Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM

எம்.டிசைன் படிப்புக்கு அமோகமான எதிர்காலம்

கற்பனை வளத்துடன், மாறுபட்ட சிறப்பான கோணங்களில் சிந்திப்பவர்களுக்கான படிப்பு மாஸ்டர் ஆஃப் டிசைன். கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை புதிய பொறியியல் யுக்தியுடன், புது மாடல்களில் கற்பனைத் திறனுடன் வடிவமைப்பதே இப்படிப்பின் அடிப்படை. பொறியியல், எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.ஏ. கலை, அறிவியல் படித்தவர்கள் இதில் சேரலாம்.

இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஐ.ஐ.டி. மும்பை நடத்தும் CEED (Comman Entrance Exam for Design) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வுக்கு செப்டம்பரில் ஆன்லைனில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடக்கும். கவனிக்க.. மூன்று ஆண்டு பட்டப் படிப்பு முடித்தவர்கள் இதை எழுத முடியாது. 4 ஆண்டு பொறியியல் அல்லது முதுகலை படித்தவர்கள் மட்டுமே எழுத முடியும்.

3 மணி நேரம் நடக்கும் இத்தேர்வு 2 தாள்கள் கொண்டது. முதல் தாளை ஆன்லைனில் எழுத வேண்டும். 2-ம் தாள் எழுத்துத் தேர்வு. முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் 2-ம் தாளை திருத்தம் செய்வார்கள். 2-ம் தாள் மதிப்பெண்களைக் கொண்டே தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். தேர்வுக்குச் செல்பவர்கள் பென்சில், ரப்பர் மற்றும் ஓவியம் வரைவதற்கான உபகரணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

மும்பை, டெல்லி, கான்பூர், குவஹாத்தி ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.டி.கள், பெங்களூரின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டேராடூனில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் பெட்ரோலியம் எனர்ஜி, ஜபல்பூரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.டி.எம் கல்வி நிறுவனம் ஆகிய இடங்களிலும் இப்படிப்பு உள்ளது. CEED தகுதித் தேர்வு மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களும் தனியாக எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு நடத்துகின்றன.

பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் புராடக்ட் டிசைன் அண்ட் இன்ஜினீயரிங் சிறப்பு பாடப் பிரிவு உள்ளது. மும்பையில் விஷுவல் கம்யூனிகேஷன், அனிமேஷன், இன்டராக் ஷன் டிசைன், மொபிலிட்டி அண்ட் வெயிக்கிள் டிசைன் (ஆட்டோமோட்டிவ் டிசைன்) ஆகிய ஐந்து சிறப்பு பாடப் பிரிவுகளில் ஒன்றைத் தேர்வு செய்து படிக்கலாம். டெல்லி, கான்பூரில் இண்டஸ்ட்ரியல் டிசைன் சிறப்பு பாடப் பிரிவு, டேராடூனில் இண்டஸ்ட்ரியல் டிசைன், புராடக்ட் டிசைன், டிரான்ஸ்போர்ட்டேஷன் டிசைன் ஆகியவை உள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து படிக்கலாம்.

இந்த படிப்பை முடித்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் கொடுக்க உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் காத்துக் கிடக்கின்றன. 100 சதவீத வேலைவாய்ப்பு கொண்ட இப்படிப்பை பொறியியல் படித்த பலரும் அறியாமல் இருக்கின்றனர். பொறியியல் அல்லது முதுகலை படித்தவர்கள் இப்படிப்பில் சேர்ந்தால் வளமான வாழ்வு நிச்சயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x