Published : 30 Jan 2014 12:24 PM
Last Updated : 30 Jan 2014 12:24 PM
பொறியியல் படித்ததும் உடனே எல்லாம் உச்சத்தை எட்டிப் பிடிக்க முடியாது. பொறியியல் படித்து முடித்ததும் கேட் (GATE) நுழைவு மற்றும் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதே சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும். கேட் நுழைவுத் தேர்வு எம்.இ., எம்.டெக்., பட்ட மேற்படிப்புக்கு மட்டுமல்ல. இத்தேர்வில் வெற்றி பெறக்கூடியவர்கள் மட்டுமே பொது நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பிக்க முடியும். பொது நிறுவனங்கள் அபரிமித வளர்ச்சி கண்டு வரும் நிலையில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. அங்கு ஆரம்பக் கட்டத்திலேயே மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், நேஷனல் ஃபெர்ட்டிலைசர் லிமிடெட், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன், பவர் கிரிட் இந்தியா லிமிடெட், விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட், காஸ் (Gas) அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட், மினரல் எக்ஸ் புளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட், மசாக்கான் டாக் லிமிடெட், நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட், ரயில் இண்டியா டெக்னிக்கல் அண்டு எக்னாமிக் சர்வீசஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேர்முக தேர்வு வைத்து உடனடியாக பணிக்கு எடுத்துக் கொள்கின்றனர். ஐ.எஸ்.ஆர்.ஓ, பாபா அடாமிக் ரிசர்ச் உள்ளிட்ட நிறுவனங்களில் GATE தேர்வு தகுதிப் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிறது.
சிங்கப்பூரில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் கல்வி நிறுவனத்தில் இத்தேர்வை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர். மேலும் பல வெளிநாடுகளில் மேற்படிப்பு படிக்க இத்தேர்வில் தகுதி பெற்றால் வாய்ப்பு மிகுதியாக உள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை GATE தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. தேசிய அளவில் கடந்த 2013-ம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படித்து முடித்தவர்களில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 135 பேர் GATE தேர்வு எழுதினர். இதில்36 ஆயிரத்து 394 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். இது 14.2 சதவீதம். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர்களில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 814 பேர் GATE தேர்வு எழுதியதில், 24 ஆயிரத்து 573 பேர் தகுதி பெற்றனர். இது 14.8 சதவீதம். இதன் மொத்த சராசரி 10 முதல் 22 சதவீதம். GATE தேர்வில் கடந்த 2013-ம் ஆண்டு ஆந்திராவில் 22 ஆயிரத்து 476 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 22 ஆயிரத்து 400 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தமிழகத்தில் 4,985 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, இனியாவது இத்தேர்வு குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் வளர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT