Published : 14 Mar 2014 08:34 PM
Last Updated : 14 Mar 2014 08:34 PM

வேலைவாய்ப்பு இல்லாமல் நாடோடிகளான தருமபுரி மக்கள்!

# தருமபுரி தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். நிரந்தர வேலைவாய்ப்புக்கான ஆதாரங்கள் அதிகமாக இங்கு இல்லை. பெரும்பாலான மாதங்களை வறட்சி ஆக்கிரமிப்பதால், விவசாயத்தை நம்பியிருந்தவர்கள், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களின் கல் குவாரிகள், கேரள பேக்கரிகள், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஆகியவற்றை நோக்கிச் செல்கிறார்கள்.

சமீப காலமாக அரூர், பென்னாகரம், தருமபுரி ஆகிய இடங்களில் தலா ஒரு தொழிற்பேட்டை அமைக்க ஏற்பாடு நடந்துவருகிறது. அந்தப் பணிகளை விரைந்து முடித்து, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கோரிக்கை.

# தும்பல அள்ளி அணை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டுகிடக்கிறது. இந்த அணையைத் தூர்வாரி, தென்பெண்ணை ஆற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டுவர வேண்டும் என்பது இந்தப் பகுதி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையிலிருந்து எட்டுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்குக் கால்வாய் நீட்டிப்பு செய்துதருமாறு கடந்த 13 ஆண்டுகளாக விவசாயிகள் போராடிவருகின்றனர். மழைக் காலத்தில் சின்னாற்றில் வெளியேறும் நீரை ஏரிகளில் சேமிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், விவசாயம் நசிந்து வருகிறது.

# தருமபுரியில் அதிக வறட்சிக்கு உள்ளாகும் பகுதி பென்னாகரம். எட்டிப் பார்க்கும் தூரத்தில் காவிரி ஓடினாலும் ஆறு தாழ்வான பகுதியில் இருப்பதால், அது பாசனத்துக்குப் பயன்படுவதில்லை.

# அதியமான்கோட்டை, வெண்ணாம்பட்டி, பென்னாகரம் சாலை, பாலக்கோடு சாலை ஆகிய நான்கு இடங்களில் ரயில்கள் கடக்கும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கெல்லாம் மேம்பாலம் அமைக்க வேண்டும். இதற்கு ரயில்வே துறை ஒப்புதல் அளித்து, மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ளன.

எனவே, விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை முடித்து, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண வேண்டும். தருமபுரி - மொரப்பூர் 30 கிலோ மீட்டர் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையும் முதற்கட்ட ஆய்வை மட்டுமே எட்டியுள்ளது.

# சாலைகளே இல்லாத மலைக் கிராமங்கள் இந்தத் தொகுதியில் அநேகம். அங்கு அடிப்படை வசதிகளுக்கே மக்கள் ஏங்குகிறார்கள். இதனால், மலைக் கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

# தொகுதியில் பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகம். ஆனால், அதற்குச் சரியான விலை கிடைப்பதில்லை. எனவே, தக்காளியை ஊறுகாய், ஜாம் போன்று மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்யத் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை.

# நகரில் ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொலைநோக்குத் திட்டங்கள் மூலம் அதைச் சீரமைக்க வேண்டும். தருமபுரி நகரை ரயில் கடக்கும்போது நகரைச் சுற்றி நான்கு இடங்களில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

# மேட்டூரில் தொழிற்சாலைக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைந்துவருகிறது. தொழிற்சாலைக் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பது மேட்டூர் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x