ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி - 7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைன் போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போருக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஜப்பானின் ஹிரோஷிமாவில் சந்தித்துப் பேசி உள்ளனர்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி -7 அமைப்பின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, “உக்ரைன் போர் என்பது பொருளாதாரம், அரசியல் சார்ந்தது கிடையாது. இது மனிதகுல பிரச்சினை. போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும். என்னால் முடிந்த அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்வேன்’’ என்று உறுதி அளித்தார்.
» 'இந்தியாவும், நானும் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்' - உக்ரைன் அதிபரிடம் தெரிவித்த பிரதமர் மோடி
» ஜப்பானின் ஹிரோஷிமாவில் காந்தியின் மார்பளவு சிலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
மோடி- பைடன் சந்திப்பு: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பு ஆசியாவின் நேட்டோ என்றழைக்கப்படுகிறது. குவாட் அமைப்பின் கூட்டம்ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த கூட்டம் ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு மாற்றப்பட்டது.
இதன்படி ஹிரோஷிமாவில் நேற்று குவாட் அமைப்பின்கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, இந்திய பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது சர்வதேச அரங்கில் சீனாவின் அத்துமீறல்கள், ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தென்சீனக் கடலில் சுதந்திரமான போக்குவரத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “உலகத்தின் நன்மை, உலக மக்களின் நலன், வளம், அமைதிக்காக குவாட் அமைப்பு தொடர்ந்து பாடுபடும். அடுத்த ஆண்டில் இந்தியாவில் குவாட் கூட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, “உலகத்தை மாற்றும் வலிமை குவாட் அமைப்புக்கு உள்ளது. இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் பிராந்தியம் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்திலும் குவாட் அமைப்பால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கடந்த 2 ஆண்டுகளாக குவாட் நாடுகளின் ஒத்துழைப்பு மேம்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களும் சர்வதேச அரங்கில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
ஜி-7 மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். ஜி-7 அமைப்புக்கு ஜப்பானும் ஜி - 20 அமைப்புக்கு இந்தியாவும் தலைமையேற்றுள்ள நிலையில் இரு நாடுகளும் இணைந்து மிகச் சிறந்த உலகத்தை உருவாக்க மோடியும் கிஷிடோவும் உறுதி மேற்கொண்டனர்.
ஜி - 7 அமைப்பு சார்பில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “போர் நீடிக்கும் வரையில் உக்ரைனுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். நிதி, ராணுவ, மனிதாபிமான உதவிகள் தொடரும். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவை, சீனா வற்புறுத்த வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச அரங்கில்சீனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத் தப்படும் என்று அந்த நாட்டின் பெயரை குறிப்பிடாமல் ஜி - 7 மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு இருக்கிறது.
காந்தி சிலை திறப்பு: ஹிரோஷிமாவின் அணுகுண்டு நினைவு சின்னத்துக்கு அருகில் இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, “ஹிரோஷிமா என்ற பெயரைக் கேட்டாலே உலகம் அச்சத்தில் உறைகிறது. இந்த நகரில் மகாத்மா காந்தியின் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உலகம் முழுவதும் காந்தியின் அகிம்சை கொள்கை முன்னெடுத்து செல்ல வேண்டும். காந்தியின் அமைதி, ஒற்றுமை கொள்கைகள் இன்றளவும் லட்சக்கணக்கான மக்களுக்கு மன உறுதியை அளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago