Last Updated : 12 Nov, 2013 12:00 AM

 

Published : 12 Nov 2013 12:00 AM
Last Updated : 12 Nov 2013 12:00 AM

கணினியும் கவி பாடுமே!

இனி திரைப்பாடல்கள் எழுத கணினியும் முன் வரும். கதைக்கேற்ற பாடல்களை எழுதுவதெற்கென்று பிரத்யேகமாக மென்பொருள் கருவியொன்றை வடிவமைக்கும் முயற்சியில் இருக்கிறார் மதன் கார்க்கி.

வைரமுத்துவின் மகன் என்கிற அடையாளம் தாண்டி இன்று தன்னை ஒரு திறமையான பாடலாசிரியாராகவும் கணினி யியல் வல்லுனராகவும் நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார் கார்க்கி.

அண்ணா பல்கலைகழகத்தில் உதவிப் பேராசிரியர் வேலையை ராஜினாமா செய்து முழு நேரத் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் வசனகர்தாவாக மாறிவிட்ட கார்க்கி, கிட்டத்தட்ட ஓராண்டுக் காலமாக இந்த மென்பொருளை வடிவமைக்கும் முயற்சியில் இருக்கிறார். ஏற்கனவே அவரது கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் சில இலவச மின்னணு கருவிகளை www.karky.in அறிமுகப்படுத்தியுள்ளார். இவற்றில் தமிழ் அகராதி, ஒலிங்கொ எனும் மொழிபெயர்த்தல் கருவி, பாடல் என்று ஒரு திரைப்படப் பாடல் தேடல் விசைபொறி மற்றும் எமோனி என்று ஒரு எதுகை மோனை சொற்கண்டறிதல் கருவியும் அடக்கம்.

"திரைப் பாடல் என்பது ஒரு கவிதையைப் போல கவிஞனின் ஆத்மாவிலிருந்து வரும் ஒன்று அல்ல. கதைக்கு ஏற்றதுபோல அல்லது ஒரு மெட்டுக்கு ஏற்றதுபோல அமைக்கப்படக்கூடிய ஒன்றுதான்," என்கிறார் கார்க்கி. "எப்படி ஒரு மென்பொருள் தேவைகேற்ப சில கட்டுக்கோப்புக்களை அமைக்க முடியுமோ அவ்வாறு திரைப் பாடல்களையும் அமைக்க முடியும்."

தமிழ் இயக்குனரின் கோரிக்கைகள் மாறி வரும் காலம் இது. சில பாடல்களில் அர்த்தமில்லா வார்த்தைகள் ஓசைக்கு ஏற்ப எழுதப்படுகி ன்றன. அல்லது ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகள் இளைய தலைமுறை ரசிகர்களைக் கவர்வதற்காகச் சேர்க்கப்படுகின்றன. "சில இடங்க ளில் சில மெட்டிற்குத் தமிழில் சில வார்த்தைகளே பொருந்தும். அதனால் தான் "பூ" அல்லது "தீ" போன்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் நிறைய பாடல்களில் இடம் பெற்றுள்ளன. மென்பொருள் கருவிகள் மூலம் ஒரு மெட்டுக்கு ஏற்ற பல வார்த்தைகளைக் கண்டறிவது சாத்தியம்" என்று சொல்லும் கார்க்கி, இதற்கான ஒரு முயற்சியையும் ஏற்கனவே செய்திருக்கிறார். இயக்குனர் ஷங்கரின் 'நண்பன்' படத்தில் வரும் "அஸ்கா லஸ்கா" பாடலை எழுத கணினியை உபயோகித்திருந்தார் அவர்.

ஏற்கனவே உள்ள கருவிகளைத் தவிர மேலும் சில சவாலான கருவிகளையும் கார்க்கியின் ஆராய்ச்சிக் குழு சில பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அமைத்து வருகி றது. இவற்றில் ஒன்று புது உவமைகளை கண்டுபிடிக்கும் ஒரு கருவி. ஏற்கனவே எழுதப்பட்ட உவமைகளை ஆராய்ந்து அவற்றின் வார்த்தைக் கூட்டமைப்புகளின் மூலம் புது உவமைகளை உருவாக்கும் கருவி இது. "திருவிழாவைப் போன்று சந்தோஷம் தரும் உறவு" என்ற உவமைதான் இன்னும் சோதனைக் கட்டத்தில் உள்ள இந்த மென்பொருள் கருவியின் முதல் உவமை.

"அந்த உவமையை எனது சமூக வலைத்தளங்களில் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு இதை யார் எழுதி இருக்க கூடும் என்று கேட்டேன். அனைவரும் வாலியோ அல்லது எனது தந்தையோ எழுதி இருக்கலாம் என்று யூகித்தார்கள்," என்று சிரிக்கிறார் கார்க்கி.

இந்த முயற்சி முழுமை அடையும் தறுவாயில், ஒரு பாடல் ஆசிரியர் கணினி மூலம் என்ன சூழ்நிலைக்கான பாடல், எந்த விதமான பாடல் மற்றும் எந்த தொனியில் இருக்க வேண்டும் என்று உள்ளீடு செய்தால், பாடல் தானாக எழுதப்படலாம்.

"இந்த முயற்சி பாடல் ஆசிரியரைக் கணினி மூலம் பதிலீடு செய்வதற்கு அல்ல. தொழில்நுட்பத்தின் பலத்தை அவர் கையில் தருவதற்கே” என்கிறார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x