Published : 05 Nov 2013 10:34 PM
Last Updated : 05 Nov 2013 10:34 PM

குமரி: அசத்தும் அரசு மருத்துவமனைகள்; தனியாரைப் புறந்தள்ளி அதிகரிக்கும் குவா... குவா..!

பிரமாண்டமான கட்டிடங்கள், கண்ணைக் கவரும் விளம்பரங்கள், நொடிக்கு ஒரு முறை உள்ளூர் தொலைக்காட்சியில் ஓடும் ஸ்குரோலிங் இப்படி எதுவும் இல்லை. ஆனாலும் கூட்டம் கூட்டமாக கர்ப்பிணிகள் படையெடுக்கிறார்கள் குமரி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு.

ஒரு மாவட்டத்தின், சுகாதாரத்தின் அளவுகோலே குழந்தைகள் பிறப்பு விகிதத்தில்தான் இருக்கிறது. சிசு மரணமும், கர்ப்பிணி சாவும் நிறைந்த பகுதிகள், சுகாதார சீர்கேட்டின் உச்சமாக மதிப்பீடு செய்யப்படுகின்றன.

குழந்தை பேறுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பலரும் தனியார் மருத்துவமனைகளுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக அரசு மருத்துவமனை என்றாலே அருவருப்பின் கூடாரம் என, மக்கள் மத்தியில் எண்ணம் உருவாகிவிட்டது. இதையெல்லாம் மாற்றியமைக்கும் விதமாக குமரி மாவட்டத்தில் அசத்திக் கொண்டிருக்கின்றன அரசு மருத்துவமனைகள்.

குழித்துறை, தக்கலை அரசு மருத்துவமனைகள் இவ்விஷயத்தில் முன்னோக்கி பாய்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தக்கலை அரசு மருத்துவமனையில் 309 பிரசவங்களும், குழித்துறை அரசு மருத்துவமனையில் 318 பிரசவங்களும் நடைபெற்று தாயும், சேயும் நலமுடன் இருக்கிறார்கள். இன்று பேரணி குமரி மாவட்ட மருத்துவமனை வரலாற்றிலேயே இது அதிகம் என்கிறார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நாகராஜன்.

24மணி நேர சேவை: அவர் கூறுகையில், 'தக்கலை, குழித்துறை அரசு மருத்துவமனைகளுக்கு உள்பட்ட பகுதியில் மகப்பேறு சிகிச்சையை மனதில் கொண்டு சிறப்பு சேவைகளை ஏற்படுத்தியுள்ளோம். இங்கு, தனியார் மருத்துவமனைகளோடு போட்டி போடும் அளவுக்கு 24 மணி நேர சேவை வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு உயர் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மேற்படி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் வசதி செய்துள்ளோம். கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்வதற்கு 108 ஆம்புலன்ஸ் வசதி தயார் நிலையில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் ரத்தம் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

தாய், சேய் நலப்பிரிவு: குமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சம்பத் கூறுகையில், 'மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் தமிழ்நாடு அரசு சுகாதார திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளின் சிகிச்சையில் கவனம் செலுத்தும் வகையில் 'ஒருங்கிணைந்த தாய் சேய் நலப்பிரிவு' குமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு பத்மநாபபுரம் (தக்கலை)அரசு மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள், குழந்தைகள் நிபுணர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பர். மாவட்ட ஆட்சியர் இந்த மருத்துவர்கள் மூலம் தொடர் முகாம்களையும் நடத்தினார். அதன் பலனாக குமரி மாவட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மக்கள் அரசு மருத்துவமனையை பயன்படுத்த ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x