Published : 04 Feb 2017 06:17 PM
Last Updated : 04 Feb 2017 06:17 PM

நினைவலைகள்: க.சீ.சிவக்குமாரும்... அக்கதையும்...

1999 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். செம்மலர் இடது சாரி இலக்கிய இதழில் மாதந்தோறும் பிரசுரமாகும் சிறுகதைகளில் ஒன்றுக்கு சிகரச்சிறுகதை முத்திரை கொடுத்து வந்தார்கள். இப்படி முத்திரை அளிக்கப்படும் கதைகளுக்கு சிறப்பு பரிசும் அளித்து வந்தனர்.

இப்படி சிகர அந்தஸ்து சிறுகதைகளுக்கு கொடுப்பதால் படைப்பாளிகள் சிறந்த சிறுகதைகளாக எழுதி செம்மலருக்கு அனுப்பும்படி அறிவிப்பும் செய்திருந்தார்கள். அந்த வரிசையில் மாதந்தோறும் இடதுசாரி மூத்த எழுத்தாளர்களின் கதைகளாக வர தொடங்கியிருந்தது.

அந்த நேரத்தில் ஒரு நாள் என் வீட்டிற்கு செம்மலர் அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம். ‘செம்மலர் இதழுக்கு சிகரச்சிறுகதையில் முத்திரை பதிக்கும்படியான கதைகளை நீங்களும் எழுதி அனுப்பலாமே!’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் கையொப்பமும் இருந்தது.

அதற்கு முன்பு எஸ்.பி.பியின் மேடைப்பேச்சை சில இடங்களில் கேட்டிருக்கிறேனே ஒழிய நேரில் அறிமுகமில்லை. அவர் என் கதையை படித்து விட்டு எந்த இடத்திலும் பாராட்டியதாகவும் நினைவில்லை. இருந்தாலும் அப்படியொரு மூத்த தோழரே கடிதம் எழுதும்போது நாம் கதை எழுதாமல் இருப்பது தகாது என்று ஒரு கதையை ‘குரங்காட்டி’ என்ற தலைப்பில் எழுதி அனுப்பினேன்.

அக்கதை செம்மலர் அலுவலகத்தை அடைந்து 15 நாள் இருக்குமோ; ஒரு மாதம் இருக்குமோ தெரியாது. அதே செம்மலர் அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம். ‘உங்கள் கதை குரங்காட்டி செம்மலரில் சிகரச்சிறுகதையாக தேர்வு

பெற்றிருக்கிறது. அது நடந்த பழசு என்ற தலைப்பு மாற்றம் கண்டு வரும் இதழில் பிரசுரமாகும். வாழ்த்துக்கள்!’ என்று கண்டிருந்தது.

அந்த கதை செம்மலரில் சிகர சிறுகதை முத்திரையுடன் பிரசுரமான வேளையில்தான் தமுஎச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)வின் வெள்ளிவிழா மாநாடு நடந்தது. எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, அருணன், தி.க.சிவசங்கரன், ஜெயகாந்தன், கந்தர்வன் என மாபெரும் இலக்கியப் பட்டாளமே கொங்கு மண்டலத்தில் இலக்கிய விருந்தளித்த நேரம்.

மாநாட்டின் முந்தைய தினம் இரவு குழுக்குழுவாக கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள் எழுத்துச் சிங்கங்கள். நான் இருந்த குழுவில் நடுநாயகமாக மேலாண்மை. அவருடன் மிகவும் நையாண்டி, நக்கல், எள்ளல் ததும்ப உரையாடிக் கொண்டிருந்தார் அப்போது இளம் எழுத்தாளராக இருந்த க.சீ.சிவக்குமார்.

எனக்கு அவரை அப்போது மட்டுமல்ல; அதற்கு முந்தைய தமுஎச மாநாடுகளிலும் சந்தித்திருக்கிறேன். அவருக்கும் எனக்கும் இரண்டு ஒற்றுமைகள்.

ஒன்று கோவை மண் வாசனை ததும்பும் எழுத்துக்கு சொந்தக்காரர்கள். இருவரும் பேசும்போது கூட கொங்கு மொழி கட்டிப்புரளும். மற்ற மாவட்டத்து எழுத்தாளர்கள் இன்னும் கொஞ்சம் பேசுங்கள் என்று பேசக் கேட்டு ரசிப்பார்கள்.

இன்னொன்று என் இன்சியல் கா.சு. அவர் இன்சியல் க.சீ. அவர் என்னைப்பார்க்கும் போது இனிசியலின் முழுப்பதம் கேட்பார். நானும் அதையே அவரிடம் பலமுறை வினவியிருக்கிறேன். கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் என்று அவரும், காளியப்பன் சுப்பிரமணியம் வேலாயுதன் என்று நானும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

அவர் தன் பெயரில் முதல் எழுத்தை ஊருக்காக அர்ப்பணித்தார். நான் என் தாத்தா பெயரை சுவீகாரமாக கொண்டார். க.நா.சு போல வரவேண்டும்; பிவிஆர் போல பெயர் விளங்க வேண்டும் என்பதற்காக வேலாயுதசாமி என்ற என் பெயரை இப்படி மாற்றிக் கொண்டேன் என்று பலமுறை அவரிடம் எடுத்தியம்பியிருக்கிறேன்.

க.சீ.சிவக்குமாரும், ‘நானும் க.நா.சு போல என்றுதான் என் பெயருக்கு அடை மொழி சேர்த்தேன்; பிவிஆரை நினைக்கவில்லை!’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.என்றாலும் என்னை விடவும் கொங்கு மொழியை கையாள்வதில் திறமையானவர் க.சீ. அப்படிப்பட்டவர் பேச்சில் அன்று மேலாண்மை பொன்னுசாமியிடம் பேசும்போது கொஞ்சம் கூடுதலாய் காரம்.

‘செம்மலர் இதழில் சிகரச் சிறுகதைகளை கூட இங்குலாப் சிந்தாபாத் என்று கோஷம் போட்டால்தான் பிரசுரிப்பீர்களா தோழர்?’ என்பது அவரின் கேள்வி.

‘அப்படியெல்லாம் இல்லியே!’ என்று வழக்கம் போல் வெள்ளந்திக் குரலில் பதில் சொன்னார் மேலாண்மை.ஆனாலும் இவர் விடவில்லை.

‘சிகரச்சிறுகதை முத்திரையை உங்கள் தோழமை எழுத்தாளர்களுக்கு மட்டுமே கொடுப்பீர்களோ?!’

‘நிச்சயமாக இல்லை!’

திரும்பவும் பதில். ‘அப்படி தெரியவில்லை. உங்கள் ஆசிரியர் குழு செம்மலரில் இதுவரை தேர்ந்தெடுத்து பிரசுரித்த அத்தனை சிறுகதைகளும் பிரச்சார நெடி வீசுகிறதே!’ என்று கூறிவிட்டு அதில் ஒரு சிறுகதையை எடுத்து அக்குவேறு ஆணிவேறாக அலசினார் க.சீ.

போதாக்குறைக்கு அதை எழுதிய மூத்த தலைமுறை இடது சாரி எழுத்தாளரையும், அவரின் மொழியில் விளையாடிய செயற்கைத்தனத்தையும் கேலிக்குள்ளாக்கினார்.

எந்த இடத்திலும் நழுவமுடியாது பேசி சமாளித்த மேலாண்மை என்னைப்பார்த்தார்.

‘என்ன தோழர் சொல்றீங்க. இந்த மாதத்தில் செம்மலரில் வந்த தோழர் கா.சு.வேலாயுதத்தின் சிகரச்சிறுகதையை படித்தீர்களா? அதில் என்ன குறையை கண்டீர்கள். அதில் எந்த இடத்தில் பிரச்சாரத்தை கண்டீர்கள்? எந்த இடத்தில் கம்யூனிஸ்ட்டுகளுடைய ஆதிக்கத்தை பார்த்தீர்கள்? என்று தொடர் கேள்விகளை எழுப்ப ‘சடன் பிரேக்’ அடித்த மாதிரி தன் வார்த்தைகளை நிறுத்திக் கொண்டார்.

பிறகு சொன்னார்: ‘இதுவரை 10 சிகரச் சிறுகதைகளை செம்மலர் தாங்கி வந்திருக்கிறது. அதற்காக நான் நான்கு மாதங்கள் தொடர்ந்து ஒவ்வொரு கதை எழுதி அனுப்பினேன். ஒன்று கூட ஏன் என்று யாரும் கேட்கவில்லை. அந்த சிகரச்சிறுகதை வரிசையில் நிலைய வித்துவான்களின் கதைகளே வந்து கொண்டிருக்க, நம் கதையெல்லாம் இவர்கள் பிரசுரத்திற்கு எடுக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். தோழர் வேலாயுதனின் கதை அந்த வரிசையில் வந்த போதும், அதை வாசித்த பின்பும்தான் கொஞ்சம் மனச் சமாதானம் அடைந்தேன். நீங்கள் நடுநிலையுடன் செயல்படுகிறீர்கள் என்று!’ என்றாரே பார்க்கலாம்.

அவர் அப்படி சொன்னதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.முதலாவது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவன் அல்ல.

அடுத்தது ஒரு கதையை பத்திரிகைக்கு அனுப்பி விட்டு அதை பிரசுரிக்கக் கோரி யாரிடமும் சிபாரிசு தேடிப்போக மாட்டேன். அது பிரசுரமானால் பார்ப்பேன்.இல்லாவிட்டால் அது திரும்பி வந்தவுடன், வேறு பத்திரிகைக்கு அனுப்பி விடுவேன். க.சீ.சிவக்குமாரும், நானும் ஒரே காலத்து இளம் எழுத்தாளர்கள்; ஒரே உணர்வாளர்கள் என்பதால் க.சீ.சிவக்குமாருக்கு முன்பே தெரியும்.

அதை முன்னிறுத்தி அப்படி அவர் ‘சடன் பிரேக்!’ போட்டு ‘யு டர்ன்’ அடித்து பேசினால் கூட க.சீ.சிவக்குமாரை சமாதானப்படுத்தும் விதமாக அந்த மாதம் செம்மலர் இதழில் என் கதை எப்படி சிகரச்சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை மேலாண்மை விரிவாக விளக்கினார். தொடர்ந்து நான் அக்கதையை எப்படி எழுதி ஆசிரியர் குழுவுக்கு அனுப்பி வைத்தேன் என்பதையும் க.சீ.சிவக்குமாரிடம் விளக்கினேன்.

அதற்கு அவர், ‘நீங்க இதை சொல்லணுமா தோழர். நான் இந்த மாநாட்டிற்கு வரும் முன்பு வரை தோழர்கள் செம்மலர் இலக்கிய இதழை தங்களுக்காகவே நடத்துகிறார்கள். எந்த இடத்திலும் புதியவர்களுக்கு இடம் கொடுக்க மறுக்கிறார்கள் என்பதை பற்றி பேச பக்கம், பக்கமாக தயாரித்து வந்திருந்தேன். வரும்போது இந்த மாத செம்மலரில் உங்கள் கதையை கண்டபின்புதான் மனச்சமாதானம் அடைந்தேன். உங்கள் கதை வேறு; என் கதை வேறு என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. அதிலும் இப்போது பிரசுரமாகியிருக்கும் உங்கள் கதை என்னை என்னவோ செய்து விட்டது. எழுதினால் இப்படிப்பட்ட கதைகளை நாம் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துவிட்டது!’ என்றெல்லாம் நிறைய புகழ்மழையே சூட்டினார்.அவர் பேச்சு மேலாண்மை பொன்னுசாமிக்கு நிறைவைத் தந்திருக்க வேண்டும்.

அவர் சொன்னார்:

‘தோழர். க.சீ.சிவக்குமாரின் கோபம் நியாயமானது. அவரைப் போலவே பலர் நம் சிகரச் சிறுகதைகளை பற்றி விமர்சனம் செய்து எழுதியிருந்தார்கள். அதற்கு பதில் சொல்ல முடியாது திண்டாட்டத்தில் இருந்தோம். ஏனென்றால் ஒரு மாதத்தில் வரும் கதைகளில் குறைந்தபட்சம் 3 அல்லது 4 கதைகளை பிரசுரம் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் நம் இதழ் இருக்கிறது. அதில் ஒரு கதையை சிகரச்சிறுகதையாக வைக்க வேண்டிய நிலையும் உள்ளது. அப்படி பிரசுரிப்பதில் சுமார் என்ற நிலையில் இருப்பதை சிகரச்சிறுகதை முத்திரை கொடுப்பதால் பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

எனவே நிறைய எழுத்தாளர்களுக்கு சிகரச்சிறுகதை முத்திரைக்கு கதை எழுதச்சொல்லி தனிப்பட்ட முறையில் கடிதமும் அனுப்பினோம். அப்படி வந்ததில் ஒரு கதைதான் உங்கள் கதை. அது சிகரச்சிறுகதை முத்திரையையும் பெற்றது. அதற்கு பாராட்டி நிறைய கடிதங்கள். அதில் ஒன்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். ‘இதுவரை சிகரக்கதைகள் பெயரில் வந்தவை எல்லாம் தகரக்கதைகள்; இப்போதுதான் சிகரச்சிறுகதையை பிரசுரித்துள்ளீர்கள்!’ என்று. அந்த கடிதம் எங்களையே ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. எனவே இந்த 10 சிறுகதைகளோடு சிகரச் சிறுகதை முத்திரையை கொடுப்பதில்லை என்று ஆசிரியர் குழு ஒரு மனதாக முடிவெடுத்துவிட்டது!’

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி வெள்ளந்தியாக எழுதக்கூடியவர். பேசக் கூடியவர். மற்றவர்களுக்கு எப்படியோ என்னைப்போன்ற, க.சீ.சிவக்குமார்

போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு ஆதர்ஷ புருஷர். அச்சு அசலாக அன்று அவர் பேசியதை க.சீ.சிவக்குமார் எப்படி எடுத்துக் கொண்டாரோ. அதற்குப்பிறகு அவருடைய எழுத்து எங்கேயோ சென்றது. வெகு ஜன அரங்கிலும், இலக்கிய இதழ்களிலும் முத்திரை பதிக்கத் தொடங்கியது.

ஒரு முறை என் விகடன் பத்திரிகையில் பணிபுரியும் சக நிருபர் நண்பர் ஒருவர் கோவையிலிருந்து பெங்களூர் சென்று வருவதாக தெரிவித்தார்.

‘எதற்காக பெங்களூர்?’ என்றபோது, ‘அங்கே க.சீ.சிவக்குமார் என்று ஒரு எழுத்தாளர். ஒரு பேட்டியும், படமும் எடுக்க வேண்டும் என்றார்கள். நான் போனில் பேட்டி எடுத்துவிட்டேன். போட்டோவும் அவரே அனுப்புவதாக சொல்லிவிட்டார். இருந்தாலும் ஆசிரியர் குழுவில் நேரில் போய் நல்ல படமா எடுத்து அனுப்புன்னாங்க. வேற வழியில்லை. போயிட்டு வர்றேன்!’ என்று சொன்னபோது, ‘பெரிய எழுத்தாளர் ஆகிவிட்டார் க.சீ!’ என்று எனக்குள் முகிழ்த்த மகிழ்ச்சி சொல்லி மாளாது.

எள்ளல், கிண்டல், நையாண்டி ததும்ப அவரின் பல கதைகளை வாசிக்கும்போது மேலாண்மையுடன் வாக்குவாதம் செய்த, என்னிடம் அன்பு காட்டிய அந்த மனிதரின் முகம் வந்து போகும். அதைவிட அவரின் சிறுகதைத் தொகுதியான கன்னிவாடி அட்டைப்படத்தில் லுங்கியை மடித்துக்கட்டியவாறு பின்பக்கத்தை காட்டியபடி செல்லும் அவரின் அட்டைப்படம் என் மனக்கண்ணில் அகலாது நிற்கும்.

தன் தாயையும், தன் ஊரையும், தன் பெயரையும் வெகுவாக நேசித்தவர் அவர். அதைவிட இலக்கியத்தை சுவாசமாக ஆக்கிக் கொண்டவர். இப்போது அவருடைய மரணச் செய்தி கூட அந்த மடித்துக்கட்டிய லுங்கி உருவத்துடனான அட்டைப்படமும், கன்னி வாடி ஊருமே மனதில் நிரம்பி நிற்கிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x