Published : 29 Sep 2013 10:02 AM Last Updated : 29 Sep 2013 10:02 AM
இந்தியர்களை பாதிக்கும் மன்மோகன் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளை பரிசீலிப்பதாக ஒபாமா உறுதி
குடியேற்றச் சட்டத்தில் அமெரிக்கா கொண்டுவர உத்தேசித்துள்ள திருத்தங்கள் அங்கு பணிபுரியும் இந்திய தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களை வெகுவாக பாதிக்கும் என்கிற அச்சத்தை அதிபர் ஒபாமாவை சந்தித்தபோது பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார். அதையடுத்து, இது சம்பந்தமாக சுட்டிக்காட்டப்படும் குறைகளை பரிசீலிக்க அமெரிக்கா தயார் என்று மன்மோகன் சிங்கிடம் உறுதி அளித்துள்ளார் ஒபாமா.
வாஷிங்டனில் ஒபாமாவுடன் வெள்ளிக்கிழமை சுமார் 3 மணி நேரம் சந்தித்துப் பேசினார் மன்மோகன் சிங். அமரிக்காவின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் அதிகரிப்புக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் பெரிய அளவில் பங்களிப்பவர்கள் இந்திய தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படு்த்தும் சக்தியாகவும் இந்திய தொழில்நுட்ப பொறியாளர்கள் விளங்குகின்றனர்.
இந்திய தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களுக்கு பாதிப்பு விளைவிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுத்தால் நாம் என்ன எதிர்பார்த்தோமோ அதை சாதிக்க முடியாமல் தடுப்பதாகிவிடும். குடியேற்றச் சட்டங்களில் அமெரிக்கா கொண்டு வர உத்தேசித்துள்ள திருத்தங்கள் கவலை அளிப்பதாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் சுதந்திரமாக சென்று பணியாற்றுவதற்கு கட்டுப்பாடு விதிப்பது இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒபாமாவிடம் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து குடியேற்றச் சட்டங்களில் கொண்டுவரப்பட உள்ள மாற்றங்களை பரிசீலிக்கும்போது இந்தியா தரப்பில் தெரிவிக்கப்படும் குறைகளை கவனத்தில் கொள்வோம் என்று உறுதி அளித்தார் ஒபாமா.
குடியேற்றச் சட்டங்களில் கொண்டுவரப்பட உள்ள மாற்றங்கள் மீது இன்னும் முடிவாக எதுவம் தீர்மானிக்கப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் நிகழ்ந்து முடியப்போகும் விவகாரமும் இது இல்லை. அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் பரிசீலனையில் இந்த பிரச்சினை உள்ளது. குடியேற்றச் சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதால் சீர்திருத்தம் அவசியமாகிவிட்டது என்று மன்மோகன் சிங்கிடம் விளக்கியுள்ளார் ஒபாமா.
நியூயார்க்கில் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர். அதில் பேசுகையில், சட்ட ரீதியாகவோ நிர்வாகத்தின் வாயிலாகவோ இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எதிர்க்கும்படி தொழிலதிபர்களை கேட்டுக்கொண்டார்.
அமெரிக்கச் சந்தையில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இயங்க முடியாத நிலை ஏற்பட்டால் இந்திய பொருளாதாரம் பெரிதளவு பாதிப்புக்கு உள்ளாகும் என்பது மட்டும் அல்லாமல் அமெரிக்காவுடனான பொருளாதார கூட்டாளி உறவு பற்றி இந்தியாவில் எதிர்மறை கருத்து உருவாகும் என்றார்.
WRITE A COMMENT