Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

தஞ்சை பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல் ரகசியம்: வல்லுநர்கள் புதிய தகவல்

உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.

மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கீழே இரு மடங்கு சுமை

பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.

அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

தலையாட்டி பொம்மை போல..

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.

இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் கூறினார்.

சிலை, நாணயங்கள் இருக்கலாம்

ஒடிசா மாநிலத்தில் வரலாற்றுக் கோட்டைகளை ஆய்வு செய்தவரான ஒரிசா பாலு கூறும்போது, நம் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது காட்சிக்காகவும் பக்திக்காகவும் மட்டும் அல்ல. அன்னியர்களால் நமது வரலாறு அழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தான் பிரமாண்டமான கோயில்களைக் கட்டியுள்ளனர். அப்படி பிரமாண்டமாக அமைத்தால்தான் அதன் அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்து பொருட்களைப் பாதுகாக்க முடியும்.

எனவே, பெரிய கோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக் கட்டுமானக் கலையின் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம். கோயிலில் அகழ்வாராய்ச்சி நடத்தித்தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Ground penetrating radar தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள் ஊடுருவி படங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x