Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM
அந்தத் தாய்க்கு இரண்டு மகன்கள். மூத்தவன், குழந்தைகளுக்கே உரிய இலக்கணத்துடன் ஓடியாடி விளையாட, இளையவனோ பிறந்ததில் இருந்தே சோம்பிக் கிடந்தான். அவன் உடல் வளர்ச்சியோடு மூளையின் வளர்ச்சி ஒத்திசைவாக இல்லை. அந்தச் சிறுவன் டவுன் சிண்ட்ரோம் என்கிற குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். உடனே கண்ணீர் விட்டுக் கதறி, விதியை நொந்து உடைந்து போகவில்லை அவர். தன் மகனைப் போலவே இருக்கும் குழந்தைகளின் வாழ்வுக்கு ஏதாவது செய்ய வெண்டுமே என்ற உந்துதலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியைத் தொடங்கினார். இப்படித்தான் ‘ஐக்யா’ பள்ளி உருவானது. ஒவ்வொரு நாளும் இந்தப் பள்ளியின் முன்னேற்றத்துக்கான பணிகளை முன்னெடுத்துச் செய்து வருகிறார் பார்வதி விஸ்வநாத். வேதனையும் துயரமும் நிறைந்திருந்தப் பாதையை நம்பிக்கை என்னும் பேராயுதமேந்தி கடந்து வந்திருக்கிறார். இவருடைய வாழ்க்கை, சோர்ந்துபோகிற மனிதர்க்கெல்லாம் உற்சாகம் தரும் உந்துசக்தி.
சென்னை மைலாப்பூரில் இருக்கும் ‘ஐக்யா’ பள்ளியில் பாப் இசை மெலிதாக அதிர்ந்து கொண்டிருக்கிறது. அந்தத் தாளத்துக்கு ஏற்றபடி நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். கணிப்பொறியில் வார்த்தைகளைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். சிலர் கூட்டாகச் சேர்ந்து மணிகளை மாலைகளாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் அனைவருமே குறைபாடுள்ள குழந்தைகள் என்றால் நம்பமுடியவில்லை.
“இவர்கள் குறைபாடு கொண்டவர்கள்தான், ஆனால் இந்த உலகில் உங்களைப்போல, என்னைப்போல வாழ இவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு” என்று அக்குழந்தைகளின் குரலாகப் பேசுகிறார் பார்வதி விஸ்வநாத்.
மகன் காட்டிய வழி
“எங்கள் பூர்வீகம் தஞ்சாவூராக இருந்தாலும் என் அப்பாவின் வேலை காரணமாக நாங்கள் குஜராத்தில் வசித்தோம். மும்பையில் கல்லூரி படிப்பை முடித்தேன். கல்லூரி முடித்ததும் திருமணம் நடக்கும்வரை வேலைக்குப் போகும் இயல்பான வாழ்க்கைதான் என்னுடையதும். திருமணம் முடிந்ததும் புகுந்தவீடு, கடைமைகள் என வேறு உலகத்துக்கு மெல்லப் பழகியது வாழ்க்கை. அப்போதுதான் என் இரண்டாவது மகன் பிரபாகரன் பிறந்தான். வட்ட முகமும், செப்பு வாயுமாகச் சிரித்த அவன், என் வாழ்க்கையை திசைதிருப்புவான் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்று சொல்லும் பார்வதி, ‘ஐக்யா’ உருவாவதற்கான உந்துதல் தன் மகனிடம் இருந்தே கிடைத்தது என்கிறார்.
“என் இளைய மகனின் ஒவ்வொரு அசைவும், வளர்ச்சியும் மூத்த மகனைப்போல இல்லையோ என்று எனக்குத் தோன்றியது. அதனால் அவனை அடிக்கடி மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றோம். சென்னையில் இருக்கும் எங்கள் மருத்துவரிடம் இவனைப் பற்றி ஆலோசனை கேட்டு எழுதினோம். நேரில் பார்த்தால்தான் எதையும் சொல்லமுடியும் என்றார் அவர். உடனே சென்னை வந்தோம். பத்து மாதம் நிரம்பிய என் மகனைப் பார்த்ததுமே, ‘டவுன் சிண்ட்ரோம்’ பாதிப்புதான் இது என்று சொல்லிவிட்டார். அதோடு, ‘இவன் எதற்கும் உதவமாட்டான். இவனால் இனி எந்தப் பயனுமே இல்லை. அதனால் மூத்த மகன் மீது நம்பிக்கை வைத்து அவனை ஆளாக்கு’ என்றார். என் மகன் எதற்கும் உதவ மாட்டான் என்று அவர் சொன்ன வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. இவர் எப்படி அதை முடிவு செய்யலாம் என்று நினைத்து நினைத்து மருகினேன். இல்லை, என் மகன் நிச்சயம் சாதிப்பான் என்று நான் உறுதியாக நம்பினேன். அதைச் செயல்படுத்துவதற்கான வழிகளைத் தேடினேன்” என்று சொல்லும் பார்வதி, தன் மகனுக்காக நேரம் ஒதுக்கி, அவன் உலகைப் புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சியின் முடிவாகத்தான் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி உருவெடுத்தது.
புரிந்துகொள்ளப்படாத குழந்தைகள் உலகம்
“என் மகனைச் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்தேன். அங்கு எனக்கும் சேர்த்தே பயிற்சியளிக்கப்பட்டது. என் மகனின் குறைபாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ள அது சார்ந்த அறிவு தேவை என்று முடிவுசெய்தேன். அதற்கான சிறப்புப் படிப்பை முடித்தேன். அந்தப் படிப்புதான் என் மனதை ஆக்கிரமித்திருந்த கேள்விகளுக்கு விடை தந்தது. முழுமையாகப் புரிந்துகொள்ளப் படாமலேயே இந்தக் குழந்தைகளின் உலகம் களையிழந்து போகிறதே, இதை எப்படிச் சரிசெய்வது? இவர்களைத் தீண்டத்தகாதவர்கள் போல இந்தச் சமூகம் ஒதுக்கிவைப்பது எத்தனை துயரம் நிறைந்தது. நானும் ஒரு பார்வையாளராகக் கடந்துபோவதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் மகனுக்குக்குக் கிடைத்த வழிகாட்டல் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென நினைத்தேன். நாங்கள் குடியிருந்த வீட்டிலேயே 1990இல் ‘ஐக்யா’வைத் தொடங்கினேன்.
காலையில் என் கணவரும் மூத்த மகனும் வெளியே கிளம்பும் வரை அது வீடு. அவர்கள் அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் கிளம்பியதும் அது சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பேர்தான் வந்தனர். அப்படி வந்த குழந்தைகளிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து நிறைய குழந்தைகள் வந்தார்கள். ஒருகட்டத்தில் அந்த இடம் போதாமல் வேறு இடத்துக்குப் பள்ளியை மாற்றினோம். இப்போது சென்னையில் மூன்று இடங்களில் எங்கள் பள்ளி செயல்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் தொடர்ந்து வரமுடியாது என்று சொன்னவர்களுக்காகக் கடலூரிலும் விருதாச்சலத்திலும் எங்கள் வழிகாட்டுதலில் பள்ளி செயல்படுகிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்கள் பள்ளியில் பயிற்சி பெற்றுச் சென்றிருக்கிறார்கள்” என்கிறார் பார்வதி.
சிறப்புப் பள்ளி நல்லது
இங்கு வரும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பாதிப்பு என்பதை முதலில் இனம் காண்கிறார்கள். பிறகு அதற்கேற்ப அவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. சிறப்புக் குழந்தைகளைப் பொதுப் பள்ளியில் சேர்ப்பதை விட இதுபோன்ற சிறப்புப் பள்ளிகளில் சேர்ப்பதால், குழந்தைகள் தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் இவர்.
“தங்கள் குழந்தைகள் பொதுப்பள்ளியில் படிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் எண்ணம். அதில் தவறேதும் இல்லை. அப்படிப் படிக்கிற குழந்தைகளின் நடத்தையில் கொஞ்சம் மாற்றம் ஏற்படுமே தவிர, அவர்களின் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்புக்கான சாத்தியங்கள் குறைவுதான். ஆனால் சிறப்புப் பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பயிற்சியுடன், அவர்களது திறமைகளை மெருகேற்றிக் கொள்ளவும் கற்றுத் தரப்படுகிறது. பொதுவாக சிறப்புக் குழந்தைகள் கணினியில் வர்ணம்
அடித்தல் மாதிரியான அடிப்படைகளை மட்டுமே கையாள்வார்கள். ஆனால் இங்கே படிக்கிற குழந்தைகள் வார்த்தைகளைத் தட்டச்சு செய்கிற அளவுக்குத் தேறியிருக்கிறார்கள் என்பதே வெற்றிதானே.
இன்னும் சிலர், சிறப்புக் குழந்தைகளை 18 வயதுவரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அதன் பிறகு அவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கவைத்து விடுவார்கள். இது தவறான அணுகுமுறை. அவர்களும் மற்றவர்களைப் போல உணர்வுகளும் உணர்ச்சிகளும் நிறைந்தவர்கள். அவர்களுக்கென்று ஏதாவது ஒரு வழியையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இங்கே குழந்தைகளுக்குப் பகுதி நேரமாக மாலை தொடுத்தல், தையல் வேலை, நெசவு வேலை, பாக்குமட்டையில் தட்டுகள் செய்தல் போன்றவற்றைக் கற்றுத் தருகிறோம். இங்கிருந்து வெளியே சென்ற பிறகும் அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறதுதானே” என்று சொல்லும் பார்வதி, சிறப்புக் குழந்தைகள் குறித்த மக்களின் பார்வையில் மாற்றம் வேண்டும் என்கிறார்.
மக்கள் மனம் மாற வேண்டும்
“அந்தக் காலத்தில் சிறப்புக் குழந்தைகளை அருவருப்புடன் பார்த்தார்கள். இப்போது அப்படிப் பார்க்கிறவர்களின் சதவீதம் குறைந்திருக்கிறதே தவிர, மக்களின் மனநிலையில் மாற்றம் வரவில்லை. அந்த மனநிலை மாறும்போதுதான் சிறப்புக் குழந்தைகளும் மற்றவர்களைப் போலவே இயல்பாக வாழமுடியும். அந்த நம்பிக்கையில்தான் 23 ஆண்டுகளாக ‘ஐக்யா’ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று சொல்கிறவரின் கண்களில் முதுமையைத் தாண் டிய உறுதியும் நம்பிக்கையும் ஒளிர்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT