Published : 10 Jan 2014 12:00 AM
Last Updated : 10 Jan 2014 12:00 AM

தமிழகத்திலும் படிக்கலாம் ஐந்தாண்டு பட்டமேற்படிப்பு

தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் மட்டுமே ஐந்தாண்டு படிக்கக்கூடிய இன்டகிரேட்டட் புரோகிராம் (ஒருங்கிணைந்த) பட்டமேற்படிப்புகள் இருப்பதாக சிலர் கருதுகிறார்கள். அப்படியல்ல. பிளஸ் 2 முடித்தவுடன் ஐந்தாண்டு பட்டமேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள் தமிழகத்திலேயே படிக்கும் வாய்ப்பு தற்போது உள்ளது. தமிழகத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், வேலூரில் வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் இன்டகிரேட்டட் புரோகிராம் எம்.எஸ்சி. பயிலக்கூடிய வாய்ப்பு உள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிளஸ் 2 முடித்தவுடன், ஐந்தாண்டு படிக்கக்கூடிய எம்.எஸ்சி. இன் லைஃப் சயின்ஸ் பட்டமேற்படிப்பு படிக்கலாம். இதைப் படித்து முடித்தவர்கள் SLET, NET, TRB தேர்வுகளை எழுதலாம். எம்.எஸ்சி. இன் லைஃப் சயின்ஸ் என்பது தாவரங்கள், விலங்கினம் மற்றும் மனிதர்கள் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டம்.

பிளஸ் 2-வில் தாவரவியல், விலங்கியல், உயிரியல் பாடங்கள் எடுத்தவர்கள் எம்.எஸ்சி. இன் லைஃப் சயின்ஸ் படிப்பில் சேரலாம். இதில் பிளான்ட் அண்ட் அனிமல், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயோ இன்ஃபர்மேடிக் உள்ளிட்ட பாடத்திட்டங்கள் உள்ளன. ஆராய்ச்சி வரை படிக்க விரும்புபவர்கள் இந்தப் படிப்பை தயக்கமின்றி எடுத்துப் படிக்கலாம்.

எம்.எஸ்சி. லைஃப் சயின்ஸ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் தாராளமாக உள்ளன. எனவே, அதுகுறித்தும் கவலைப்படத் தேவையில்லை. ஆராய்ச்சிக் கூடங்கள், அறிவியல் சோதனைக் கூடங்கள், கல்வி நிறுவனங்களில் அறிவியல் சார்ந்த துறைகளில் இவர்களுக்கு அதிக தேவை உள்ளது. இப்பாடத்தை எடுத்துப் படித்த பலர் நம்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐந்தாண்டுகளில் ஜெனடிக் டிஷ்யூ கல்ச்சர், செல் அண்ட் மாலிகுலர் பயாலஜி, ஜெனடிக் இன்ஜினியரிங், பயோ மாலிக்குல்ஸ், கிளினிக்கல் பயோ கெமிஸ்ட் உள்பட 53 பாடப் பிரிவுகளை படிக்க வேண்டும். ஏழாவது செமஸ்டரில் விருப்பப் பாடமாக ஸ்டெம்செல் டெக்னாலஜி, கேன்சர் பயாலஜி, பயோ புராசஸ் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கலாம். இறுதி ஆண்டு முழுவதும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்கள் மட்டுமே பயில வேண்டும்.

இந்தப் படிப்பில் சேர்ந்து பயில விரும்புபவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 2 மொத்த மதிப்பெண் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுகிறது. மொத்தம் 120 இடங்கள் உள்ளன.

வேலூர் வி.ஐ.டி. நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் இன்டகிரேட்டட் புரோகிராம் எம்.எஸ்சி. பயோ டெக்னாலஜி பட்டமேற்படிப்பு உள்ளது. இங்கும் 120 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

அறிவியல், கணிதம் மட்டுமல்லாமல் வணிகவியல், கணக்குப் பதிவியல் எடுத்துப் படித்தவர்கள் பிளஸ் 2 முடித்தவுடன் நேரடியாக ஐந்தாண்டு படிக்கக்கூடிய பட்டமேற்படிப்புகள் குறித்து பிறகு தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x