Published : 25 Sep 2013 07:52 PM
Last Updated : 25 Sep 2013 07:52 PM
ஒரு சூப்பர் ஹீரோ கதை என்றால் என்னென்ன இருக்கும்? ஹீரோ முதலில் கலக்கி எடுப்பார். பின்னர் தோல்விகள், அதிலிருந்து மீண்டு வருவார்... இதானே? நடுவில் கொஞ்சம் காதல், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் கலந்துவிட்டால் ஒரு சூப்பர் ஹிட் படம் தயார். உண்மையான சூப்பர் ஹீரோவில் ஒருவர் கிறிஸ்டோபர் ரீவ்ஸ்.
சின்ன வயதிலேயே சாகசம் என்றால் மனிதருக்கு ரொம்பவே விருப்பம். அட்டைக்கத்திகள் செய்துகொண்டு சகோதரருடன் சண்டை, பனிச்சறுக்கு, ஒரு குட்டி விமானத்தில் ஏறி ஹாயாக அட்லாண்டிக் கடலின் மீது ஒரு த்ரில் பயணம்... வாழ்க்கையில் புதிதாக எதையாவது செய்ய வேண்டும்... அது தான் மனிதரின் மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது.
சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டார். சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க நிறைய பேர் யோசித்தார்கள்; சூப்பர்மேன் வேடத்தில் நடித்த பலர் அகால மரணம் அடைந்திருந்தார்கள். அதற்கு முன் ஜார்ஜ் ரீவ்ஸ் என்பவர் குண்டடிபட்டு இறந்திருந்தார். நம்ம ஹீரோவுக்கு தான் சாகசம் பிடிக்குமே. விண்ணப்பம் போட்டுவிட்டார். சில்வெஸ்டர் ஸ்டால்லோன், கிளின்ட் ஈஸ்ட்வுட் முதலிய
மாபெரும் நாயகர்களை பின்னுக்கு தள்ளி 'சூப்பர் மேன்' வாய்ப்பைப் பெற்றார் நடிப்பில் ஆக்ஷனில் பின்னி எடுப்பார் இவர்; டூப் போடலாமே என்றால், “நோ தேங்க்ஸ்!” என்று திடமாக ஒரு வரியில் பதில் வரும். சூப்பர் மேன் படத்தை இயக்குகிற அளவுக்கு மனிதர் வளர்ந்தார். ஹீரோ வேடம் என்றில்லை, எந்த வேடம் நல்ல தீனி என்று தோன்றினாலும் உடனே நடிக்க ஓகே சொல்லிவிடுவார்.
முதல் திருமணம் முறிந்து போய்விட, ஒரு ஹோட்டலில் பாடிக்கொண்டு இருந்த டானாவிடம் கொஞ்சம் காதல், ஒற்றை ரோஸ், ட்ரேட்மார்க் புன்னகை என்று போய் காதலை சொன்னார். அவரும் ஓகே சொன்னார். இப்படி ஒரு ஜோடி இல்லை என்கிற அளவுக்கு உலா வந்தார்கள்.
சூப்பர் மேன் பட ஷூட்டிங் - இவருக்கு மிகவும் பிடித்த குதிரையேற்ற காட்சி. குதிரை கொஞ்சமாக திணறியது; மனிதர் தலைகுப்புற விழுந்தார். முதுகெலும்பு உடைந்து போய்விட்டது. டாக்டர்கள் கஷ்டப்பட்டு ஓட்ட வைத்தார்கள். நுண்ணிய அறுவை சிகிச்சை. எல்லாம் போய் விட்டது என்று டாக்டர்கள் சொன்னார்கள். காரணம் கழுத்துக்கு கீழே ஒன்றும் அசையாது; சூப்பர் மேன் இப்பொழுது சோக மேன் என்று பத்திரிகைகள் எழுதின. டானா வந்தார்; கரங்களை பற்றிக்கொண்டார். மனிதருக்கு ஒன்றும் உணர முடியாது. கழுத்துக்கு கீழே உணர்ச்சியே இல்லையே. கண்கள் பேசின, “நானிருக்கிறேன் உங்களுக்கு!” என்றது அவரின் பார்வை.
ஒன்பது வருடம் இப்படித்தான் வாழ்க்கை போனது. நடுவில் ஒரு முறை இதயம் ஸ்ட்ரைக் பண்ணி நின்று விட்டது. போராடி மீட்டார்கள் இவரை. அரிதிலும் அரிதான ரத்த குறைபாடு வேறு துரத்திக்கொண்டு இருந்தது. புன்னகை மட்டுமே ரீவ்ஸ் முகத்தில்.. சூப்பர் ஹீரோ பாருங்கள்!
என்ன பண்ணப்போகிறார் மனிதர் என்று பார்த்தால் படம் இயக்க கிளம்பிவிட்டார். 'In the Gloaming' என்ற HBO படத்தை சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே முதன்முதலாக இயக்கினார். எலும்பு மஜ்ஜை குறைபாடு வேறு குடைய ஆரம்பித்த நிலையில் ரீவ் அறக்கட்டளையைத் தொடங்கி ஸ்டெம் செல் ஆய்வுக்கு பல மில்லியன் டாலர்களை திரட்டிக் காண்பித்தார். நம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் எழுதினார். தன்னம்பிக்கை பொங்க போகிற இடமெல்லாம் பேசினார், “ஒன்றும் நடக்கவில்லை எனக்கு!” என்று கம்பீரமாக சொல்வார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விழா, அதற்குப் பிறகு ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்று இவரை பேச அழைக்காதே இடமே இல்லை என்கிற சூழல் உருவானது. மாற்றுத் திறனாளிகளுக்கான படத்திற்கு கம்பீரமாக குரல் கொடுத்து எம்மி விருது வென்றார் . தன்னைப் போலவே முடங்கியும் ஜெயித்த ஒரு மனிதனின் கதையை The Brooke Ellison Story எனும் படமாக இயக்கினார். எல்லா
இடத்திலும் டானா கண்டிப்பாக கூட இருந்தார். மாரடைப்பு வந்து இறப்பதற்கு முன் கூட Everyone's Hero என்கிற படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார்.
“நம்முடைய பெரும்பாலான கனவுகள் ஆரம்பத்தில் நிச்சயம் நிறைவேற முடியாததுபோல் தோன்றும். சற்று முயன்றால் அவை நனவாகலாமே என்று தோன்றும். பின்னர் நம் முழு பலத்தையும், தன்னம்பிக்கையையும், வரவழைத்து முயலும்போது அதே கனவுகள் நனவாக முடியாமல் போகாது என்ற நிலை ஏற்படும்!” என்று சொல்லி சாதித்து காண்பித்த இவர் இப்படி இருக்க காரணமான டானா, இவரின் மரணத்துக்கு பின்னும் இவரின் பணியை தொடர்ந்தார். டானா இவரை விட்டு இக்காலத்தில் நீங்கவே இல்லை. “எது தங்களை செலுத்தியது ?” என்று டானாவிடம் கேட்ட பொழுது, “எல்லையில்லா காதல் மற்றும் எதையும் பார்த்துவிடலாம் என்கிற நம்பிக்கை “ என்றார்.
இதுவல்லவோ காதல்!
(செப்.25 - கிறிஸ்டோபர் ரீவ்ஸ் பிறந்தநாள்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT