Published : 21 Mar 2014 05:44 PM
Last Updated : 21 Mar 2014 05:44 PM

நீலகிரியில் எச்.சி.எஃப். தொழிற்சாலையை மேம்படுத்துவது எப்போது?

# நீலகிரியில் பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையிலும், மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் உதகையில் 1967-ம் ஆண்டு எச்.பி.எஃப். தொழிற்சாலை திறக்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையின் மூலம், போட்டோ ரோல் ஃபிலிம், எக்ஸ்-ரே, ஃபிலிம், கருப்பு - வெள்ளை ஃபிலிம், போட்டோக்களை பிரின்ட் போடப் பயன்படும் ‘ப்ரோமைட் பேப்பர்’ உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இங்கு 5,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், 1 லட்சம் பேர் மறைமுகமாகவும் பயனடைந்துவந்தனர்.

மேலும், தொழிற்சாலையை விரிவுபடுத்த எண்ணிய மத்திய அரசு, 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய எக்ஸ்-ரே தொழிற்சாலையை உதகை இந்து நகர் பகுதியில் அமைத்தது. 1991-ம் ஆண்டுக்குப் பின் தொழிற்சாலை பெரும் நஷ்டத்துக்குத் தள்ளப்பட்டது. தொழிற்சாலையின் தொழிலாளர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது, 650 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இவர்களுக்கு முறையாகச் சம்பளமும் வழங்கப்படுவதில்லை. தொழிற்சாலையை விரைவில் புனரமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள்.

# நீலகிரியின் முக்கிய வாழ்வாதாரம் தேயிலை விவசாயம். ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் தேயிலைத் தொழிலில் நேரடியாக 65 ஆயிரம் சிறு குறு விவசாயிகளும் மறைமுகமாக சுமார் ஒரு லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளனர். 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்டதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் தோட்டங்களை விற்றுப் பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துவருகின்றனர். இதனால், பல தேயிலைத் தோட்டங்கள் கட்டிடங்களாக மாறி, சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரித்துவருகிறது. ஒரே வாழ்வாதாரமான பசுந்தேயிலைக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கக் கோரி போராடிவருகின்றனர். ஆனால், எந்த அரசும் இவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை.

# சர்வதேசச் சுற்றுலா நகரமான நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரப் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. இங்கு ஆண்டுதோறும் 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக இருக்கும் இடங்களையே கண்டு சலித்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து 1,13,224 சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இயற்கையை மாசுபடுத்தாத வகையிலும் நீலகிரிக்கு மேன்மேலும் எடை அழுத்தம் கொடுக்காத வகை யிலும் சுற்றுலாத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்பது சுற்றுச்சூழலியலாளர்களின் கோரிக்கை.

# நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைக் கவர கேபிள் கார் திட்டம் பல ஆண்டு காலமாகப் பரிசீலனையில் உள்ளது. அவ்வப்போது சுற்றுலாத் துறை அமைச்சர்கள் கேபிள் கார் திட்டம்குறித்து ஆய்வு செய்வார்கள். திட்டத்துக்கான தொகை அதிகம் என்பதால், நிதி ஆதாரத்தைக் காரணம் காட்டித் திட்டத்தைக் கிடப்பில் போடுவார்கள்.

# மலை மாவட்டமான நீலகிரியிலிருந்து மருத்துவம் மற்றும் அவசரத் தேவைக்கு சாலைப் போக்குவரத்து மட்டுமே உள்ளது. இதனால், கால விரயம் ஏற்படு கிறது. எனவே, அவசரக் காலங்களில் ஹெலிகாப்டர் சேவையைத் துவக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். ஆனால், இந்தத் திட்டமும் ஆய்வு நிலையிலேயே உள்ளது.

# நீலகிரியில் 56% வனப்பரப்பு உள்ளது. இதனால் வனச் சட்டங்கள் கடுமையாக அமலில் உள்ளன. இந்நிலையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் தனியார் காடுகள் உள்ளன. தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தினால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஆட்சியர் தலைமையிலான மாவட்டக் குழுவிடம் அனுமதி பெற்ற பின்னர்தான், அந்த நிலங்களை வாங்கவோ, விற்கவோ வேண்டிய நிலை உள்ளது. இதனால், சொந்தமாக ஏராளமான நிலம், மரங்கள் இருந்தும் அந்த உரிமையாளர்கள் திருமணம், சடங்கு மற்றும் மருத்துவச் சிகிச்சை போன்ற அவசரக் காலங்களில்கூட நிலங்களை விற்கவோ, மரங்களை வெட்டி விற்கவோ முடியாத நிலை உள்ளது. எனவே, சட்டத்தின் விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்பது நில உரிமையாளர்களின் நீண்ட காலக் கோரிக்கை.

# அவினாசி தொகுதிக்குப் பில்லூர் அணையிலிருந்து குடிநீர் கொண்டுசெல்வதற்காகக் கொண்டுவரப்பட்டது அத்திக்கடவு கூட்டுக் குடிநீர்த் திட்டம். இதன் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டுவருகின்றனர்.

# நீலகிரியில் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட இடங்கள் கான்கிரீட் காடுகளாக மாறிவருகின்றன. இங்கு அனுமதி பெறாமலும் முறையில்லாமலும் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் தாறுமாறாகக் கட்டப்பட்டுவருகின்றன. பெரும்பான்மையான கட்டிடங்கள் மலைச் சரிவுகளிலும் மலை முகடுகளிலும் கட்டப்பட்டுள்ளதால், கூடுதல் எடை, அழுத்தம் காரணமாக நிலச்சரிவு, மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. பல கட்டிடங்களில் கழிப்பறைகளின் கழிவுநீர்த் தொட்டிகள் பூமிக்கு அடியில் பாதுகாப்பு இல்லாத வகையில் கட்டப்பட்டுள்ளதால், கழிவுநீர் கசிவு மூலம் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அரசு இவற்றை முறைப்படுத்தி அபாயங்களில் இருந்து காக்க வேண்டும் என்கிறார்கள் சமூக அக்கறைகொண்டவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x