Last Updated : 04 Nov, 2013 03:42 PM

 

Published : 04 Nov 2013 03:42 PM
Last Updated : 04 Nov 2013 03:42 PM

நவீன மாற்றங்களுடன் தயாராகிறது ஐ.சி.எப். ரயில் அருங்காட்சியகம்

ஐ.சி.எப். நியூ ஆவடி சாலையில் உள்ள மண்டல ரயில் அருங்காட்சியகம் 150 ஆண்டு பாரம்பரியமிக்க இந்திய ரயில்வேயின் பரிணாம வளர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது 6.25 ஏக்கரில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை 2002-ல் அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் திறந்துவைத்தார்.

முதல் நீராவி இன்ஜின்

இங்கிலாந்தின் ஜேம்ஸ் பவுலர் 1895-ல் நீராவி ரயில் இன்ஜினை கண்டுபிடித்தார். அதன் மாதிரியை இங்கே காணலாம். ரயிலை இயக்க சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிக்னல் அண்டு கம்யூனிகேஷன், கமர்சியல், கேட்டரிங் உள்பட 16 துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதை காட்சிப் பொருட்கள், புகைப்படக் கண்காட்சி, மாதிரிகள் வழியாக விளக்குவது அருங்காட்சியகத்தின் தனிச்சிறப்பு.

18-ம் நூற்றாண்டில் ரயில் இயக்கப்பட்டவிதம் சுவாரஸ்ய மானது. தண்டவாளத்தில் ஒருவர் சிவப்பு மற்றும் பச்சை நிற கொடிகளுடன் குதிரையில் முன்னே செல்வார். அவர் பச்சைக் கொடி காட்டினால் ரயில் பின்தொடரும். சிவப்புக் கொடி காட்டினால் ரயில் நின்றுவிடும். அதன்பிறகு டென்னிஸ் பேட் போன்ற மூங்கில் வளையம், சிக்னல் போடுவதில் முக்கியப் பங்கு வகித்தது.

ரிலே ரேஸ் மாதிரியான இந்த சிக்னல் முறையை அருங்காட்சியகத்தில் அப்படியே வீடியோவில் பார்க்கலாம். இப்போது ரயில் போக்குவரத்துக்கு சாட்டிலைட்டுடன் இணைந்த அதிநவீன தானியங்கி சிக்னல் முறை பயன்படுத்தப்படுகிறது.

135 ஆண்டு கடிகாரம்

மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயிலில் பயன்படுத்தப்பட்ட மரச்சட்டத்தால் செய்யப்பட்ட முதல்வகுப்பு பெட்டி, 1878-ல் பயன்படுத்தப்பட்ட ரயில்வே கடிகாரம் (இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது), கையில் எடுத்துச் செல்லும் பழைய சிக்னல் விளக்கு என ரயில்வே பாரம்பரியத்தை விளக்கும் பொருட்களின் பட்டியல் நீள்கிறது.

பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட ரயிலில் இருந்து, சமீபத்தில் தயாரித்து அனுப்பப்பட்ட மும்பை புறநகர் ரயில் பெட்டி வரை அனைத்துப் பெட்டிகளின் மாதிரியும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளும், பெரியவர்களும் அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்க்க குட்டி ரயில் (ஜாய் டிரைன்) ஓடுகிறது. விளையாட்டுப் பூங்காவும் இருக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நவீன மாற்றங்களுடன் அருங்காட்சியகம் தயாராகிறது. ரயில்வே தேர்வு பற்றி தெரிந்து கொள்ள நிரந்தர அறிவிப்புப் பலகை வைக்கப்பட உள்ளது.

புகைப்படக் கண்காட்சி, மாதிரிகள், காட்சிப் பொருட்களில் தமிழில் விளக்கம் எழுதி வைக்கப்படும். அவற்றின் அருகில் உள்ள மூன்று வண்ண பொத்தானை அழுத்தினால் தமிழ், ஆங்கிலம், இந்தியில் குரல் ஒலி மூலம் விளக்கம் அளிக்கும் புதிய முறையும் விரைவில் இடம்பெறப் போகிறது.

புதுமையான எடை பார்க்கும் இயந்திரம் ஒன்றும் வைக்கப்படுகிறது. அதில், ஒருவர் பூமியில் இருக்கும்போது என்ன எடை என்பதையும், செவ்வாய், நிலவு போன்ற கிரகங்களில் இருந்தால் என்ன எடை இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் அருங்காட்சியக அதிகாரி வீரராகவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x