Published : 14 Mar 2014 12:00 AM
Last Updated : 14 Mar 2014 12:00 AM

டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு: சரியா தவறா - சமூக ஆர்வலர்கள் கருத்து

டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரின் தூக்கு தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தூக்கு தண்டனை சரியானதா, இல்லையா என்ற விவாதத்தை இத்தீர்ப்பு எழுப்பியுள்ளது.

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்:

இந்த தீர்ப்பு வருத்தமளிக்கிறது. குற்றவாளிகளை உருவாக்குவதில் சமூகத்துக்கும் பங்கு இருக்கிறது. தூக்கு தண்டனை எப்போதும் ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்கப்படுகிறது. பணக்காரர்கள், அரசியல்வாதிகள் ஏன் தூக்கு தண்டனை பெறுவதில்லை? தண்டனை என்பது ஒருவர் திருந்துவதற்கு உதவவேண்டும். ஆனால், தூக்கிலிட்ட பின் எப்படி திருந்த முடியும்? பிறர் தவறு செய்ய அஞ்சுவார்கள் என்பதற்காக ஒருவரை தண்டிப்பது தவறு.

பெண்ணிய எழுத்தாளர் வ.கீதா:

தூக்கு தண்டனைக்கு பல பெண்ணியவாதிகள் எதிராகவே உள்ளோம். இவ்வழக்கு டெல்லியில் நடந்ததாலும், ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டதாலும் இந்த வழக்கு அதிக கவனம் பெற்றிருக்கிறது. வாச்சாத்தியில் தாழ்த்தப்பட்ட பெண்களை மிக கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய 284 பேரை தூக்கில் போட முடியுமா? குற்றம் சாட்டப்பட்டவர்களின் சமூக பின்னணியும் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் கே.வனஜா:

“நான் பொதுவாக தூக்கு தண்டனைக்கு எதிரானவர் என்றாலும் இந்த சம்பவம் மிகவும் கொடூரமான முறையில் நடந்துள்ளது என்பதால் இந்த வழக்கில் தூக்கு தண்டனை சரியானதுதான். இது போன்ற அனைத்து வழக்குகளிலும் விரைவாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். டெல்லி சம்பவம் நடந்த அதே சமயத்தில் நடந்த வித்யா மீதான அமில வீச்சு வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x