Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM
சிறந்த கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பில் சேர்ந்திட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் உள்ளன. CAT நுழைவுத் தேர்வு தேசிய அளவிலானது. பட்ட மேற்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும். ஐ.ஐ.எம். நடத்தும் இத்தேர்வுக்கு செப்டம்பரில் விண்ணப்பிக்க வேண்டும். நவம்பரில் தேர்வு நடக்கும். இத்தேர்வு எழுத இரண்டு ஆண்டுகள் கவனமாக படிப்பதுடன் சிறந்தப் பயிற்சியும் தேவை.
குழு கலந்தாலோசனையில் ஆங்கிலப் பேச்சுத் திறன், எழுத்துத் திறன் ஆகியன தேர்ச்சி பெற்ற பின்னர், நேர்முகத் தேர்வு மூலம் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர். குவான்டிட்டி எபிலிட்டி, டேட்டா இன்டர்பிரடேஷன், லாஜிக்கல் ரீசனிங், வேரியபிள் எபிளிட்டி திறன் மூலம் நேர்முகத் தேர்வில் வெற்றி சாத்தியப்படும்.
ஐ.ஐ.எம். மட்டுமின்றி CAT தேர்வில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் மூலம் அமிர்தா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், விஐடி, எஸ்.எஸ்.என். உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் எம்.பி.ஏ. மேற்படிப்பு படிக்கலாம். இந்த நுழைவுத் தேர்வை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். பணியில் இருந்துகொண்டே அனுபவ அறிவைக் கொண்டு இத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் பலர். எனவே, வயதை காரணமாக்கி தேர்வு எழுத அச்சப்படாதீர்.
இத் தேர்வுக்காக தனியார் பயிற்சி பள்ளிகளுக்கு சென்று படித்தால் மட்டும் போதாது, தினமும் இரண்டு மணி நேரம் தனியாக, கடினமாக படிக்க வேண்டும். கலந்தாலோசனையின்போது விண்ணப்பதாரருக்கு படிக்கும் திறன் உள்ளதா என்று ஆய்வு செய்யப்படும். சராசரியாக ஒருவர் ஒரு நிமிடத்தில் 70 முதல் 80 வார்த்தைகள் படிக்க முடியும். ஆனால், இத் தேர்வில் ஒரு நிமிடத்தில் 100 முதல் 120 வார்த்தைகளை படித்து கிரகிக்கக் கூடியத் திறனை பரிசோதனை செய்வர். தொடர் பயிற்சி மூலம் இது வசமாகும்.
CMAT (காமன் மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்) நுழைவுத் தேர்வு இரு ஆண்டுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்புக்கான புதிய முறையிலான நுழைவுத் தேர்வு இது. அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் இத்தேர்வை நடத்துகிறது. ஆண்டுக்கு இரு முறை இத்தேர்வு நடக்கிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பு படிக்கலாம். ஆண்டின் முதல் தேர்வுக்கு செப்டம்பரில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு டிசம்பரில் தேர்வு நடக்கும். இரண்டாம் தேர்வுக்கு டிசம்பரில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு பிப்ரவரியில் தேர்வு நடக்கும். இதன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்புக்கு சேர்க்கை நடத்தப்படுகிறது. இன்னமும்கூட எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்புக்கு நுழைவுத் தேர்வுகள் உள்ளன. அவற்றை நாளை பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT