Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM
அந்த அறையில் நடுநாயகமாக மூன்று பெண்கள் நெக்லெஸ், காதணி மற்றும் கையில் அடுக்கடுக்காக வளையல்களுடன் புதுக்கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர். தகதகவென்று மினுமினுக்கும் சிகப்பு சேலையில் அவர்கள் முகத்தில் திருவிழாக்களை தாண்டவமாடுகிறது. அவர்கள் மூன்றுபேரும் கர்ப்பிணிகள்.
அவர்களைச் சுற்றி அம்மாக்கள், அக்காக்கள், தங்கைகள், தோழிகள், உறவினர்கள் அமர்ந்திருக்கின்றனர். அது டெல்லியில் உள்ள ஹோலும்பி காலன் குடிசைப்பகுதியில் உள்ள சமூக மையம். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தாயாகப்போகும் அந்தப் பெண்களுக்கு அப்பகுதியில் பணிபுரியும் சைல்ட் சர்வைவல் இந்தியா அமைப்பினர் நடத்தும் நவீன வளைகாப்பு இது. இந்தியில் வளைகாப்பு நிகழ்ச்சி கோத் பராய் என்று அழைக்கப்படுகிறது. தாய் வீட்டிலிருந்தும், புகுந்த வீட்டிலிருந்தும் சீர்கள், பலகாரங்கள், நகைகள் கொடுத்து, வரப்போகும் குழந்தையையும், தாயையும் வாழ்த்தும் வைபவத்தை இந்த அமைப்பினர் சற்று நவீனமாக மாற்றியுள்ளனர்.
குழந்தை பெறப்போகும் தாய்மாருக்கு, தட்டுநிறைய நிலக்கடலை, கீரை மற்றும் பழங்களைப் பரிசாகத் தருகின்றனர். இரும்புச்சத்தும் விட்டமின் ‘சி’-யும் அதிகம் நிறைந்த உணவுகளைப் பற்றி அந்தக் கர்ப்பிணிகளுக்கு விளக்கப்படுகிறது. குழந்தை பெறுவதற்கு முன்பு மட்டுமல்ல பிரசவமான பின்னரும் கடைபிடிக்க வேண்டிய உணவூட்டம் குறித்து சமூகப்பணியாளர்கள் மற்றும் அனுபவம் மிக்க பெண்கள் கர்ப்பிணிகளுக்கு விளக்கும் நிகழ்ச்சியும் சேர்ந்தது தான் இந்த நவீன வளைகாப்பு.
உலகத் தாய்மார்களின் நிலை-2013 அறிக்கையின்படி 2011ஆம் ஆண்டில் 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் 16 லட்சம் பேர் இந்தியாவில் இறந்துள்ளனர். உலகில் 5 வயதுக்குக் கீழே இறக்கும் குழந்தைகளில் 24 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உணவூட்டப் பற்றாக்குறையால் இறக்கின்றனர். இங்கே பிறக்கும் குழந்தைகளில் 28 சதவீதத்தினர் பிறக்கும்போது எடைகுறைவாக பிறக்கின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 44 சதவீதம் பேர் போதுமான எடை இன்றியே வளர்கின்றனர். குழந்தைப் பருவத்தில் சரியாக உணவூட்டம் கிடைக்காமல் போகும் நிலையில் அந்தக் குழந்தையின் ஆயுள் முழுவதும் அதன் பாதிப்புகள் நீடிக்கக் கூடியவை.
ஒரு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது, தாயின் ஆரோக்கியம். இந்தியாவில் திருமணமாகும் பெண்களில் பாதி பேர் ரத்தசோகை உள்ளவர்களாகவும், மூன்றில் ஒரு பங்கினர் உணவூட்டப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருப்பதாக யுனிசெப் அமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் கர்ப்பம், குழந்தை பிறப்பு மற்றும் தாய்ப்பால் வழங்கும் பருவத்தில் ஏற்கனவே ஆரோக்கியமற்றுக் காணப்படும் பெண்கள் மிகவும் மோசமான உடல்நிலை பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
டெல்லியில் உள்ள ஹோலும்பி குர்ட் மற்றும் ஹோலும்பி காலன் குடிசைப்பகுதிகளில் பிள்ளைப்பேறுக்காகக் காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்குச் செய்யப்படும் நவீன வளைகாப்பு நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக சைல்ட் சர்வைவல் இந்தியா அமைப்பின் தோஷி கூறுகிறார். “அவர்களைப் பொருத்தவரை இது ஒரு கொண்டாட்டம். எல்லாரும் அவர்களிடம் இருக்கும் நல்ல உடைகளை உடுத்தி இங்கே வருகின்றனர். கர்ப்பிணிகளின் குடும்பத்தினர் மட்டுமல்ல சுற்றி வசிப்பவர்களும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதால் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் திருமணமாகாத யுவதிகளும் கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு உணவூட்டத்தின் அருமை தெரியவருகிறது” என்கிறார்.
ஒரு பெண் கர்ப்பம் அடைந்த தகவல் கிடைத்ததுமே சைல்ட் சர்வைவல் இந்தியா அமைப்பினர் அந்தப் பெண்ணுக்கு உணவூட்ட ஆலோசனைகளைக் கொடுக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
நமது சமூகத்திலேயே கடைபிடிக்கப்படும் சடங்குகளைக் கொண்டு அவற்றின் வழியாக ஆரோக்கிய விழிப்புணர்வைப் பரப்புவதில் சைல்ட் சர்வைவல் இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
ஒரு குழந்தை நலவாழ்வு வாழவேண்டுமெனில், இங்கே பெண்களின் ஆரோக்கியம் மேம்படவேண்டும். ஒரு நாட்டின் சமூகப் பொருளாதார நிலை மோசமாக இருக்கிறதெனில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இல்லை என்பதே பொருள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT