பிரதமர் மோடி, ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானிஸ் முன்னிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே குடியேற்ற ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சிட்னி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக கடந்த 22-ம் தேதி இரவு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் ஆகியோர் நேற்று தனியாக சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், தாதுப் பொருட்கள், கல்வி, குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் துறையினர் பயனடையும் வகையிலான குடியேற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க வகை செய்யும் இந்த ஒப்பந்தத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர். இதுதவிர, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இரு தலைவர்களும் மீண்டும் நினைவுகூர்ந்தனர். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பிரிஸ்பேன் நகரில் இந்திய துணைத் தூதரகம் நிறுவ ஆதரவு அளிக்கப்படும் என உறுதி அளித்த ஆஸ்திரேலிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

ஆஸ்திரேலியாவில் உள்ள கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மற்றும் பிரிவினைவாதிகளின் (காலிஸ்தான்) செயல்பாடுகள் குறித்து பிரதமர் அல்பானீஸுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தி உள்ளேன். இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நிலவும் சுமுக உறவை சீர்குலைக்க முயலும் சக்திகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பிரதமர் அல்பானீஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறும்போது, “இந்தியாவின் வளர்ந்துவரும் டிஜிட்டல் பொருளாதாரத்துடன் ஆஸ்திரேலிய வர்த்தகத்தை இணைக்கும் வகையில், பெங்களூருவில் புதிதாக ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் நிறுவப்படும். மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை உறுதிப்படுத்த குவாட் அமைப்பின் தலைவர்கள் இணைந்து செயல்படுவோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE