Published : 05 Dec 2013 10:50 AM
Last Updated : 05 Dec 2013 10:50 AM
சென்னையில் 1000 இடங்களில் நடைபெறவிருக்கும் சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்குகின்றன. செனாய் நகர் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார்.
இந்த முகாம்கள் டிசம்பர் 5ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெறும். காலை 8 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். 200 வார்டிலும் ஐந்து நாட்களுக்கு வெவ்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன. இவை தவிர மண்டல அளவில் 15 இடங்களிலும் பிரதான முகாம்கள் நடைபெறுகின்றன.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் உள்ளதாவது:
பிரதான முகாம்கள் எக்கோ, இசிஜி, அல்ட்ரா சவுண்ட், கண் பரிசோதனை, முழு இரத்த பரிசோ
தனை, கருப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல், மார்பக பரிசோதனை, காசநோய் பரிசோதனை,பல் மருத்துவ சிகிச்சை,மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா ஆகிய பரிசோதனை வசதிகள் மற்றும் சிகிச்சை வசதிகளுடன் நடைபெறுகின்றன.இங்கு தனியார் மருத்துவமனைகளின் நிபுணர்கள் ஆலோசனையும் சிகிச்சையும் அளிப்பார்கள்.
வார்டுகளில் நடைபெறும் முகாம்களில் இரத்த பரிசோதனை, காச நோய், மலேரியா பரிசோதனை, சிகிச்சைகள் அளிக்கப்படும். நிலவேம்பு குடிநீர் பொடி வழங்கப்படும். இங்கு பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் பிரதான முகாம்களுக்கு அனுப்பப்படுவர்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி மாநகராட்சி சுகாதார அலுவலர் பி.குகானந்தம் கூறியதாவது:
இந்த முகாம்களின் மூலம் நடுத்தர மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் குறிப்பாக குடிசைப் பகுதி மக்கள், அங்கன்வாடி குழந்தைகள், வீடற்ற ஏழைகள், கோயம்பேடு மற்றும் மெரினாவில் உள்ள சிறு வியாபாரிகள், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட 20 லட்சம் பேர் பயனடைவர். இந்த முகாம்களில் பரிந்துரைக்கப்படுபவர்கள் மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும் அறுவை சிகிச்சைகளுக்காக மற்றும் தொடர் சிகிச்சைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்படுவர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் “இது போன்ற மாபெரும் சிறப்பு முகாம்கள் இதுவரை எந்த நகரத்திலும் நடைபெறவில்லை. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தால் அடுத்து வரும் ஆண்டுகளிலும் இது போன்ற முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
ஏற்காடு தேர்தல் காரணமாக இந்த முகாம்கள் தள்ளிவைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT