Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 26 Dec 2013 12:00 AM

மனங்களை ஆய்வு செய்யும் சைக்காலஜி படிப்பு

பிளஸ் 2 முடித்தவுடன் மனம், ஆத்மா சார்ந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு பி.எஸ்சி. சைக்காலஜி படிப்பும், மருத்துவம் சார்ந்த துறையை தேர்வு செய்ய விரும்புபவர்கள் பி.எஸ்சி. மைக்ரோ-பயாலஜி படிப்பும் எடுத்துப் படிக்கலாம். முதலில் பி.எஸ்சி. சைக்காலஜி படிப்பது சம்பந்தமாக அறிந்து கொள்வோம்.

மனிதர்களின் மனங்களை ஆராயக் கூடிய, எண்ணங்களை கணிக்கும்விதமாக ஒரு வித்தியாசமான படிப்பாக பி.எஸ்சி. உளவியல் (சைக்காலஜி) படிப்பு உள்ளது. இதைப் படிப்பவர்கள் மனதிடம், நகைச்சுவை உணர்வுமிக்கவராக இருப்பது அவசியம். மனிதர்களின் மனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்களின் பிரச்சினையை எளிமையாக களைய வேண்டிய பொறுப்புள்ள படிப்பு என்பதால், இதைப் படிப்பவர்கள் மன அழுத்தத்துக்கு உட்படாதவராக, பொறுமைசாலியாக, பிரச்சினையை எளிமையாக கையாளக் கூடியவராக இருக்க வேண்டும்.

பி.எஸ்சி. உளவியல் பாடத்திட்டத்தில் சமூக உளவியல், ஆளுமை உளவியல், மேம்பாட்டு உளவியல் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப்படுகிறது. மருத்துவ உளவியல், சமூக உளவியல், தொழில் நிறுவன உளவியல், தடயவியல் உளவியல் என பல்வேறு பிரிவு பாடங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான வேலைவாய்ப்பு அளிக்க வல்லதாக உள்ளதால், பி.எஸ்சி. சைக்காலஜி படிப்பவர்களுக்கு வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. பி.எஸ்சி. உளவியல் முடித்துவிட்டு மேற்படிப்புகளான எம்.எஸ்சி, உளவியல், எம்.ஏ. உளவியல், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு, மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க் (எம்.எஸ்.டபுள்யு) உள்ளிட்டவை எடுத்து படிப்பதன் மூலம் ஸ்திரமான தொழில் வாய்ப்பு பெற இயலும். சுயமாக ஆலோசனை மையம் வைத்து, மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பதன் மூலம் வருவாய் ஈட்டலாம். குழந்தைகள் கல்வி சார்ந்த ஆலோசனை, தொழில் ரீதியாக மனஅழுத்தம் கொண்டவர்கள் பிரச்சினைக்கு தீர்வு, சிறைக்கூடங்களில் கைதிகளுக்கு மன ரீதியான ஆலோசனை, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனை, அரசு துறைகள் என பலதரப்பட்ட துறைகளிலும் இவர்களுக்கான வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.

பி.எஸ்சி. மைக்ரோ-பயாலஜி படிப்பதுடன் பட்டமேற்படிப்பை படிக்கும் எண்ணம் கொண்டவர்கள் இந்தப் பட்டப்படிப்பை தேர்வு செய்யலாம். மெடிக்கல் மைக்ரோ - பயாலஜி, அக்ரிகல்சர் மைக்ரோ - பயாலஜி, நரேன் மைக்ரோ - பயாலஜி என பல பிரிவுகளை உள்ளடக்கிய கல்விமுறை என்பதால், எந்தத் துறை சார்ந்து செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப படிக்கலாம்.

எம்.எஸ்சி. மைக்ரோ-பயாலஜி, எம்.எஸ்சி. இன்டஸ்டிரியல் அப்லைடு மைக்ரோ - பயாலஜி உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளை முடித்து, ஆராய்ச்சி வரை படித்தால் மட்டுமே மிகப்பெரிய சாதனை புரிய வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்தப் பாடப்பிரிவை பொறுத்தவரை அப்டேட்டாக இருந்தாக வேண்டும். புதுப்புது வைரஸ்கள் உருவாவதும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை கையாளக் கூடிய படிப்பாகவும் உள்ளதால், தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கக் கூடிய படிப்பு.

பி.எஸ்சி. மைக்ரோ - பயாலஜி மட்டும் படித்துவிட்டு பணிக்கு சேரலாம் என்றால், ஆரம்பத்தில் குறைவான சம்பளம் மடடுமே கிடைக்கும். அனுபவம் மூலமே அதிக வருவாய் ஈட்ட முடியும். பட்டமேற்படிப்பு படிப்பதன் மூலம் நிறைவான வருவாய் ஈட்ட முடியும். ஆராய்ச்சி படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள், தாராளமாக தேர்வு செய்யக் கூடிய படிப்பாக இது அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x