Published : 22 Oct 2013 04:44 PM
Last Updated : 22 Oct 2013 04:44 PM
விஞ்ஞான வளர்ச்சி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அடிப்படை அறிவியல் உண்மை. காகிதத் தயாரிப்புக்காக மரங்கள் வெட்டப்படுவதை, இதற்கு நல்ல உதாரணமாகக் கூறலாம். காகிதத்துக்காக காடுகளில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதைத் தடுப்பதற்காக உருவான தொழில்நுட்பமான "மறுசுழற்சி காகிதத் தாயாரிப்பு" தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, பயன்படுத்திய காகிதத்தையே, மீண்டும் காகிதமாக மாற்றுவதுதான் இதன் சிறப்பு!
பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் மரம், கரும்புச்சக்கை, மூங்கில், வைக்கோல் ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டே காகிதம் தயாரிக்கப்படுகிறது. மரத்தை வெட்டி, அதை கூழாக்கி காகிதம் தயாரிக்கும் முறையே அதிகம் பின்பற்றப்படுகிறது. காகிதத் தயாரிப்புக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கும் வகையில் காகிதம் தயாரிக்கும் ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்தன. இதன் விளைவாக உருவான மறுசுழற்சி காகிதத் தயாரிப்பு தொழில்நுட்பம் பிரபலமானது.
பயன்படுத்திய பின் தூக்கியெறியப்படும் காகிதத்தில் இருந்தே, மீண்டும் காகிதத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்பம்தான் மறுசுழற்சித் தொழில்நுட்பம். இது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. சாலையோரம், தெருக்களில் தூக்கி எறியப்படும் காகிதக் குப்பைகளும், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் கழிக்கப்படும் காகிதங்களுமே இதற்கு மூலப்பொருள்.
மறுசுழற்சி முறையில் காகிதம் தயாரிக்க, ஏற்கெனவே உள்ள உற்பத்தி இயந்திரங்களுடன் டீ-இன்கிங் (காகிதத்தில் அச்சேறிய மையை அழிக்கும் தொழில்நுட்பம்) என்ற நவீன உள்கட்டமைப்பு வசதியை நிறுவினாலே, புதிய தொழில்நுட்பத்துக்கு மாறிவிட முடியும்.
இன்றைக்கும் உலகில் 90 சதவீத காகிதத் தொழிற்சாலைகள் மரங்களை நம்பியே உள்ளன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பரவலானதன் காரணமாக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், அரபு நாடுகள், பின்லாந்து, ஜப்பான், கொரியா என பல நாடுகளில் மரக்கூழ் காகிதத் தொழிற்சாலைகள், மறுசுழற்சி காகிதத் தொழிற்சாலைகளாக மாறி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் மறுசுழற்சி காகிதத் தயாரிப்பு 66 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
காகித மறுசுழற்சிக்கு மாறுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்த முறையில் 1 டன் காகிதம் தயாரிக்கப்பட்டால், 4 ஆயிரத்து 100 கிலோவாட் மின்சாரத்தைச் சேமிக்கலாம். காற்று மாசுபாடு 74 சதவீதம் குறைகிறது. நீர் மாசுபாடு 34 சதவீதம் குறைகிறது. இப்படி சுற்றுச்சூழலைக் காக்கும் பல்வேறு அம்சங்கள் மறுசுழற்சி முறையில் நிறைய உள்ளன. ஆனால், அதுவே மரங்களில் இருந்து ஒரு டன் காகிதம் தயாரிக்க வேண்டுமென்றால் 17 வளர்ந்த மரங்களை வெட்ட வேண்டும்.
இந்தியாவில் 1996ஆம் ஆண்டில் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முதல் தொழிற்சாலை குஜராத்தில் அமைக்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல காகித தொழிற்சாலைகள் மறுசுழற்சிக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை நிறுவ ஆர்வம் காட்டி வந்தாலும், அதை அமைப்பதில் பின்னடைவு இருக்கவும் செய்கிறது. மறுசுழற்சி முறையில் காகிதம் தயாரிக்கத் தேவையான மூலப்பொருளான பயன்படுத்தப்பட்ட காகிதம், நாட்டில் வெறும் 20 சதவீதமே கிடைப்பதாக இந்திய காகித உற்பத்தி சங்கம் கூறுகிறது. எனவே, இந்த மூலப்பொருளுக்காக இந்திய காகிதத் தொழிற்சாலைகள் வெளிநாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் தினமும் ஏராளமான குப்பை உருவானாலும், அதிலிருந்து காகிதம் தரம் பிரிக்கப்படாமல் போவதே இப்பிரச்சினைக்குக் காரணம்.
புவி வெப்பமடைதலைத் தடுக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கோஷம் அதிகரித்துள்ள நிலையில், காகிதத்துக்காக மரங்களை இழக்க வேண்டுமா? அதுவும் மறுசுழற்சி காகிதத் தயாரிப்புத் தொழில்நுட்பம் இருக்கும்போது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT