Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM

கடினமாக உழைத்தால் கலெக்டர் ஆகலாம்!

கலெக்டர் ஆக வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவு. கூடுதல் ஆர்வம், விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் ஆகலாம். இந்திய அளவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு, ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்திய ஆட்சிப் பணி, இந்திய அயல்நாட்டுப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி உள்ளிட்ட 24 உயர் பதவிகளில் பொறுப்பு வகிக்க முடியும்.

பிரிலிமினரி, மெயின், பர்சானலிட்டி அண்டு இன்டர்வியூ என யு.பி.எஸ்.சி.,. தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுத பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் 21 முதல் 30 வயது வரையும், ஓ.பி.சி. பிரிவினர் 33 வயது வரையும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 35 வயது வரையும் தேர்வு எழுதலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயதில் தளர்வு அளிக்கப்படுகிறது. ஒருவர் நான்கு முறை தேர்வு எழுதலாம். ஓ.பி.சி.,

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஏழு முறை எழுதலாம்.

பிரிலிமினரி தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாள் பொது அறிவு, இரண்டாம் தாள் திறன் அறிவு. தலா 200 மதிப்பெண்கள். இரண்டாம் கட்டமாக நடத்தப்படும் மெயின் தேர்வு எட்டு தாள்கள் கொண்டது. கடந்த 2013-ம் ஆண்டு மெயின் தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதல் பிரிவு தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது. இரண்டாம் பிரிவு ஏழு தாள்கள் கொண்டது. தகுதித் தேர்வு பகுதி - ஏ, பகுதி -பி என இரு பிரிவாக நடத்தப்படுகிறது.

பகுதி -ஏ தேர்வு இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 8-ன் படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து எழுதலாம். பகுதி - பி ஆங்கிலத்தில் எழுத வேண்டும். இவ்விரு தேர்வுக்கும் மதிப்பெண்கள் தலா 300. தகுதித் தேர்வின் மதிப்பெண்கள், சிவில் சர்வீஸ் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுடன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. மெயின் தேர்வு இரு பிரிவுகளை கொண்டது. ஒன்று தகுதித் தேர்வு. மற்றொன்றில் ஏழு தாள்களை எழுத வேண்டும். தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஏழு தாள்களையும் திருத்துவார்கள்.

தேர்வுக்கு தயாராக விரும்புவோர் மொழிப் பாடத்தில் புலமை பெற்றிருப்பது அவசியம். 21 வயதில் தேர்வை எழுத ஆரம்பிப்பவர்கள் பலரும் தேர்ச்சி அடையவில்லை என்றால் சோர்வடைந்து விடுகின்றனர். 68 சதவீதம் பேர் இரண்டு, மூன்றாவது தேர்விலே தேர்ச்சி பெறுகிறார்கள். முதல் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 10 சதவீதத்துக்கும் குறைவே. எனவே, பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் கனவு கைகூடும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x