Published : 24 Nov 2013 12:00 AM
Last Updated : 24 Nov 2013 12:00 AM
ரோமில் சமீபத்தில் திறக்கப்பட்ட பாதாளக் கல்லறைத் தொகுதியின் சுவர் ஓவியங்கள் ‘பெண் குருமார்கள்’ தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளன.
பிரிசில்லா கல்லறைத் தொகுதி என்று அழைக்கப்பட்டும் பாதாள அறையின் சுவர்களில் வரையப்பட்ட பழங்கால ஓவியங்களில் தேவாலயப்பணிகளில் குருமார்களாகத் திகழும் பெண்களின் சித்திரங்கள்தான் இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தக் கல்லறைச் சுவர்களைப் பழுதுபார்க்கும் பணி பூர்த்தியடைந்து சமீபத்தில் திறக்கப்பட்டதால் அங்கிருந்த ஓவியங்கள் முன்பைவிட தெளிவாக பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் உள்ளன. ஆனால் அந்த ஓவியச் சித்தரிப்பு வெறும் கதைநிகழ்வுதானே தவிர அதை அக்காலத்தில் நடந்த நிகழ்வாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று வாடிகன் திருச்சபை மறுத்துள்ளது.
சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த பாதாளக் கல்லறை 16ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது. இதன் சுவரில் கிபி 230-240 காலகட்டத்தைச் சேர்ந்த கன்னிமேரி, குழந்தை யேசுவின் ஓவியம் காணப்படுவதால் அந்த இடம் புகழ்பெற்றது.
இரண்டு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளுக்குள் இந்த இடம் இடுகாடாக இருந்திருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு அடுக்குகள் கொண்ட இந்த இடுகாட்டின் பரப்பளவு 13 கிலோமீட்டர்.
நிஜமல்ல கதை
இங்குள்ள இரண்டு அறைகள்தான் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன. இந்த அறைத்தொகுதியில் காணப்படும் ஓவியத்தின் மையத்தில் பாதிரியார் போன்ற உடை அணிந்த பெண் கைகளை விரித்து ஜெபித்துக்கொண்டிருக்கிறார்.
க்ரீக் சேப்பல் என்று அழைக்கப்படும் இன்னொரு அறைத் தொகுதியில் பெண்கள் குழு, ஒரு விருந்தில் பிரார்த்தனை செய்யும் காட்சி வரையப்பட்டுள்ளது.
பெண்கள் தேவாலயத்தில் குருமார்களாவதற்கு ஆதரவாக தொடர்ந்து போராடிவரும் ‘வுமன்ஸ் ஆர்டினேசன் கான்பரன்ஸ்’ மற்றும் ரோமன் கத்தோலிக்க பெண் குருமார்கள் கழகத்தினர் தங்கள் கோரிக்கைக்கு ஆதரவாக இந்த ஓவியக்காட்சிகள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
வாடிகன் தொல்லியல் ஆணையத்தைச் சேர்ந்த ஃபேப்ரிசியோ பிஸ்கோண்டி இந்தச் சுவர் ஓவியம் குறித்துப் பேசும்போது, இறந்து சொர்க்கத்துக்குப் போன ஒரு பெண்ணைச் சித்தரிக்கும் ஓவியம் என்றும் விருந்து ஓவியக்காட்சியை மரித்தோர் நினைவு விருந்து என்றும் கூறியுள்ளார்.
ரோமன் கத்தோலிக்க தலைமை திருச்சபையான வாடிகன், ஆண்களை மட்டுமே தேவாலய குருமாராக நியமிக்கிறது.
கிறிஸ்து தனது சீடர்களாக ஆண்களே இருக்க வேண்டும் என்று விரும்பியதாகவும் வாடிகன் கருதுகிறது. அந்தக் காலத்தில் பெண் குருமார்கள் இருந்தார்களா என்ற சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடாக இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT