Last Updated : 27 Oct, 2013 03:26 PM

 

Published : 27 Oct 2013 03:26 PM
Last Updated : 27 Oct 2013 03:26 PM

மங்கிவரும் நீதித் துறை சுதந்திரம்

அரசியல்வாதிகள் பேசும்போதோ அல்லது பேசாமல் செயல்படும்போதோ அவர்களை நாம் மிகவும் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டும். அரசியல் சட்டத்தைத் திருத்தப்போகிறோம், மேம்படுத்தப்போகிறோம் என்று அவர்கள் சொன்னால், நாம் கூடுதல் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். அரசியல் சட்டத்தின் துணையோடு ரகசியமாக ஊடுருவி என்ன நடக்கிறது என்று பார்ப்பதே அவர்களுடைய திட்டம். அதை யாரும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருந்தால் துணிச்சலடைந்து மேலும் மேலும் அதே திசையில் பயணிப்பார்கள். தங்களுடைய நலனுக்காக, அதிக அதிகாரங்களைப் பெறுவதே அவர்களுடைய ஒரே நோக்கம். அதற்காக எதைச் சேதப்படுத்தவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். எல்லா அரசியல்வாதிகளிடமும் எல்லாக் காலங்களிலும் எச்சரிக்கையாகவே இருங்கள்.

- எச்.எல்.மென்கென், 'அரசியல் சட்டம்' நூலில்.

து 1993 அக்டோபர் 6. ஒரேயொரு தீர்ப்பின் மூலம் இந்திய உச்ச நீதிமன்றம் உலக நீதிமன்றங்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறிவிட்டது. பதிவில் உள்ள வழக்குரைஞர்கள் சங்கத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம் அதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அந்தச் சக்தி கிடைத்தது. தன்னுடைய நீதிபதிகளைத் தானே தேர்வுசெய்து நியமித்துக்கொள்ளும் அதிகாரத்தைச் சட்டப்பூர்வமாக அது தனக்குத்தானே வழங்கிக்கொண்டது. அந்த முடிவை சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர். நீதித் துறையின் சுதந்திரத்தைக் காப்பதற்கான நடவடிக்கை இது என்று பாராட்டினர்.

அடுத்த 20 ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்றம் தன்னுடைய சுதந்திரச் செயல் பாட்டில் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டு வந்தது. அந்தச் சுதந்திரத்துடன்தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு, கனிமச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், மனிதக் கழிவை மனிதர்களே அகற்றி தலையில் சுமந்துசெல்லும் அவலம், மாநிலங்களின் இலவசத் திட்டங்களை மக்களுக்கு வழங்குவதற்கான நடைமுறை போன்ற பல விவகாரங்களில் அது மிகச் சுதந்திரமாகத் தீர்ப்பு வழங்கியது. காவல் துறையின் அக்கிரமங்களைக் கடுமையாகக் கண்டித்தது.

காப்புரிமைச் சட்டங்களுக்கு உள்பட்டு மருந்து மாத்திரைகளின் விலைகளை மக்கள் வாங்கும் அளவுக்குக் கட்டுப்படுத்தும் தீர்ப்புகளை வழங்கியது.

உச்ச நீதிமன்றத்துக்குக் குறி

இந்த மாதிரியான வழக்குகளில் சுதந்திரமாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை மக்களும் சமூகத்தின் பல்வேறு தரப்பும் வரவேற்றாலும், அதன் சுதந்திரத் தன்மையால் 'பாதிக்கப்பட்டவர்கள்' இதைக் கட்டுப்படுத்தியே தீர வேண்டும் என்று அதற்குக் குறிவைத்தார்கள்.

“நீதித் துறை நியமனங்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே மேற்கொள்வது சரிதான்” என்ற பொதுக்கருத்தை அவர்கள் உடைக்கலாயினர். “நீதிமன்றச் செயல்பாடுகள் சுதந்திர மாக இருக்க வேண்டும்” என்று முன்னர் கூறிய குரல்கள், “நீதிமன்றச் செயல்பாடு கள் வரம்புக்குள் இருக்க வேண்டும், கட்டுப்படுத்தப்பட வேண்டும், கண்காணிப்பு அவசியம்” என்றெல்லாம் கூற ஆரம்பித்தன.

நிர்வாகம் செய்த தவறுகளை நீதித் துறை கண்டித்ததாலேயே, நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடுவதாகக் கருதப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அன்றே சொன்னார் ரூமா பால்

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ரூமா பால் அன்றே சொன்னார், “நீதித் துறையில் நீதிபதிகளின் நியமனம், இடமாற்றம் ஆகியவற்றில் நிர்வாகத் தரப்பின் தலையீடு இல்லாமல் முற்றாக இப்போது தவிர்த்துவிட்டோம். இதற்காக நாம் பட்ட பாடும், அரசியல் சட்டத்துக்கு அளித்த விளக்கமும் வீண் போகவில்லை என்கிற அளவுக்கு இந்தச் சுதந்திரம் நமக்குப் பலனைத் தந்துவிட்டதா? என்னைப் பொறுத்தவரை இல்லை” என்றார் ரூமா பால்.

வந்தது புதிய மசோதா

மாநிலங்கள் அவையில் 'அரசியல் சட்ட 120-வது திருத்த மசோதா 2013' நிறைவேறிவிட்டது. நீதிபதிகளைத் தேர்வு செய்யும் நடைமுறையில் நிர்வாகத் துறை, நீதித் துறை இரண்டும் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்கவும், வெளிப்படையான தன்மை நிலவவும் இந்தத் திருத்த மசோதா கொண்டுவரப்படுவதாகக் காரணம் விளக்கப்பட்டுள்ளது. நீதித் துறை நியமன ஆணையத்தை (ஜே.ஏ.சி.) இந்தத் திருத்த மசோதா கொண்டுவருகிறது. பிரிட்டனில் உள்ள நீதித் துறை நியமன ஆணையம் அடிப்படையில் இந்த மசோதாவும் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பிரிட்டனில் உள்ள நீதித்துறை நியமன ஆணையத்தில் அரசியல்வாதிகள் விலக்கியே வைக்கப்பட்டுள்ளனர். அரசியலுடன் தொடர்புள்ளவர்களுக்கும் அதில் இடம் இல்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'நீதித் துறை நியமன ஆணையம் 2013' மசோதாவில் மனதை உறுத்தும் கணக்குக்கு இடம் தரப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த ஆணையத்தில் மொத்தம் ஆறு உறுப்பினர்கள் இடம் பெறுவர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் இருவரும் இடம் பெறுவர். சட்டத் துறை அமைச்சராக இருப்பவர் பதவிவழி உறுப்பினராக இந்தக் குழுவில் இடம்பெறுவார்.

இந்த நால்வர் போக, 'சமூகத்தின் மிக உயர்ந்த நிலையில் இருக்கும்'இருவர் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள். அதாவது, இந்த நியமன ஆணையத்தில் நீதித் துறைக்கும் நீதித் துறையைச் சாராத மற்றவர்களுக்கும் சம இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. நீதித் துறையின் முக்கியத்துவம் குறைக்கப் பட்டிருக்கிறது. அந்த இரு முக்கிய உறுப்பினர்களை யார் தேர்ந்தெடுப்பது? பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி அடங்கிய குழு தேர்வு செய்யும். இதன் மூலம் அரசியல் நியமனங் களுக்கு வாய்ப்பு அதிகம் ஏற்பட்டிருக்கிறது.

ஆபத்தான நான்காவது பிரிவு

இந்த மசோதாவிலேயே நான்காவது பிரிவுதான் மிகவும் ஆபத்தானது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் இந்தப் பிரிவின் மூலம்தான் வழங்கப்படுகிறது. அதாவது, பணிமூப்பு உள்ள நீதிபதியே உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக இருப்பார் என்ற நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. தகுதியுள்ள பணி மூப்பு நிறைந்த நீதிபதியை வேறு யார் வேண்டுமானாலும் முந்தக்கூடும் என்ற நிலைமை இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நியமனங்கள் என்றால், அரசிடமும் தொடர்புள்ள மாநிலத்தின் முதலமைச்சரிடமும் கருத்துக் கேட்கும் நடைமுறையைப் புகுத்துவதால் அரசியல் ரீதியிலான நியமனங்களே நடைபெறும் ஆபத்தை அதிகப்படுத்துகிறது மசோதா. இதன் மூலம் நீதித் துறையின் சுதந்திரம் அழிய வகை செய்யப்பட்டுள்ளது. அதைவிட வினோதம், இந்த நீதித் துறை நியமன ஆணையம் என்பது அரசியல் சட்டத்தின்படி யான ஏற்பாடாகக் கொண்டுவரப்படவில்லை.

நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாலே போதும் என்ற வகையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆளும் கட்சி அல்லது கூட்டணி உறுப்பினர்கள் ஆதரித் தாலே இதற்கான உறுப்பினர்களின் தேர்வு நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்டுவிடும். நீதித் துறை நியமன ஆணையத்தை உருவாக்கியிருக்கும் விதமும் அதன் பதவிக்காலம்குறித்து தெளிவான வரை யறை இல்லாததும் 1993-ல் நடந்த வழக்கின் உணர்வுக்கு முரணாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது (ஆம் என்பதே பதில்). நீதிபதிகளின் நியமனத்திலும் இட மாறுதலிலும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு உள்ள அதிகாரமே நீதித் துறை யின் சுதந்திரச் செயல்பாட்டுக்கு முக்கிய அடிப்படையாகத் திகழ்ந்துவருகிறது. அதிலேயே கைவைப்பது நீதித் துறையின் செயல்பாட்டில் அரசியல் ஆதிக்கத்தைக் கொண்டுவருவதற்காகத்தானே தவிர, நீதித் துறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருவதற்காகவோ, சுதந்திரச் செயல்பாட்டை மேலும் தீவிரப்படுத்தவோ அல்ல என்று புரிந்துகொள்ளலாம்.

1993 வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பை ஆதரிக்கும் நீதிபதி குல்தீப் சிங், “நீதித் துறையின் சுதந்திரம் என்பது நீதிபதிகளின் நியமனத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குள்ள அதிகாரத்துடன் பின்னிப்பிணைந்தது” என்கிறார். மத்திய அரசின் இந்த உத்தேச மசோதா வுக்கு எதிராக அரசியல் சட்ட அடிப்படையிலேயே எதிர்ப்புக் கிளம்புவது தவிர்க்க முடியாதது, அது அவசியமும்கூட. நீதிபதிகளின் நியமனத்தில் நிர்வாகம் தலையிடுவதும் அதனால் நீதித் துறையின் சுதந்திரம் சீர்குலைவதும் ஆபத்தானவை.

எனவே, நீதிமன்றங்களில் இனி எழும் விவாதங்களைப் பொருத்ததே இதன் எதிர்காலம். பல்வேறு நாடுகளில் நீதித் துறை நியமனங்கள் எப்படி மேற்கொள்ளப் படுகின்றன என்று ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து பிறகு ஒரு முடிவுக்கு வருவது மிகவும் அவசியம்.

அமெரிக்காவில் அரசியல்மயம்

அமெரிக்காவில் நீதிபதிகளை அரசியல் வாதிகள்தான் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்கள்தான் நியமிக்கின்றனர். எனவே, தங்களைத் தேர்வுசெய்த அரசியல் கட்சியின் முடிவுகளை நீதிபதிகள் கேள்வி கேட்பதும் எதிராகத் தீர்ப்பு கூறுவதும் மிகவும் அபூர்வமாகவே நடக்கிறது. எனவே, இந்த நடைமுறை சுதந்திரமான நீதித் துறைச் செயல்பாட்டுக்கு சரிவராது.

ஜெர்மனியில் ஜனநாயகபூர்வம்

ஜெர்மனி நாட்டில் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். இதனால் வெறும் ஆளும் கட்சி அல்லது கூட்டணி மட்டுமல்ல… எதிர்க்கட்சிகளாலும் ஏற்கப்படக்கூடிய நடுநிலைமையாளர்கள்தான் நியமிக்கப்பட முடியும். எனவே, அமெரிக்க நடைமுறையில் உள்ள ஆபத்து இங்கு தவிர்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவிலும் அரசியல்மயம்

தென்னாப்பிரிக்காவில் நீதித் துறை ஆணையத்தில் அரசியல் ஆதிக்கமே அதிகம். 15 அரசியல்வாதிகளும் 8 வழக்கறிஞர்களும் குழுவில் இடம்பெறுவர். நீதித் துறையின் சுதந்திரம் பறிபோக இதைவிட வேறு வினையே வேண்டாம்.

பிரிட்டன் முன்மாதிரி

பிரிட்டனில் உள்ள நீதித் துறை நியமன ஆணையமே இவற்றில் சிறந்தது. அதில் அரசியலைச் சாராதவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், நீதித் துறையின் சுதந்திரத்தன்மை உறுதி செய்யப்படும். நீதித் துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதில் நீதிபதிகளை விட யாருக்கும் அதிக அக்கறை இருக்க முடியாது. நாகரிகமுள்ள, ஜனநாயக சமுதாயத்துக்குச் சுதந்திரமான நீதித் துறை மிகமிக அவசியம். எது சுதந்திரம் என்பது சுருக்கமாகப் பதில் அளிக்க முடியாத பூடகமான கேள்வி.

நீதித் துறை என்பது நிர்வாகத் துறையின் நேரடி, மறைமுகக் கட்டுப்பாடுகளுக்கு உள்படாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம். நீதிபதிகள் அரசுகளிடமிருந்து மட்டும் சுதந்திரமாக விலகியிருக்க வேண்டும் என்றில்லை, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிட மிருந்தும் விலகியிருக்க வேண்டும். உள், வெளி அழுத்தங்களுக்கு இடம் தந்தால் தீர்ப்புகள் நடுநிலையோடு இருக்காது.

சுதந்திரம் என்பது பேரத்துக்குரியதா?

பிரிட்டனில் உள்ள நடைமுறையைப் பின் பற்றிக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 'நீதித் துறை நியமன கமிஷன் -2013' மசோதா வானது, அதன் அடிநாதமான நிர்வாகத் துறையின் ஆதிக்கத்திலிருந்து விலகியிருக் கும் அம்சத்தை அப்படியே உள்வாங்காமல் விட்டுவிட்டது வியப்பாக இருக்கிறது.

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் கார்டன் பிரௌன் கூறியதைப்போல, “நீதித் துறை நியமனத்தில் தனக்குள்ள எஞ்சிய அதிகாரங்களைக்கூட விட்டுத்தருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.” நீதிபதிகள் நியமனத்தில் பலதுறை களைச் சேர்ந்தவர்களையும் ஆலோசனை கலப்பதுதான், பிரிட்டிஷ் நடைமுறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுதான் இந்தியா போன்ற நாடுகளின் தேடலுக்கு விடையாக இருக்க முடியும்.இந்திய நீதித் துறை நியமனங்கள் தொடர்பாக இப்போது நடக்கும் விவாதங்களைப் பார்க்கும்போது, அதன் சுதந்திரத்தன்மை பாதிக்கப்படுவது குறித்துக் கவலைப்படாமல் சமாதானம் செய்துகொண்டு விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

சர்வாதிகார நாட்டில் அதன் வரம்பற்ற அதிகாரங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட வர்கள்தான் சுதந்திரமான நீதித் துறை குறித்துக்கவலைப்படுகிறார்கள். பாகிஸ்தானைச் சேர்ந்த பாத்திமா புட்டோ அவர்களில் ஒருவர். அந்த நாட்டை ராணுவ ஆட்சியாளர்கள்தான் பெரும்பாலான காலம் ஆண்டிருக்கிறார்கள். சந்தேகத்துக்குரிய நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக பாத்திமா புட்டோவின் தாத்தா (சுல்பிகர் அலி புட்டோ) தூக்கிலிடப்பட்டார். துணை நிலை ராணுவத்தால் அவருடைய தந்தை (மீர் முர்துஸா புட்டோ) சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாத்திமா புட்டோ இந்த நிலைகுறித்து எழுதுகிறார்: “சுதந்திரமான பத்திரிகைகள் உள்ள நாட்டில் நாம் வாழவில்லை. சுதந்திரமான நீதித் துறை - அல்லது எந்த விதத்திலுமான நீதித்துறை - இருக்கும் நாட்டில் நாம் வாழவில்லை. வன்முறை சார்ந்த, பழிவாங்கும் அரசை எதிர்த்து நிற்க எந்தவிதப் பாதுகாப்புக் கேடயமும் இல்லாமல் வாழ்கிறோம்!”

சந்தோஷ் பால், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x