Published : 24 Nov 2013 12:00 AM
Last Updated : 24 Nov 2013 12:00 AM
பூக்களே அழகுதான். அது காகிதத்தில் செய்ததோ, களிமண்ணில் செய்ததோ. எப்படி இருந்தாலும் பூக்கள் எப்போதும் மலர்ச்சி தருபவை.
அதையே தன் கலைத்திறமைக்குச் சவாலாக எடுத்து செய்துவருகிறார் கைவினைக் கலைஞர் உஷா இளங்கோவன்.
உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் தேடல்தான் இருபது ஆண்டுகளாக உஷா இளங்கோவனை கலைகளின் பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய மாநிலங்களின் ஓவியங்கள், பழங்குடியினரின் ஓவியங்களில் தொடங்கி, ஃபேஷன் ஜுவல்லரி, செயற்கை நீரூற்று, களிமண் பொம்மைகள், மெழுகு, செராமிக்ஸ் ஆகியவற்றில் செய்யப்படும் பொருட்கள், ஆரத்தித்தட்டு, தாம்பூலத்தட்டு என ஏராளமான கலைகளைக் கற்று வைத்திருப்பதுடன் அவற்றைக் கற்பித்தும் வருகிறார்.
“இந்திய நுண்கலைகளுக்கு வெளிநாடுகளில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்கள், படம் வரைவதை மட்டும் சொல்லவில்லை. நம் வாழ்வியல், கலாச்சாரம், மாண்பு என பல செய்திகளையும் ஓவியத்தின் வழியாகத்தான் வெளிப்படுத்துகிறோம்.
அதனாலேயே வெளிநாடுவாழ் இந்தியர்கள் பலர், நம் ஓவியக்கலையைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு நம் பாரம்பரிய ஓவியங்களான வார்லி, சௌரா, கோல்டன் பெயிண்டிங், தூரிகா போன்றவற்றைக் கற்றுத் தருகிறேன்” என்கிற உஷா இளங்கோவன், தற்போது தாய்லாந்தின் புகழ்பெற்ற கலையான களிமண் பொருட்களைச் செய்து வருகிறார்.
“இங்கே இயற்கையான பூக்களை வைத்து அலங்கரிப்பது போல, தாய்லாந்தில் களிமண்ணை வைத்து விதவிதமான பூக்கள் அலங்காரம் செய்வது முக்கியத் தொழில்.
அந்த மண்ணை வரைவழைத்து, அதில் பூக்கள், உருவங்களைச் செய்கிறேன். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தே சம்பாதிக்கும் வகையில் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன்” என்கிறார்.
களிமண்ணில் செய்தவை என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் பல வண்ண மலர்களும், மரங்களும் அழகுடன் மிளிர்கின்றன உஷாவின் கைவண்ணத்தில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT