Published : 11 Jun 2019 08:26 AM
Last Updated : 11 Jun 2019 08:26 AM
தேவையில்லாத சர்ச்சைகளை துளியும் விரும்பாதவன்தான். ஆனாலும், எதிர்ப்பு வந்தபோது வலிமையாகவே எதிர்த்தேன் என்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். ஆத்தூர் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் பெருமாள் முருகன் வசிப்பது நாமக்கல்லில்.
"திருச்செங்கோடு ராஜாக்கவுண்டன்பாளையம் அருகேயுள்ள கூட்டப்பள்ளி கிராமம்தான் பூர்வீகம். தாத்தா விவசாயி. நிலம் இருந்தாலும், விவசாயம் இல்லை. அதனால் அப்பா வீட்டிலேயே குளிர்பானம், சோடா கடை வைத்திருந்தார். வீட்டிலேயே தயாரித்து, கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்பார். திருவிழா, கோயில்கள், சந்தைகளுக்கும் கொண்டுபோவார்.
ராஜாக்கவுண்டம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியிலும், திருச்செங்கோடு நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வி முடித்து, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பி.ஏ. தமிழும், கோவை பிஎஸ்ஜி கலைக் கல்லூரியில் எம்.ஏ. தமிழும் படித்தேன். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., பி.ஹெச்டி. பட்டங்களைப் பெற்றேன்.
பள்ளிப் பருவத்திலேயே ராணி, ராணிமுத்து, சிறுவர் கதைகள் வாசிப்பு தொடங்கிவிட்டது. அந்த சமயம், திருச்சி வானொலியில் மணி மலர் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி காலையில் ஒலிக்கும். சிறுவர்கள் கவிதை, துணுக்கு, குட்டிக் கதைகளை, அனுப்பியவர் பெயரைச் சொல்லி வாசிப்பார்கள். நானும் ஆடு, மாடு, பூனை, நாய் என முறை வைத்து, கவிதைகள் எழுதி அனுப்புவேன். வானொலியில் என் பெயர், ஊர் சொல்லி வாசிக்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கும்.
எங்க வீட்ல புத்தகமெல்லாம் வாங்க மாட்டாங்க. தேர்வு விடுமுறையில் திருச்செங்கோட்டில் உள்ள பெரியம்மா வீட்டுக்குப் போய், நிறைய வார இதழ்களை ஆர்வமா தொடர்ந்து படிப்பேன். இதற்காகவே அந்த புத்தகங்களை எடைக்குப் போடாமல், சேர்த்து வைத்திருப்பார் பெரியம்மா. பள்ளியில் படிக்கும்போது, கவிதைப் போட்டியில் கலந்துக்குவேன். நான் நல்லா எழுதறதைப் பார்த்து, மற்ற பள்ளிகளில் போட்டி வைத்தால்கூட , என்னை அங்கே கலந்துகொள்ள ஆசிரியர்கள் அனுப்புவாங்க. அப்படிப்போய் நிறைய பரிசு வாங்கியிருக்கேன். 1981-ல் 10-ம் வகுப்பு படித்தபோது, சங்ககிரி கல்வி மாவட்ட அளவிலான பாரதி நூற்றாண்டு விழா கவிதைப் போட்டியில் 2-ம் பரிசு பெற்றேன். பள்ளி ஆசிரியர்கள் பெரிதும் பாராட்டினாங்க.
அப்ப முருகு சுந்தரம் அறிமுகமானார். அவர், ஈரோட்டில் ஒரு பள்ளித் தலைமையாசிரியர் மட்டுமல்ல, பிரபல கவிஞர். திராவிடப் பாரம்பரியம் மிக்கவர். முருகுசுந்தரம், மலைமகன் போன்றவர்களின் கவியரங்குகளில் நானும் பங்கேற்க ஆரம்பித்தேன். கல்லூரி படிக்கும்போது கவிதையுடன், கட்டுரை, சிறுகதை எழுதுவேன். கல்லூரி மலர்களில் இவை பிரசுரமாகியுள்ளன.
எம்.ஏ. படிக்கும்போது, பேராசிரியர் மருதநாயகத்திடம் கதைகளை எழுதித்தருவேன். அவர் அதை விமர்சனம் செய்வார். ஒருமுறை ஒரு கதையைப் படித்துவிட்டு, கணையாழிக்கு அனுப்புமாறு கூறினார். நானும் அனுப்பினேன். அந்தக் கதை தேர்வு செய்யப்பட்டதாக, அப்போது கணையாழி ஆசிரியராக இருந்த அசோகமித்திரன் கடிதம் அனுப்பினார். மூன்று மாதம் கழித்து ‘நிகழ்வு’ என்ற தலைப்பில் அக்கதை கணையாழியில் பிரசுரமானது. தொடர்ந்து கணையாழி, தாமரைக்கு கதைகள் எழுதினேன். பிறகு சென்னை வந்து விட்டேன். அங்கே ஒரு நண்பர் மூலமாக ‘மனஓசை’ இதழ் அறிமுகமானது. அதில் மூன்று ஆண்டுகள் இருந்தேன். அப்போ பா.செயப்பிரகாசம் அதற்கு ஆசிரியர். அதில் கதைகள் மட்டுமல்ல, கட்டுரை, கவிதை என நிறைய எழுதினேன். அத்துடன் பாலம், தலம், சுபமங்களா, காலச்சுவடுன்னு எழுத ஆரம்பித்தேன்.
1996-ல் அரசுக் கல்லூரி விரிவுரையாளர் பணி கிடைத்தது. ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் அஞ்சு வருஷம், நாமக்கல் கல்லூரியில் பதினஞ்சு வருஷம், சென்னை மாநிலக் கல்லூரியில் ஒன்றரை வருஷம் பணியாற்றிய பின்னர், இப்ப மீண்டும் ஆத்தூர் கல்லூரியில் பணி" என்று கூறும் பெருமாள் முருகன் எழுதி வெளியிட்ட முதல் நூல் ‘ஏறுவெயில்’ நாவல். அதை பதிப்பிக்க பெரிய பதிப்பகங்கள் தயாராக இல்லாத நிலையில், ஒரு நண்பரே முன்னின்று வெளியிட்டிருக்கிறார். "தாத்தா காலத்தில் இருந்த 100 ஏக்கர் நிலத்தை ஹவுசிங் போர்டு எடுத்துக் கொண்டது. அதில் எங்கள் குடும்பமே இடம் பெயர்ந்தது, வாழ்வியல் சூழல் மாறியது பற்றிய கதைதான் அதற்கு களம்" என்று கூறும் பெருமாள் முருகன், கல்லூரிப் படிப்புக்கு பின்னரே எழுத வந்து, இதுவரை 40 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் 11 நாவல்கள். அவர் படைப்புகளில் அதிகமாக மிளிர்பவை கொங்கு மண் சார்ந்து நிற்கும், குறிப்பிட்ட சமூக மக்களின் அவலம் குறித்துத்தான். இவரது மூன்றாவது நாவலான ‘கூள மாதாரி’ ரொம்பவும் பேசப்பட்ட படைப்பு.
"கொங்கு மண்ணின் நிலமும், நிலம் சார்ந்த மக்களின் உழைப்புமான வாழ்க்கை, ஒவ்வொரு சமூகத்துக்கும் தொடர் சங்கிலியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதில், விவசாயக் கூலியாக அடியாழத்தில் கிடந்து அல்லாடுபவர், குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு மண் சார்ந்த நாவலில் உழைக்கும் மக்கள் நிறையும்போது, அதில் மிகுதியாக உள்ளவர்களுக்கான வலி என்பது வலிமையாக ஒலிப்பதுதானே. அதுதான் என் நாவலில் அவர்களுக்கான குரலாய் ஒலிக்கிறது" என்கிறார்.
அதேபோல, இவரது ‘மாதொருபாகன்’ நூலும் சர்ச்சைக்குள்ளானது. "அந்த நாவல் அவ்வளவு சர்ச்சைக்கும், சச்சரவுக்கும் உள்ளாகும் என்று தெரிந்திருந்தால் நான் எழுதியே இருக்க மாட்டேன். ஏனென்றால், தேவையில்லாத சர்ச்சைகளை துளியும் விரும்ப மாட்டேன். எனினும், அந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்பு வந்தபோது, வலிமையாகவே எதிர்த்தேன். எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் ஆதரவுகள் கிடைத்தன. சிலர் மாதொரு பாகன் நாவல்தான் எனக்கு அடையாளம் பெற்றுத்தந்ததாக கருதுகிறார்கள். ஆனால், அதற்கு முன்பே வாசிப்பு மற்றும் படைப்பு உலகம் என்னை அங்கீகரித்துள்ளது. மாதொரு பாகன் சாதாரண மக்களிடம் ஓர் அடையாளத்தை பெற்றுத் தந்துள்ளது" என்றார். பெருமாள் முருகனின் மாணவர்கள் 42 பேர், அவருடனான அனுபவத்தை எழுதி ‘எங்கள் ஐயா!’ என்ற தலைப்பில் புத்தகமாக்கியிருக்கிறார்கள். "மாதொரு பாகன் பிரச்சனையின்போது, பல மாணவர்கள் எனக்கும், என் வீட்டுக்கும் காவல் இருந்தார்கள். அவர்கள்தான் என்னைப் பற்றி கட்டுரைகள் எழுதி வந்து, வெளியிட அனுமதி கேட்டார்கள். அதை வாங்கிப் படித்துப் பார்த்த பின்னரே, அச்சிட அனுமதித்தேன்" என்று கூறும் பெருமாள்முருகன், விளக்கு விருது, கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது, கதா விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது, சிகேகே அறக்கட்டளை விருது, அமுதன் அடிகள் விருது, மணல் வீடு விருது, களம் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது, தேவமகள் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT