Published : 28 Nov 2013 12:00 AM
Last Updated : 28 Nov 2013 12:00 AM
பிளஸ் 2 மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்க ளின் பங்கு முக்கியமானது. இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒவ்வொருவரும் சுமார் ஒன்பது லட்சம் பேருடன் போட்டியிடுகிறார். அவர்கள் ஒரு மதிப்பெண் இழந்தாலும் தரவரிசைப் பட்டியலில் ஆயிரம் பேருக்கு பின்னால் தள்ளப்படுகிறார்கள்.
பிளஸ் 2 மாணவர்கள் பலரும் காட்டும் அலட்சியம் ஒன்று இருக்கிறது. பொறியியல் படிப்பைத் தேர்வு செய்யும் மாணவர்கள் கணிதத்தின் மீது அதீத அக்கறை கொள்வார்கள். மருத்துவப் படிப்பை விரும்புவோர் உயிரியல் மீது உயிராக இருப்பார்கள். இந்த ஆர்வத்தில் மற்ற பாடங்களை மறந்துவிடுவார்கள்.
பொறியியல் படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண் அடிப்படையிலும், மருத்துவத்துக்கு வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடங்களின் மதிப்பெண் அடிப்படையிலும், வேளாண் படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களின் மதிப்பெண் அடிப்படையிலும் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, அனைத்துப் பாடங்களிலும் சரிநிகர் ஆர்வம் காட்டி அதிக மதிப்பெண்களை அள்ளுவதே புத்திசாலித்தனம்.
பிரத்தியேகமாக வினா -விடைகள், ப்ளூ-பிரின்ட்களை அரசு தயாரித்துக் கொடுக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வசதியானவர்கள் மட்டுமே சிறப்புப் பயிற்சி மையங்களில் படித்து கூடுதல் மதிப்பெண் பெறமுடியும் என்று நினைக்க வேண்டாம். அரசு அளிக்கும் வினா-விடைகளைப் பார்த்து நீங்களே விதவிதமான கேள்வித் தாள்கள் தயார் செய்யலாம். வாய்ப்பு இருந்தால் பெற்றோர், உறவினர் அல்லது சக மாணவர்களே மாதிரி வினாத் தாள்களை உருவாக்கி பகிர்ந்து தேர்வு எழுதலாம்.
இதுபோன்ற மாதிரித் தேர்வுகளை அடிக்கடி எழுதிப் பயிற்சி பெறுவதால் என்னென்ன பிழைகள் செய்கிறோம் என்பதை நன்கு உணர முடியும். மாதிரித் தேர்வுகளில் பதற்றமின்றி முழு சிந்தனையுடன் பதில் எழுதப் பழகுவதே பொதுத் தேர்வுக்கான சிறந்த பயிற்சி.
இரவு கண்விழித்து தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு படிப்பது நிச்சயமாக பாடத்தை மனதில் நிலைநிறுத்தாது. தூக்கம் இல்லையேல் ஆக்கம் இல்லை. ஒரு நாளுக்கு 8 மணி நேரம் இப்படி உடல், மனம் வருத்தி படிப்பதைவிட ஆர்வத்துடன், கவனச் சிதறல் இல்லாமல் நான்கு மணி நேரம் படிப்பது கூடுதல் பலனைத் தரும்.
ஒவ்வொரு மாணவரும் கல்வியில் தாங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்று சுயமதிப்பீடு செய்துகொள்வது அவசியம். சராசரியாகப் படித்து சராசரியாகத்தான் வருவோம் என்ற தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறியுங்கள். தேர்வுக்குத் தயாராவது ஒரு நுட்பமான கலை, சுவாரஸ்யமான விளையாட்டு. உங்கள் மூளையை உரசி வெற்றிக்கான உத்வேகத்தை அடுத்தடுத்த நாட்களில் அள்ளித் தருகிறேன், படியுங்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT