Published : 04 Jan 2014 12:00 AM
Last Updated : 04 Jan 2014 12:00 AM
ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 115 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்டது.
இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் போர்த்விஸ்க், ரான்கின், பிளான்ஸ் ஆகியோர் அறிமுகமாகினர்.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது.
கிறிஸ் ரோஜர், டேவிட் வார்னர் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். 6-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 22 ஆக இருந்தபோது ஆஸ்திரேலியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஸ்டுவர்ட் பிராட் பந்து வீச்சில் வார்னர் ஸ்டெம்புகளைப் பறிகொடுத்தார். இதையடுத்து ரோஜருடன், ஷேன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை ஸ்டோக்ஸ் பிரித்தார். அவர் ரோஜரை 11 ரன்களில் வெளியேற்றினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் நீடிக்கவில்லை. ஸ்டோக்ஸின் அபாரமான பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து கிளார்க் வெளியேறினார். அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கினார். மறுமுனையில் வாட்சன் 43 ரன்களிலும், ஜார்ஜ் பெய்லி
1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 5 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் என்ற மோசமான நிலையை ஆஸ்திரேலியா எட்டியது. ஆனால் அடுத்து ரோஜருடன் ஜோடி சேர்ந்த பிராட் ஹேடின் ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்டது. இங்கிலாந்து பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நிதானமாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். இதனால் 5 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் என்ற நிலையை எட்டியது.
ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 225 ஆக உயர்ந்தபோது ஹேடின் ஆட்டமிழந்தார். அவர் 90 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதில் 13 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் 142 பந்துகளில் சதமடித்தார்.
ஹேடினுக்குப் பின் வந்த ஜான்சன் 12 ரன்களிலும், ஹாரிஸ் 22 ரன்களிலும், பீட்டர் சிடில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதில் ஹாரிஸும் சிடிலும் ஸ்டோக்ஸ் வீசிய அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 326 ஆக இருந்தபோது 115 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் ஆட்டமிழந்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பந்து வீசி 19.5 ஓவர்களில் 99 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஸ்டுவர்ட் பிராட் 2 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், போர்த்விஸ்க்
தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. கேப்டன் அலைஸ்டர் குக், கேர்பெர்ரி ஆகியோர் ஆட்டத்தைத் தொடங் கினர். ஸ்கோர் 6 ரன்களை எட்டியபோது இங்கிலாந்து தனது முதல் விக்கெட்டை இழந்தது. மிட்செல் ஜான்சனில் வேகப்பந்து வீச்சில் கேர்பெர்ரி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இதையடுத்து ஜேம் ஆண்டர்சன் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. குக் 7 ரன்களுடனும், ஆண்டர்சன் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT