அமேசான் காட்டில் சிக்கிக்கொண்ட 4 குழந்தைகள் 17 நாட்களுக்குப் பின்னர் மீட்பு: நடந்தது என்ன?

By செய்திப்பிரிவு

பகோடா: கொலம்பிய நாட்டில் அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானத்திலிருந்து உயிர் பிழைத்த 4 குழந்தைகள் வனப்பகுதிக்குள் காணாமல் போன நிலையில், அவர்கள் 17 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்தது என்ன? - கடந்த 1-ஆம் தேதி 3 பெரியவர்கள் 4 குழந்தைகள் சென்ற விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 பெரியவர்களும் உயிரிழந்துவிட, குழந்தைகள் காட்டுக்குள் திசை மாறிப் போயினர். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட விமானி இன்ஜின் கோளாறு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், அதன்பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, விமான நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று தேடுதல் வேட்டை தொடங்கியது.

இந்நிலையில், குழந்தைகளைத் தேடி கொலம்பிய அரசு 100 ராணுவ வீரர்கள், மோப்ப நாய்களைக் களமிறக்கியது. குழந்தைகளைப் பல நாட்களாகத் தேடி வந்த நிலையில், 17வது நாளில் கைக்குழந்தை உள்பட 3 குழந்தைகளைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, ”ராணுவ வீரர்கள் கடுமையான தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். குழந்தைகள் கிடைத்தது தேசத்திற்கே மகிழ்ச்சியான செய்தி” என்று ட்வீட் செய்திருந்தார்.

முன்னதாக, ராணுவ வீரர்கள் தங்கள் நீண்ட தேடுதல் வேட்டையின்போது ஓரிடத்தில் கொம்புகள், இலைகள் கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிக தங்குமிடத்தைக் கண்டனர். அதனைத் தொடர்ந்தே அவர்கள் தேடுதலைத் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், குழந்தைகள் மீட்கப்பட்டதாக கொலம்பிய அதிபர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குழந்தைகள் மீட்கப்பட்டதை இன்னும் ராணுவம் உறுதி செய்யவில்லை.

கொலம்பிய நாட்டின் எல் எஸ்பெக்டேடர் பத்திரிகை ராணுவம் உறுதி செய்யாவிட்டாலும் கூட குழந்தைகளுடன் ராணுவம் தொடர்பு கொண்டதாக அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்துக்கு சொந்தமான ஏவியன்லைன் சார்ட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், "குழந்தைகள் மீட்கப்பட்டுவிட்டனர். அவர்கள் ஆறு வழியாக படகில் அழைத்துவரப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கின்றனர் என்று எங்களது விமானி ஒருவர் தெரிவித்துள்ளார்" என்றார்.

இருப்பினும் அந்த நிறுவனமும், குழந்தைகள் முழுவதுமாக அபாயத்திலிருந்து மீண்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆற்றுவழிப் பயணத்தில் மின்னல் தாக்கும் அபாயங்கள் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ராணுவம் சில புகைப்படங்களை வெளியிட்டது. அதில் கத்தரிக்கோல், ஹேர் பேண்ட், குழந்தையின் பால் புட்டி ஆகியன இருந்தன. இதனை வைத்து காட்டுக்குள் காணாமல் போன குழந்தைகளின் வயது 13, 9, 4 மற்றும் 11 மாதங்களாக இருக்கலாம் என்று தெரிவித்தது. மே 1 ஆம் தேதி விபத்து நடந்த நிலையில் உயிர்பிழைத்த குழந்தைகள் காட்டுக்குள் தவறுதலாக வழிமாறி போயினர்.

3 சடலங்கள் கண்டுபிடிப்பு: திங்கள், செவ்வாய் கிழமைகளில் பைலட் மற்றும் இரண்டு பெரியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்கள் சான் ஜோஸ் டெல் குவாவியார் பகுதிக்கு காட்டுப் பகுதியில் இருந்து பயணப்பட்டபோது விபத்து நடந்துள்ளது. அமேசான் வனப்பகுதிகளில் இதுபோன்ற சிறிய ரக விமானப் பயணங்கள் சகஜமானதே என்று கூறப்படுகிறது. சாலை போக்குவரத்து இல்லாததாலும் படகுப் போக்குவரத்து ஆபத்து நிறைந்தது என்பதாலும் இதுபோன்ற பயணங்களை மக்கள் மேற்கொள்வர் என்றும் காரணம் கூறப்படுகிறது..

உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண். அவருடைய பெயர் ரனோக் முக்குடுய் என்பதும், அவர்தான் காணாமல் போன 4 குழந்தைகளின் தாய் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் ஹுய்டோடோ இனத்தைச் சேர்ந்தவராவார்.

மீட்புப் பணியின் போது குழந்தைகளின் பாட்டியை ஹுய்டோடோ மொழியில் பேசவைத்து பதிவு செய்யப்பட்ட ரெக்கார்ட் ஒலிக்கப்பட்டது. அந்த ஒலிப்பதிவில் பாட்டி அவருடைய மொழியில் குழந்தைகளிடம், ‘நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் முன்னேறிச் செல்ல வேண்டாம். உங்களை மீட்க உதவிக்குழுவினர் வந்துள்ளனர். இந்த ஒலி கேட்டால் பதில் ஒலி கொடுங்கள்’ என்று கூறுகிறார்.

அமேசானில் ஒவ்வொரு மரமும் சுமார் 40 அடி வரை உயரமாக வளர்ந்திருக்கும். இதனால் அந்த வனம் அடர்வனமாகத் திகழும். இதன் ஊடே கனமழை மற்றும் கொடிய விலங்குகளின் நடமாட்டமும் தேடுதல் வேட்டையை கடினமாக்கியது. இந்த தேடுதல் வேட்டைக்கு ராணுவம் ‘ஆபரேஷன் ஹோப்’ என்று பெயரிட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்