Published : 17 Sep 2013 02:40 AM
Last Updated : 17 Sep 2013 02:40 AM

நாடு செழிக்கோணும் நல்ல மழை பெய்யோணும் - மழைக்காக அரிதாரம் பூசும் மக்கள்

“திருத்தணி சேர் அத்தினாபுரத்து அரசு புரியும் தருமராஜன் பரமபத உதவி திருவைகுண்ட பதி உலவும் சரித நாடகமாய் பாட”

தாளக்கட்டு மாறாமல் தடதடக்கிறார் தருமர் வேஷம் கட்டும் பி.பரதேசி. சாமி பெயர் என்பதால் இந்த பெயரை வீட்டுக்கு வீடு பார்க்க முடிகிறது. இவர் மட்டுமல்ல, பானாமூப்பன்பட்டியில் யாரைக் கேட்டாலும் மேடை நாடக பாடலை சிம்பொனியாய் சிலிர்க்கிறார்கள். இன்று, நேற்றல்ல.. ஆறு தலைமுறையாய் இவர்களின் ரத்தத்தில் ஊறிப்போன உறவு நாடகம்!

உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு செல்லும் வழியில் இருக்கிறது பானாமூப்பன்பட்டி. நான்கு பக்கமும் நாகமலை சூழ்ந்திருக்க, கிண்ணத்தில் விழுந்த பந்துபோல் பதுங்கிக் கிடக்கிறது இந்த மல்லிகை கிராமம். ஊர்ப் பலகை கண்ணில்படும் முன்பாகவே மணம் வீசி நம்மை வரவேற்கின்றன வயல்வெளிகளில் மலர துடிக்கும் மல்லிகை அரும்புகள்! இங்கே வெடிக்கும் மல்லிகை மொட்டுக்கள் வெளிநாடு வரை மணம் பரப்புகின்றன.

இன்றைக்கு இவ்வளவு செழிப்போடு இருக்கும் பானாமூப்பன்பட்டி ஆறு தலைமுறைக்கு முன்பு இப்படி இல்லை. வறட்சியும் பஞ்சமும் வாட்டி வதைத்தன. அப்போதுதான், 'முத்தாளம்மனுக்கு நாடகம் போட்டால் மழை மாரி பெய்யும்' என்றொரு உபாயத்தை யாரோ சொன்னார்கள். நாடகம் போட கையில நாலு காசு வேணுமே.. என்ன செய்வது? மந்தையில் கூட்டம் போட்டுப் பேசினார்கள். வீட்டுக்கு வீடு போட்ட வரி, கொட்டகை சின்னத்தம்பிக்கும், திரைச் சீலைக்காரனுக்குமே பத்தாது போலிருந்து. “டவுனுலருந்து ராஜபார்ட், ஸ்திரீ பார்ட்டெல்லாம் கூட்டியாரணுமே.. பணத்துக்கு எங்கப்பா போறது? “ அந்தச் செலவையும் கூட்டிக் கழித்துப் பார்த்த பெருசுகள், “ஏலேய்.. செலவு கைய கடிக்கும் போலிருக்கேப்பா” என்று எச்சரிக்கை மணி அடித்தார்கள். அப்போது இளைஞர்கள் சிலர், “வெளியிலருந்து எதுக்கு ஆளுங்கள கூட்டியாரணும். நாமளே வேஷம் கட்டுனா என்ன?” என்றார்கள். இந்த யோசனைக்கு மந்தைக் கூட்டத்தில் அமோக வரவேற்பு. நாடக ஏற்பாடுகள் அமர்க்களமாய் தொடங்கின.

அந்தக் காலத்தில் பெண்கள், அதுவும் கிராமத்துப் பெண்கள் மேடை ஏறி நடிக்க வருவது சாத்தியமில்லை என்பதால் ஆண்களே பெண் வேஷம் கட்டவும் ரெடியானார்கள். மக்களுக்கு நீதி சொல்ல வேண்டும் என்பதற்காக மகாபாரதத்தை மையமாக வைத்து தருமர் நாடகத்தின் ஸ்கிரிப்ட்டை அவர்களே எழுதினார்கள். புதுமுயற்சி என்பதால் மாதக்கணக்கில் ஒத்திகை நடத்தினார்கள். 'இந்தப் பங்குனிக்குள்ள நாடகம் போட்டாகணுமப்பா' இளசுகளுக்கு பெருசுகள் டெட்லைன் வைத்தார்கள்.

பங்குனியில் நாடகத் திருவிழா! செவ்வாய்கிழமை தொடங்கிய தருமர் நாடகம் பத்து நாட்கள் நடந்தது. பத்தாவது நாள் காலை.. பட்டாபிஷேகம் முடியும் நேரத்தில் மழை பிடித்துக் கொண்டது. காடு கழனிகள் நிறைந்ததால் மகிழ்ந்து போனார்கள் மக்கள். நாடகத்தில் நடித்தவர்களை எல்லாம் கடவுளாக கும்பிட ஆரம்பித்தார்கள். இன்று வரை கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

காலாகாலத்துக்கும் நாடகம் தடைபடக் கூடாது என்பதற்காக நாடகத்தின் ஸ்கிரிப்ட்டை ஓலைச் சுவடிகளில் பதித்து வைத்திருக்கிறார்கள் பானாமூப்பன்பட்டியின் மூதாதையர்கள். அப்படியும் ஒரு சிக்கல். ஊருக்குள் சிறு சிறு பிரச்னைகள் வெடித்ததால் கடந்த பத்து ஆண்டுகளாக தருமர் நாடகம் தடைபட்டுப் போனது. அதன் பாதிப்புகளை அந்த மக்கள் நன்றாக உணர்ந்தார்கள். மறுபடியும் விவசாயம் பொய்த்து பொலிவிழந்து போனது பானாமூப்பன்பட்டி. 'தருமர் நாடகம் எப்பப் போடுவாங்க?' என்று ஏக்கப்பெருமூச்சு விட்டார்கள் மக்கள். அந்த ஏக்கத்தை போக்க வந்தார் வேலுச்சாமி.

பானாமூப்பன்பட்டிக்காரரான வேலுச்சாமி, அருப்புக்கோட்டையில் செட்டிலானவர். ஊர் நன்மைக்காக ஊரேகூடி நடத்தும் தருமர் நாடகம் சிறு சச்சரவுகளுக்காக தடைபட்டுக் கிடப்பது சரியில்லை என்று எடுத்துச் சொல்லி புரியவைத்தார் வேலுச்சாமி. இதற்கே அவர் மாதக் கணக்கில் அலைய வேண்டி இருந்தது. ஆளாளுக்கு தெற்கும் வடக்குமாய் இழுத்ததால் பங்குனியும் போய்விட்டது. ஆனாலும், விடாதவர், இந்த தருமர் நாடகம் நடத்த ஊருக்குள் அனைத்துத் தரப்பினரையும் சம்மதிக்க வைத்தார். 'பங்குனி போனா என்ன.. ஆனியில் நடத்திட்டாப் போச்சு' என்ற வேலுச்சாமியின் யோசனையை கிராமம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

நாடகத்துக்கு நாள் குறித்ததுமே பானாமூப்பன்பட்டிக்கு பழையபடி பளிச் களை வந்துவிட்டது. வெளியூரில் இருந்த சொந்தபந்தங்களுக்கு விஷயத்தைச் சொல்லி சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டார்கள் மக்கள்.

“பத்து வருசம் ஆகிட்டதால பலபேருக்கு நாடகத்தோட கதையும் பாட்டும் சரியா ஞாபகம் இல்ல. ஊடும்பாடும் கதையை மறந்துட்டாங்க. அதனால, வேலைவெட்டிய முடிச்சுட்டு வந்து ராத்திரிக்கு ராத்திரி ஒத்திகை பார்த்தோம். எட்டு மணிக்கு தொடங்கினா பதினோரு மணி வரை ஒத்திகை நடக்கும். யாருக்கும் அவ்வளவா எழுதப் படிக்கத் தெரியாதுங்கிறதால, படிக்கத் தெரிஞ்சவங்க பாடிக் காட்டுவாங்க. அதை மனசுக்குள்ள வாங்கிக்கிட்டுத்தான் நடிக்கிறவங்க பேசவும் பாடவும் செய்வாங்க. இது கஷ்டமான வேலைன்னாலும் எங்காளுங்க பத்தி பத்தியா வசனம் பேசி அசத்திட்டாங்க. கிட்டத்தட்ட ரெண்டரை மாசம் ஒத்திகை நடந்துச்சுன்னா பாத்துக்குங்களே..” என்று ஆச்சரியம் காட்டுகிறார் தருமர் வேஷம் கட்டும் பெரியவர் பி.பரதேசி.

“அந்தக் காலத்துல பத்து நாள் நாடகம் நடக்குமாம். ஆனா, இப்ப அதெல்லாம் தாக்குப் பிடிக்காது. அதனால மூணு நாளா குறைச்சிக்கிட்டோம். வருசா வருசம் நாடகம் போட்டாலும் செலவு தாக்குப்பிடிக்க முடியாதுங்கிறதால ரெண்டு வருஷத்துக்கு ஒருவாட்டி நாடகம் போடுறதா முடிவு பண்ணிக்கிட்டோம். நாடகத்துக்கு நாள் குறிச்சாச்சுன்னா பதினைஞ்சு நாளைக்கு ஊரே விரதமா இருக்கும். கவிச்சி தவிச்சி எல்லாம் பொலங்க மாட்டோம். நாடகத்துல வேஷம் கட்டுற யாரும், சொந்த வீட்டை தவிர வேற எங்கயும் கை நனைக்க மாட்டோம். சாதி வித்தியாசம் இல்லாம கிராமத்துல இருக்கிற எல்லா சாதிக்காரங்களுக்கும் நாடகத்துல நடிப்பாங்க. கிட்டத்தட்ட ஐம்பது பேராச்சும் வேஷம் கட்டுவாங்க. சுத்த பத்தம் இல்லாதவங்களோ, தப்புத் தண்டா பண்றவங்களோ இந்த மேடையில் ஏறமுடியாது. மீறி ஏறுனா, வாயைக் கட்டிப் போட் டுரும். அதேமாதிரி, பொண்டு பொருசுக யாரும் இந்த மேடையில ஏறமாட்டாங்க. இளந்தாரிகள் கேட்டாங்கனுட்டு பபூன், டான்ஸ் காமிக் ஆளுங்கள மட்டும் வெளியிலருந்து கூட்டிட்டு வந்து நடிக்க வைச்சோம். ஒரு தடவ, அவங்களும் சுத்தபத்தமில்லாம வந்து ஏடாகூடமாகிப் போச்சு. அதனால, எங்கள தவிர யாரும் மேடையில ஏற்ரது இல்லை” என்கிறார் சந்திரகாந்தி பெண் வேஷம் கட்டும் எம்.பரதேசி.

“இந்த வருசமும் நாடகம் போட்டதும் நல்லா மழை பெஞ்சிருக்கு. மழைக்காக மட்டுமில்லைங்க, தருமர் நாடகம் போட்டால் சுத்துப் பட்டியில இருக்கிற சனங்க கையில பூத்தட்டு, மாலைகளோட வந்திருவாங்க. குழந்தை வரம், மகனுக்கு வேலை, கணவருக்கு உடம்பு சொகமாகணும்னு ஒவ்வொருத்தரு மனசுக்குள்ளயும் ஒரு பிரார்த்தனை இருக்கும். தருமர் காலடியில பூக்களை போட்டுட்டு, வேண்டுதலையும் சொல்லுவாங்க. அவரு கையில விபூதிய அள்ளிக் குடுத்து, 'நீ நெனச்சு வந்த காரியம் நல்லபடியா நடக்கும் போ”ன்னு வாக்குக் குடுப்பாரு. அதுபடியே நடந்தும் இருக்கு. வாக்குப் பலிச்சவங்க மறு நாடகத்துக்கு கட்டாயம் வந்து வணங்கிட்டுப் போவாங்க. யாரா இருந்தாலும் ஒழுக்கத்தோட வாழணும். மாற்றான் மனை நோக்கக் கூடாது. அதிக வட்டி வாங்கக் கூடாது. மோச நாசம் பண்ணக் கூடாதுன்னு புத்தி சொல்லுற கருத்துக்களையும் நாடகம் மூலமா மக்களுக்கு சொல்லுவாங்க. மூணாவது நாள் அதிகாலையில பட்டாபிஷேகத்தோட நாடகம் முடியும். அப்படியே, வேஷம் கலைக்காம அத்தனை பேரும் கிராமத்துக்குள்ள ஊர்வலமா வருவாங்க. அப்ப அவங்களுக்கு வீடு தவறாம அபிஷேகம் செஞ்சு வழிபாடு நடத்துவாங்க. அவங்கள பொறுத்தவரை அந்த தருமனே நேரில் வந்து காட்சி குடுக்குறதா நம்புறாங்க” என்கிறார் வேலுச்சாமி.

'இந்தக் காலத்திலும் இப்படியா? 'ஆச்சரியத்தை அசைபோட்டபடியே கிராமத்து தெருக்களில் நடக்க.. ஒரு வீட்டுத் திண்ணையில் 'மூஷியே வ... வா.. முன்னோடியே வ... வா... மூவர் , தேவர், யாவர் புகழும் முதல்வனே யுகா!' விநாயகர் துதி பாடிக் கொண்டிருந்தது நாடக கிராமத்தின் நாளைய தலைமுறை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x