ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இந்தியர்களை வரவேற்ற ஓரிஹைம் ரோபோ

By செய்திப்பிரிவு

ஹிரோஷிமா: ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது ஓரிஹைம் என்ற ரோபோ, இந்தியாவை வாழ்த்தியதுடன் நமஸ்தே, ஜப்பானுக்கு வந்த உங்களை வரவேற்கிறோம் என தெரிவித்தது.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடைபெற்றது. ஆயுத பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் அணு ஆயுத பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் இந்த ஆண்டு ஜி7 மாநாட்டின் முக்கிய நோக்கம்.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா விடுத்த அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் மோடி கடந்த 19-ம் தேதி ஹிரோஷிமா சென்றடைந்தார். அணுகுண்டு தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்ட உலகின் முதல் நகரமான ஹிரோஷிமாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி இந்தப் பயணத்தின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

ஜப்பான் ஏற்கெனவே தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. இதை ஜி7 மாநாட்டில் பார்க்க முடிந்தது. அதாவது மாநாட்டின்போது சர்வதேச ஊடக மையத்தில் 'ஓரிஹைம்' என்ற ரோபோ நிறுத்தப்பட்டிருந்தது.

அனைவரது கவனத்தையும் ஈர்த்த இது, இந்தியாவை வாழ்த்தியதுடன் நமஸ்தே, ஜப்பானுக்கு வந்த உங்களை வரவேற்கிறோம் என தெரிவித்தது. வீடு அலுவலகங்களில் நான் வேலை செய்கிறேன் என்றும் அது தெரிவித்தது.

ஓரிஹைம் ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ரோபோ அல்ல. தனித்தனியாக பிரிந்திருக்கும் நபர்களை இணைப்பதுதான் இந்த சிரிய இயந்திரத்தின் வேலை. அந்த நபர் உங்களுடன் இருக்கிறார் என்ற உணர்வை ஓரிஹைம் ஏற்படுத்தும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE