Last Updated : 12 Oct, 2013 12:37 PM

 

Published : 12 Oct 2013 12:37 PM
Last Updated : 12 Oct 2013 12:37 PM

உறுதியேற்போம் பெண்களே.. மாற்றுவோம் சமூக வழக்கத்தை!

வ்ரிந்தாவன் விதவைகள் வ்ரிந்தாவன் விதவைகள் என்ற சொற்கள் சில நாட்களாக கண்ணிலும் காதிலும் அடிபடுகின்றன. யார் அவர்கள்?

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம்தான் வ்ரிந்தாவன் (பிருந்தாவனம்). அங்கு ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் வசிக்கிறார்கள். அந்த ஊர் ஆண்களுக்கு என்ன ஆயிற்று? அந்த ஊர் ஆண்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. எங்கெங்கோ பிறந்து வளர்ந்து மணமுடித்த பெண்கள் தங்கள் கணவரை இழந்தபின் விரட்டப்பட்டவர்கள். ஏதோ ஒரு காரணம். கணவன் இறந்துவிட்டான், அதோடு அவள் தகுதி, மரியாதை போச்சு. இந்த வருடம் அவர்களில் சிலர் முதன்முறையாக சொந்த ஊரான கொல்கத்தா வருகிறார்களாம். அதனால் தலைப்புச் செய்தி.. ஆச்சரியக் குறியுடன்.

இந்த நூற்றாண்டில் இப்படி யொரு பழக்கம் நிலவுகிறதே என்று நாம் அனைவரும் விசனம், வேதனை, அவமானத்துடன் தலையை குனிந்துகொள்ள வேண்டும். ஒரு ஆண் இருப்பதிலும் இறப்பதிலும், ஒரு பெண்ணை மதிப்பதா மிதிப்பதா என்பது தீர்மானிக்கப்படுவது மானுடத்துக்கே களங்கம்.

ராமாயணத்தில் “திரும்ப வந்துவிடுங்கள் அண்ணா” என்று கேட்கும் பரதனிடம் ராமன் கூறுவார் “கடலில் இரு மரக்கட்டைகள் சேரும். சேர்ந்து மிதக்கும். பின் பிரியும். கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளை உறவு எல்லாமே இப்படித்தான். பிரிவு நிச்சயம்” என்று. நிச்சயமான ஒன்று நடப்பதில் ஒருவரின் சமூக மதிப்பு மட்டும் ஏன் பாதிக்கப்படுகிறது?

ஒரு பெண் கணவனை இழந்தால்,துணையைப் பிரிந்த சோகம் மட்டுமா? குழந்தைகளை தனியாக ஆளாக்க வேண்டும், வருமானக்குறைவை சமாளிக்க வேண்டும். இப்படி பல தடைகளைத் தாண்டவேண்டும். இதில் இந்த சமூக அவமானங்கள் வேறு. “இப்போதுதான் எல்லோரும் பொட்டு வைத்துக்கொள்கிறார்கள், வெள்ளைப் புடவை கட்டுவதில் லையே” என்று சொல்லாதீர்கள். ஏதோ அவர்கள் செய்யக்கூடாததை செய்வதுபோலவும் சமூகம் பெரிய மனது பண்ணி தடுத்தாட்கொள்வது போலவும் தொனிக்கிறது. பிறந்ததி லிருந்து ஒரு பெண் பூ, பொட்டு வைத்துக்கொள்கிறாள், நல்ல உடை உடுத்திக்கொள்கிறாள். பூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்து போகும்போது மஞ்சள் குங்குமம் பெற்றுக்கொள்கிறாள். இது திருமணம் ஆனவுடன் அவளை வந்து சேர்ந்ததல்ல. பின் கணவன் பிரிந்தவுடன் அவை ஏன் நீக்கப்படுகின்றன? புரியவில்லை.

பெண்களின் தூய்மைக்கு ஊறு வரக்கூடாது என்பதற்காக ஒரு காலத்தில் இந்த சமூக அரண்கள் கட்டப்பட்டன என்ற விளக்கம் கிடைக்கும். இப்போதுகூட சில குரல்கள் கேட்கின்றன. “பெண்கள் இருட்டிய பிறகு வெளியே போகாமல் இருக்க வேண்டும், உடையில் கட்டுப்பாடு வேண்டும். அப்போது இந்த பாலியல் வன்முறைகள் நடக்காது” என்று. ஆண்கள் கட்டுப்பாடுடன் இருக்க மாட்டார்களாம். அதனால் பெண்கள் தங்கள் உரிமைகளை குறைத்துக்கொள்ள வேண்டுமாம்.

ஒரு கதை சொல்கிறேன். ஜேப்படி திருடர்கள் மாநாடு நடத்தினார்களாம். அங்கே ஒருவர் சொன்னார்.. “நம் புகைப்படங்களை காவல் நிலையங்களில் வைத்து மானத்தை வாங்குகிறார்கள். நாமா அதற்கு பொறுப்பு? யாரும் சட்டை பாக்கெட்டில் பணத்தை வைக்காவிட்டால் குற்றம் நடக்காதே. ஆகையால் பணம் வைத்திருக்கிறவர்கள்தான் ஜேப்படி கொள்ளைக்கு பொறுப்பு” என்று. சரி என்பீர்களா?

வெள்ளை உடுத்துவதும் பிற அலங்காரம் செய்யாமல் இருப்பதும் கணவனை இழந்த பெண்களின் தர்மமாகப் போற்றி அவர்களை பிணைத்த சங்கிலி இப்போது சற்று தளர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் மங்கள சடங்குகள் நடக்கும்போது அவர்கள் சமமாக நடத்தப்படுவதில்லை. தந்தை இறந்தாலும் அம்மா அம்மாதானே. பிள்ளைக்கோ பெண்ணுக்கோ திருமணம் நடக்கும்போது எந்த சடங்கை எல்லாம் அப்பா இருந்திருந்தால் அம்மா செய்திருப்பாரோ அதை இப்போதும் அம்மா செய்யலாமே. ஆனால் அது நடப்பதில்லை. எவ்வளவோ இறை நிகழ்ச்சிகள், கொலு கொண்டாட்டம் இங்கெல்லாம் வெற்றிலை பாக்கு கொடுக்கும்போது நடக்கும் ஒரு நாடகம்.. ஒன்றை மூடி ஒன்றை மறைத்து! அம்மா மட்டுமல்ல.. அக்கா, அண்ணி, சினேகிதி.. யாராக இருந்தால் என்ன? நம் உறவும் நாம் அவருக்கு தரும் மதிப்பும் அவர்களுக்காகவா, இல்லை அவருடைய கணவர் உயிருடன் இருக்கும் காரணத்துக்காகவா?

குடும்பத்தில் கணவருக்கு முன்பு இறந்த பெண்ணை நினைத்து சில வீட்டில் சுமங்கலி பூஜை செய்வார்கள். இதை செய்பவரின் தாயார் அறுபது வருடம் தந்தையுடன் வாழ்ந்த பின் தந்தை இறந்திருப்பார். இதனாலேயே தகுதியின்மை வந்துவிடுமா? அம்மாவுக்கு அவள் நிறைவாக வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்று போய்விடுமா? இதற்கு ஆண்களை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் பங்கேற்பவர்கள் எல்லோரும் பெண்கள்.

விதவை என்ற சொல்லே மனதுக்கு ஒப்பவில்லை. அவள் வாழ்க்கையின் பெரிய சோகத்தின் ரணத்தை ஆறவே விடுவதில்லை. தர்க்கம், நியாயம், மனித காருண்யம் என்ற எந்த வட்டத்துக்குள்ளும் இந்த பழக்கத்தை கொண்டுவர முடியாது. அதற்கும் மேலாக பெண்ணின் சுயமரியாதையை பாதிக்கும் ஒரு செயல். இந்த நவராத்திரி கொலுவில்கூட ஒதுக்கப்பட்ட ஒரு பெண் என்னிடம் வருத்தப்பட்டார். இது பெண்ணின் மதிப்பு, அவளுடைய மனம், உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டது. அவை விலை மதிக்க முடியாதவை. காயப்படக்கூடாது. இப்போது அரிதாகி வருகிறது என்று சொல்லவேண்டாம். ஒரு பெண்.. ஒரே ஒரு பெண்கூட இப்படி காயப்படக்கூடாது. பெண்கள் அனைவரும் உறுதிபூண்டு இந்த மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இன்றே துவங்கலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x