Last Updated : 28 Oct, 2013 08:50 PM

 

Published : 28 Oct 2013 08:50 PM
Last Updated : 28 Oct 2013 08:50 PM

இரட்டை வேடம்: வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!

தனக்குப் பிடித்த நடிகர் இரட்டை வேடம் ஏற்று நடிக்கும்போது ரசிகர்களுக்கு எப்போதும் டபுள் குஷிதான். எம்.ஜி.ஆர், சிவாஜி, சிவகுமார், ரஜினி, கமல், சரத்குமார், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா இப்படி பல நடிகர்களும் இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ளனர். இந்தப் படங்களும் தாறுமாறாக வெற்றிப் பெற்ற வரலாறு உண்டு. சரி தமிழ் சினிமாவின் டபுள் ஆக்ஷன் படங்கள் என்றால் பல படங்களை கூறலாம். ஆனால், இப்படங்களின் துவக்கம் எது? வாங்க ரீவைண்ட் செய்து பார்ப்போம்!

தமிழ் சினிமாவில் முதல் டபுள் ஆக்ஷன் படம் 1940ல் வெளிவந்தது. கிராபிக்ஸ், தொழில்நுட்பம் எதுவுமே பெரிதாக தலை நீட்டப்படாத அக்காலத்திலே இது சாத்தியமாக்கப்பட்டது. அக்காலத்திலே ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் கதை உருவப்பட்டது.

சிவாஜி கணேசன் நடித்த முதல் இரட்டை வேடப் படத்திற்கும், தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேடப் படத்திற்கும் தொடர்புள்ளது. இரண்டு படத்திற்கும் ஒரு டைட்டில், ஒரே கதையும் கூட. அது 'உத்தம புத்திரன்'

'யாரடி நீ மோகினி' இந்தப் பாடலை கேட்டவுடன் சிங்கத்தின் கர்ஜனையுடன் செவாலிய சிவாஜி நம் கண்முன் தோன்றுவார்.

இதோ ஒரு சின்ன ப்ளாஷ் பேக். 'த்ரீ மஸ்கடீயர்ஸ்' (Three musketeers) எழுதிய புகழ்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸின் கை வண்ணத்தில் அமைந்த மற்றொரு புகழ் பெற்ற நாவலின் பகுதி தான் 'தி மேன் இந்த அயர்ன் மாஸ்க்' (The man in iron mask).

இந்த நாவலின் கதைப்படி ராஜகுலத்தில் பிறந்த இரட்டையர்கள், தாய் மாமாவின் சதியால் பிரிக்கப்பட்டு ஒருவர் நல்லவராகவும் மற்றொருவர் கெட்டவராக வாழ, இறுதியில் கெட்டவன் திருந்தி அண்ணன் தம்பி இணைந்து மகுடம் சூடுவர். அக்காலத்திலே இக்கதைக்கு மவுசு அதிகம். 1940ஆம் ஆண்டு டி.ஆர். சுந்தரம் இயக்கி பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்த 'உத்தம புத்திரன்' படம் இக்கதையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இதே கதை, இயக்குனர் ஸ்ரீதரின் திரைக்கதையில் 1958ல் 'உத்தம புத்திரன்' என்ற அதே தலைப்புடன் வெளியானது. எப்படி 'தில்லானா மோகனாம்பாள்', 'கரகாட்டக்காரன்', சங்கமமாக உருவகம் கண்டதோ, அதே போல் உத்தமபுத்திரனும் பல வடிவில் உருமாற்றம் கண்டது.

எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'தூங்காதே தம்பி தூங்காதே' கூட கிட்டத்தட்ட இதே கதை தான், என்ன இங்கே தாய்மாமன் கதாபாத்திரம் மேனேஜராக மாற்றம் கண்டது. பாலைய்யாவில் தொடங்கி நம்பியார், நெப்போலியன், நாசர் இப்படி பலர் இந்த தாய்மாமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பல இரட்டை வேடப் படங்களை உத்தம புத்திரனுடன் ஒப்பிடலாம். இக்கதையில் முக்கியமான அம்சமே கதாநாயகன் கதாபாத்திரத்தை விட வலுவாக அமைந்த தாய்மாமன் கதாபாத்திரம். இந்த சகுனி போன்ற சாதுர்யம் மிக்க மாமன் கதாபாத்திரம் வில்லனாக அமையப்பட்ட படங்களின் எண்ணிக்கை அதிகம்.

'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி'யின் கதைக்களத்தை உத்தம புத்திரனின் ஜெராக்ஸ் என்று கூறலாம். இதில் கூட 'ஆடவா பாடவா' என்று வடிவேல் பாடும் பாடல் 'யாரடி நீ மோகினி' சாயலிலேயே அமைந்திருக்கும். 'உத்தம புத்திரன்' அடிப்படையாக கொண்டு அமையப்பட்ட சத்யராஜ் நடித்த 'பங்காளி', திடமான கதை கூட அபத்த இயக்கத்தால் தோல்வியை தழுவும் என்பதை நிருபித்தது.

மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டிருப்பதை வரலாறு என்று அழைப்போம் நாற்பதுகளிலிருந்து - ஐம்பது - எண்பது - தொண்ணூறு ஏன் இரண்டாயிரமாம் ஆண்டிலும் கூறப்படுகின்ற இக்கதைக்களம் வரலாறு தானே. வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x