Published : 18 Nov 2013 12:29 PM
Last Updated : 18 Nov 2013 12:29 PM

சி.என்.ஆர். ராவ் கோபத்தை அரசு எப்படி அணுக வேண்டும்?

பாரத ரத்னா விருது பெறும் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ், அறிவியல் துறைக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யப்படாததைச் சுட்டிக்காட்டி, அரசியல்வாதிகளை முட்டாள்கள் என சாடியுள்ளார். விருது அறிவிக்கப்பட்ட மறு நாளே ராவ் இவ்வாறு கூறியிருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

சி.என்.ஆர். ராவ் வாதம் என்ன?

அரசு அறிவியல் துறையில் முதலீட்டை அதிகரிக்காவிட்டால், இந்தியா மேலும் பின்னடைவை சந்திக்கும். அடுத்த ஆண்டு துவக்கத்தில், சர்வதேச அளவில் ஆராய்ச்சி / ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் சீனா 16.5% -ஆக இருக்கும். இது அமெரிக்காவை விட அதிகமானதாகவே இருக்கும். ஆனால் இந்தியாவில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் 2 -ல் இருந்து 3%- ஆகவே இருக்கிறது.

இத்தகைய சூழலில் இந்தியாவின் எதிர்காலத்தை பலமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க, கல்வி, அறிவியலில் இந்தியா அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அரசு தரும் முதலீடு, மிகவும் சொற்பமானது. அவர்க தரும் பணத்தை வைத்து, 20% ஆராய்ச்சிகளை மட்டுமே நாங்கள் மேற்கொள்ள முடியும். இதனாலேயே எந்த ஒரு ஆராய்ச்சிக்கும் நாங்கள் முழுமையாக முதலீடு செய்ய முடிந்ததில்லை.

இருப்பினும், அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியைவிட அதிகமாகவே நாங்கள் செயலாற்றுகிறோம். கணினி துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்பதை அரசுடன் போராடி வருகிறேன். இத்துறையில் இந்திய அரசின் முதலீடு மிகவும் மோசமானதாக உள்ளது. சீனா எக்ஸாஸ்கேல், பீட்டாஸ்கேல் ஆராய்ச்சியில் உள்ளது. ஆனால் நாம் எங்கே இருக்கிறோம்.

சீனாவுடன் நம் அறிவியல் ஆராய்ச்சிகளை ஒப்பிடும் போது, "நம்மைதான் நாம் குறைகூற வேண்டும்; நாம் கடினமாக உழைப்பதில்லை; நாம் சீனர்களைப் போன்றவர்கள் அல்லர். நாம் இலகுவாக இருக்கவே விரும்புகிறோம். தேச நலனில் நமக்கு அக்கறை இல்லை. பெரிய அளவில் பணம் கிடைக்கும் என்றால் உடனே நம் ஆராய்ச்சியாளர்கள் வெளிநாடுகளுக்கு தாவி விடுகின்றனர்.

இந்திய ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் அமெரிக்காவை முந்த சீனாவும், தென் கொரியாவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அறிவியல் மேம்பாடுகள் கண்ட நாடுகள் தான் வல்லரசாக முடியும்.

இந்தியாவின் எதிர்காலம் அறிவியல் மேம்பாட்டில் தான் இருக்கிறது. சென்செக்ஸ் ஏறுமுகத்திலும், வர்த்தகம் வளமாகவும் இருந்தால் மட்டும் நாடு முன்னேறி விடாது. இது குறுகிய கால வெற்றிக்கு உதவும். ஆனால் காலப்போக்கில் இந்தியாவின் நிலை? அடிப்படைக் கல்விக்கே சரியான அளவில் முதலீடு செய்யப்படவில்லை என்ற நிதர்சனத்தில் தான் இருக்கிறது எதிர்கால இந்தியாவின் நிலை.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் 6%- கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அறிவியல் துறையில் முதலீடு, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் 2%-ஆக உயர்த்தப்பட வேண்டும்' என்றார்.

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோது, தன் பணியை அங்கிகரித்த அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய சி.என்.ஆர். ராவ், அதே வேளையில் அரசின் அலட்சியத்தையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. அரசு கொள்கைகள் குறித்து இதுவரை பெரிதும் விமர்சித்திராத சி.என்.ஆர். ராவ், ஏன் இப்படி கடுமையான விமர்சனத்தை முன்வைக்க வேண்டும்? அவர் கோபம் நியாயமானதுதானா? அவரது ஆதங்கத்தை அரசு, அரசியல் தலைவர்கள் எப்படி அணுக வேண்டும்? விவாதிக்கலாம் வாங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x