Published : 07 Jan 2014 12:00 AM
Last Updated : 07 Jan 2014 12:00 AM

தங்கர்பச்சான் கதைகள் நூல் இன்று வெளியீடு

தங்கர்பச்சான் கதைகள் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

1983-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் எழுதிய குறு நாவல்களும், சிறு கதைகளும் அடங்கிய தொகுப்புதான் “தங்கர்பச்சான் கதைகள்” என்ற பெயரில் ஒரே நூலாக வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து தங்கர்பச்சான் நமது நிருபரிடம் கூறியதாவது:-

என்னுடைய அசல், படைப்புத்திறன் இலக்கியம்தான். திரைப்படம் அல்ல. பார்வையாளர்கள் விருப்பத்துக்காகவும், எனது விருப்பத்துக்காகவும் கலந்து உருவாக்குவதே திரைப்படம். எனது பெரும்பாலான திரைப்படங்கள், இலக்கியப் படைப்பில் இருந்து உருவானவைதான்.

திரைப்படங்களுக்காக கதை எழுதுவதைவிட, இலக்கியப் படைப்புகளையே திரைப்படமாக மாற்றுவதில்தான் எனது கவனம் இருக்கிறது. அந்த வகையில், என்னை எழுத்தாளனாக உருவாக்கியதில் பங்கு வகிக்கும் நாஞ்சில் நாடன் எழுதிய “தலைகீழ் விகிதங்கள்” என்ற நாவல்தான் “சொல்ல மறந்த கதை” என்ற பெயரில் திரைப்படமாக உருவானது.

“கல்வெட்டு” என்ற சிறுகதையே “அழகி” என்ற பெயரில் திரைப்படமானது. அம்மாவின் கைப்பேசி என்ற குறுநாவல் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இதுபோல மேலும் திரைப்படமாக உள்ள பல சிறுகதைகள், இந்த தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன.

இந்த நூல் வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராய அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. திரைப்பட இயக்குநர்கள் மகேந்திரன், பாலு மகேந்திரா, வெற்றிமாறன், ராம், பத்திரிகையாளர் ஞாநி, கவிஞர் மனுஷ்யபுத்திரன், நடிகர்

சத்யராஜ், உளவியல் மருத்துவர் அபிலாஷா, எழுத்தாளர்கள் தமிழ்மகன், கண்மணிகுணசேகரன், ராஜுமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நூலின் விலை ரூ.210 என்றார் தங்கர்பச்சான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x