

தீபிகா பள்ளிக்கல், இந்திய ஸ்குவாஷ் விளையாட்டின் கொடியை உலக அரங்கில் உயர்த்திப் பிடிப்பவர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் மனவுறுதி, திறமை, அழகு ஆகியவற்றின் இனிய கலவை தீபிகா.
ஆசியாவின் நம்பர் 1 ஜூனியர் ஸ்குவாஷ் வீராங்கனையாக முன்பு இருந்த தீபிகா, சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கான அசோசியேஷன் வெளியிடும் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் கால் பதித்த முதல் இந்திய வீராங்கனையும்கூட. 21 வயதுக்குள் ஜெர்மன் ஓபன், டச் ஓபன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், ஸ்காட்டிஷ் ஓபன், ஐரோப்பிய ஜூனியர் ஸ்குவாஷ் சர்கியூட் என ஆறு பட்டங்களை வென்றவர். சீனாவில் சமீபத்தில் நடந்த மக்காவ் ஓபன் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை ரேச்சல் கிரின்ஹாமை வீழ்த்தி தீபிகா பட்டம் வென்றுள்ளார். இது அவர் வென்றுள்ள 7வது சர்வதேசப் பட்டம். அவரது முதல் சில்வர் டோர்ணமெண்ட் வெற்றியும்கூட.
இதற்கு முன்னர் நியூயார்க்கில் நடைபெற்ற போட்டித் தொடரில், தரவரிசையில் தன்னைவிட உயர்ந்த நிலையில் உள்ள மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை கேசி பிரௌனை தீபிகா வீழ்த்தினார். இப்படி டாப் 10 வீராங்கனைகள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து அவர் வீழ்த்தி வருகிறார். "நெவர் சே டை" என்ற ஆட்டிடியூட்தான் தீபிகாவின் பலம்.
"மக்காவ் ஓபன் பட்டம், எனது விளையாட்டு வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. முதலிடத்தை நோக்கிய எனது பயணத்தின் தொடக்கம் இது. இந்த வெற்றிகளுக்கு உளவியல் நிபுணர் கென் மே வழங்கிய மனப் பயிற்சிகளும் காரணம்" என்று தீபிகா கூறியுள்ளார். தற்போது அவரது பயிற்சியாளராக இருப்பவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் சாரா ஃபிட்ஸ் ஜெரால்ட்.
இன்றைக்கு இப்படி வெற்றிகளைக் குவித்து வரும் தீபிகாவுக்கு, ஸ்குவாஷ் அறிமுகம் ஆனது ஒரு விபத்து. தோழி ஒருவர் மூலம் பத்து வயதில் ஸ்குவாஷ் விளையாட்டில் காலடி எடுத்து வைத்த தீபிகா, எந்த இந்தியரும் தொடாத உயரத்தை எட்டிப் பிடித்துள்ளார்.
எத்திராஜ் கல்லூரி மாணவியான இவருக்கு, வெற்றி என்பது ஒரு பழக்கம். இரண்டு முறை ஆசிய ஜூனியர் சாம்பியன், 2008 பிரிட்டிஷ் ஓபன் ஜூனியர் சாம்பியன் (இது விம்பிள்டன் ஜூனியருக்கு இணையான மதிப்பு கொண்டது) என்று ஜூனியர் பிரிவிலேயே பல சாதனைகளைப் படைத்தார். அர்ஜுனா விருதும் பெற்றுள்ளார்.
ஒரு நாளின் பெரும்பாலான நேரம் ஸ்குவாஷ் டிரெய்னிங், ஒர்க்அவுட் என்றே இவருக்குக் கழியும். ஸ்குவாஷ் கோர்ட்டில் குறிப்பிடத்தக்க வேகம், விரைவான செயல்பாட்டுக்காக அறியப்பட்ட இவர், ஒரு பெர்ஃபெக்ட் ஷாட் மேக்கரும்கூட.
2011 முதல் இவரது பயணம் ஏற்றத்திலேயே சென்று வருகிறது. 2011 சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள்ளும், அடுத்த ஆண்டில் முதல் 10 இடங்களுக்குள்ளும் வந்தார். தற்போதைய தரவரிசை நிலை 17.
"நீங்கள் யார், நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதெல்லாமே உங்கள் திறமையை அடிப்படையாகக் கொண்டது. களத்தில் என் ஆட்டம் பேசும். மற்றவை எல்லாம் அதை பின்தொடரும்" என்று கூறும் இவர், தமிழ் சினிமா வாய்ப்பு கதவைத் தட்டியும், அதை ஏற்க மறுத்தவர். விளம்பரங்களில் மட்டும் தலைகாட்டி வருகிறார்.
சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் முதலிடம் பிடிப்பது, 2014இல் நடக்க உள்ள காமன்வெல்த், ஆசியப் போட்டிகளில் தங்கம் வெல்வது ஆகியவைதான் இந்த ஸ்குவாஷ் புயலின் தற்போதைய உயர்ந்த லட்சியம்.