பவுண்டரிகளைத் தடுக்கும் வியூகம் அமைக்கப்பட்டது. நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க அடிக்க, தடுப்பாளர்கள் பின்னால் அனுப்பப்பட்டார்கள்.
பிடி கொடுத்து அவுட் ஆகும் வாய்ப்பு குறைவு என்னும் ஆசுவாசத்துடன் மெக்கல்லமும் வாட்லிங்கும் ஆடத் தொடங்கினார்கள். எல்லைக்கோட்டில் பலர் நிற்கும் நிலையில் எளிதாக ஒன்று இரண்டு என்று ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தார்கள். பல பந்துகள் மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப், மிட் விக்கெட், ஷார்ட் மிட் ஆஃப் முதலான இடங்களில் விழுந்தன. பிடிக்க ஆளில்லை.
மட்டையாளர்களின் தன்னம்பிக்கையும் ஆட்டத் திறனும் கூடிக்கொண்டே போயின. பந்து வீச்சின் வேகமும் துல்லியமும் குறைந்துகொண்டே வந்தன. பந்து தேய்ந்ததும் பகுதி நேரப் பந்து வீச்சாளர்கள் வீச ஆரம்பித்தார்கள். ஆடுகளத்திலிருந்து இவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. மட்டையாளர்கள் பதற்றமின்றி ரன் குவிக்க ஆரம்பித்தார்கள்.
38ஆவது ஓவரில் ஐந்தாவது விக்கெட் விழுந்தது. அடுத்த விக்கெட் 161ஆவது ஓவரில்தான் விழுந்தது. அதுவும் புதுப் பந்தை எடுத்த பிறகுதான் விழுந்தது. அப்போது நியூஸி 200 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. எஞ்சிய நான்கு விக்கெட்களை அடுத்த 100 ரன்களுக்குள் வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் புதுப்பந்து எந்த மாயத்தையும் நிகழ்த்தவில்லை.
களைத்துப்போன பந்து வீச்சாளர்களும் தடுப்பாளர்களும் மட்டையாளர்களுக்கு நெருக்கடி எதையும் ஏற்படுத்தவில்லை. தோனியின் அதீதத் தற்காப்பு உத்தியும் சேர்ந்துகொள்ள, மெக்கல்லம் முச்சதத்தையும் எட்டாவது ஆட்டக்காரரான நீஷம் சதத்தையும் எட்டினார்கள். ஏற்கனவே ஒரு போட்டியில் வென்ற நியூஸிலாந்து இந்தியா எட்டக்கூடிய விதத்தில் இலக்கை நிர்ணயிக்க விரும்பவில்லை. எனவே தாமதமாகவே டிக்ளேர் செய்தது. போட்டி டிராவில் முடிந்தது. தொடரை இந்தியா இழந்தது.
தற்காப்பு என்னும் தொடர் வியாதி
தோனி தற்காப்பு வியூகத்தில் இறங்குவது இது முதல் முறையல்ல. 2011இலிருந்து அவர் இதே தவறைத் தொடர்ந்து செய்து வருகிறார். 2011இல் மேற்கிந்தியத் தீவுகளின் டொமினிகாவிலும் அவர் இதே தவறைச் செய்தார். சில ஓவர்களுக்கு விக்கெட் விழாதபோது தடுப்பாளர்களை எல்லைக் கோட்டுக்கு அருகில் அனுப்பிவிட்டார்.
அதையடுத்து இங்கிலாந்தின் லார்ட்ஸில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 72 ரன் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா நன்றாக பந்துவீசிக் கொண்டிருந்தார். உணவு இடைவேளை முடிந்ததும் தொடர்ந்து ஷர்மாவை பந்துவீச வைத்திருக்க வேண்டும். ஆனால் சுரேஷ் ரெய்னாவும் ஹர்பஜன் சிங்கும் பந்து வீசினார்கள். இங்கிலாந்து சுதாரித்துக் கொண்டது. போட்டி இந்தியாவின் கையை விட்டு நழுவியது.
அடுத்த போட்டி ட்ரெண்ட் ப்ரிட்ஜில். அங்கும் இதே கதைதான். 124 ரன்னுக்கு 8 விக்கெட் என்று இங்கிலாந்து தடுமாறியபோது ஸ்டூவர்ட் பிராடும் டிம் ப்ரெஸ்னனும் அடித்து ஆட ஆரம்பித்தார்கள். தோனி உடனே தடுப்பு வியூகத்தில் இறங்கினார். இங்கிலாந்து மீண்டும் சுதாரித்துக்கொண்டது. இந்தியா மீண்டும் தோற்றது. இங்கே தொங்கிய இந்திய அணியின் தலை அதன் பிறகு நிமிரவே இல்லை. அடுத்த இரு போட்டிகளிலும் மிக மோசமாகத் தோற்று 4-0 என்னும் கணக்கில் தொடரை இழந்தது.
ஆஸ்திரேலியாவிலும் இதே கதைதான். மெல்போர்னில் ஆஸ்திரேலியா முதல் நாளில் 214 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் கண்டது. ஆனால் அப்போதும் தோனி லாங் ஆன், டீப் மிட்விக்கெட், டீப் ஃபைன் லெக் என்னும் தடுப்பு வியூகத்தை அமைத்தார். பிராட் ஹாடின் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். இரண்டாம் இன்னிங்ஸில் 27க்கு 4 என்று ஆஸி தடுமாறியது.
அப்போதும் பவுண்டரியைத் தடுப்பதில்தான் தோனியின் கவனம் இருந்தது. விளைவு, ஆஸி நிலைபெற்றது. பிறகு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கிலும் தோனி தற்காப்புக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.
இதே அணுகுமுறைதான் இப்போது இந்தியாவின் பின்னடைவுக்குக் காரணமாக இருந்தது. தற்காப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, மட்டையாளர் தவறு இழைக்கும்வரை காத்திருக்கும் அணுகுமுறையால் வெற்றிகள் வசப்படாது. கண்ணுக்கு எட்டிய வெற்றி கைக்கு எட்டாமல் போகும். வெலிங்டனில் நடந்தது இதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT