Published : 04 Mar 2014 09:43 PM
Last Updated : 04 Mar 2014 09:43 PM
தொகுதியின் பெரும்பான்மைப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை இல்லை. கழிவுநீர் தேங்குவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஆவடி, திருவள்ளூர் பகுதிகளில் நடந்துவரும் பாதாளச் சாக்கடைப் பணிகளும் மிக மந்தம். தொகுதி முழுவதுமே குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை.
குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை இல்லை. நிலைமை ஓரளவு சீராகவே இருக்கிறது. மின்வெட்டுப் பிரச்சினை சுமார் ரகம். ஆர்.கே பேட்டை, பள்ளிப்பட்டுப் பகுதிகளில் மட்டும் மின்வெட்டு அதிகம் இருப்பதாக அந்தப் பகுதியின் நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். தொகுதியில் தரமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருப்பதாகப் பெரும்பான்மை மக்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.
# ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்ல பேருந்து, ரயில் வசதிகள் அதிகம் இருக்கின்றன. ஆனால், திருவள்ளூரிலிருந்து செல்வதற்குப் போதிய பேருந்து, ரயில் வசதிகள் இல்லை என்கிறார்கள் மக்கள்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கழிப்பிடம், சுரங்கப்பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. கடம்பத்தூர், பட்டாபிராம், வேப்பம்பட்டு ஆகிய இடங்களில் ரயில் மேம்பாலம் கட்டித்தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குறுதி அளித்திருந்தார். இதில், வேப்பம்பட்டில் மட்டும்தான் பணிகள் 60% நிறைவடைந்துள்ளன.
# சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மற்றும் வடமாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் திருவள்ளூர், ஆவடி ரயில் நிலையங்களில் நின்றுபோக வேண்டும் என்பது தொகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை.
கும்மிடிப்பூண்டி, காக்களூர், திருமுல்லைவாயல் ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் உள்ளன. இந்தத் தொழிற்பேட்டைகளில் பல தொழிற்சாலைகள் சரிவர செயல்படாமல் மூடப்பட்டுக்கிடக்கின்றன. இதனால், உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
# சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை மிகக் குறுகலாக இருக்கிறது. இதனை விரிவுபடுத்த வேண்டும் என்கிறார்கள் பெரும்பான்மையான மக்கள். பாடி முதல் திருநின்றவூர் வரை மாநில நெடுஞ்சாலைத் துறையும், திருநின்றவூர் முதல் திருப்பதி வரை தேசிய நெடுஞ்சாலைத் துறையும் சாலை விரிவாக்கப் பணிகளைச் செய்துவருகின்றன. ஆனால், இப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாகவே இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT